அடிமை வாழ்வு
கதையும் படமும்
-மு.கலைவாணன்
அழகான காட்டுப் பகுதி, யானைகளைச் சுமந்திருந்த லாரிகள், ஒன்றின் பின் ஒன்றாக வந்து நின்றன.
லாரிகளிலிருந்து அவற்றை இறக்க, வனத்துறையைச் சேர்ந்தவர்களும், பாகன்களும் மிகுந்த சிரமப்பட்டுக் கொண்டிருந்தார்கள்.
யானைகள் – பல கோயில்களில் இருந்து ஓய்வுக்காக அந்தக் காட்டுப் பகுதிக்கு அழைத்து வரப்பட்டிருந்தன.
மருத்துவ வசதியோடு – வேளாவேளைக்கு உணவு வழங்கி, அக்கறையாய்க் கவனித்துக் கொண்டார்கள்.
யானைகளின் சிறப்பு முகாமுக்குப் பக்கத்திலே – காடுகளிலே அறுக்கப்படும் பெரிய பெரிய மரங்களை இழுத்துச் செல்லவும், தூக்கி அடுக்கவும், பழக்கப் படுத்தப்பட்ட உழைக்கும் யானைகள் சில இருந்தன.
அந்த இடத்திலிருந்து சிறப்பு முகாமுக்கு வந்திருக்கும் யானைகளின் பிளிறல் சத்தம் கேட்டு, மரம் இழுக்கும் யானை ஒன்று சிறப்பு முகாமுக்கு அருகில் வந்து நின்றது.
சிறப்பு முகாமில் இருந்த கோயில் யானை, “யார் நீ? எந்த ஊரிலிருந்து வருகிறாய்” என்று கேட்டது.
“நானா? இதே ஊர்தான், நம் இனக் குரல் கேட்கவும், இங்கே வந்து பார்த்தேன்… ஆமாம், நிங்கள் எல்லாம் எதற்காக இங்கே வந்திருக்கிறீர்கள்?” என்று கேட்டது. உழைக்கும் யானை.
“நாங்களா? ஓய்வுக்காக வந்திருக்கிறோம்!” என்றது கோயில் யானை.
“ஓகோ! ஓய்வுக்கா?… ஆமாம், நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள்?” என்று கேட்டது, உழைக்கும் யானை.
“வேலையா? அப்படி என்றால் என்ன?” புரியாமல் கேட்டது கோயில் யானை.
“வேலை என்றால் என்னவென்றே தெரியாதா? சரி… நீங்களெல்லாம் எங்கிருந்து வந்திருக்கிறீர்கள்?”
“நாங்கள் கோயில் யானைகள். பல கோயில்களில் இருந்து வந்திருக்கிறோம்.”
“ஓ… அதனால்தான் வேலை என்றால் என்ன என்று கேட்டாயா? ஆமாம், கோயிலில் நீங்கள் என்ன செய்வீர்கள்?”
“நாங்கள் கோயில் வாசலில் அலங்காரத்துடன் நிறுத்த்தப் படுவோம். வந்து போகும் பக்தர்கள் தலையில் தும்பிக்கையை வைத்து ஆசீர்வாதம் செய்வோம். பக்தர்கள் தரும் காசை வாங்கி, எங்கள் மேல் அமர்ந்திருக்கும் பாகனிடம் தருவோம். ஆமாம் இதை எல்லாம் எதற்காகக் கேட்கிறாய்?”
“உன்னைப் பற்றித் தெரிந்து கொள்ளத்தான். அலங்காரமாக நிற்பது, ஆசீர்வாதம் செய்வது, பக்தனின் தலையில் துதிக்கை வைத்து _- வாங்கும் பணத்தைப் பாகனிடம் தருவது… இதுதான் உன் வேலை.
இந்த வேலை செய்கிற உனக்கு ஓய்வு! அடடா! மனிதர்களும் மிருகங்களின் மேல் எவ்வளவு அன்பு காட்டுகிறார்கள்! நீ சொன்னதைக் கேட்கும் போதே மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆனால்…” என இழுத்தது உழைக்கும் யானை.
உடனே கோயில் யானை, “என்ன… ஆனால்?” என வினவியது.
“கனத்த காட்டு மரங்களை இழுத்துச் செல்வது, எளிதில் தூக்க முடியாத பெரிய பெரிய மரங்களைத் தும்பிக்கையால் எடுத்து அடுக்கி வைப்பது போன்ற கடினமான வேலை செய்யும் எங்களுக்கு எப்போது இப்படி ஓய்வு கிடைக்கும் என்று எண்ணினேன். அதனால்தான்…”
“என்ன செய்ய? கோயிலுக்கு என்னைப் பழக்கிய அதே மனிதன்தான் மரம் சுமக்க உன்னையும் பழக்கியிருக்கிறான். குழிதோண்டி நம்மைப் பிடித்து, பழிவாங்கி இருக்கிறார்களே, இந்த மனிதர்கள்!…” என வருந்தியது கோயில் யானை.
“மனிதர்கள் மட்டும் என்னவாம்?… உல்லாசமாகச் சிலபேர்… அவர்களுக்காக உழைப்பவர் பலபேர் _- இப்படி ஏற்றத் தாழ்வோடுதானே இருக்கிறார்கள்?” என்று சொன்னது உழைக்கும் யானை.
“நாம் இருந்தாலும் ஆயிரம் பொன் _- இறந்தாலும் ஆயிரம் பொன்னுன்னு பேசிக்கிறாங்களே!” என்றது கோயில் யானை.
“அது என்னமோ உண்மைதான்… நம்ம வால் முடியிலே கூட வளையம் செய்து மாட்டிக்கிற மனிதனுக்கு நாம உயிரோடு இருக்கிறவரை உழைப்பினாலே லாபம். உயிரை விட்டுட்டா, உடம்பினாலே லாபம்! மனிதன் மற்றொரு மனிதனை ஏமாற்ற நம்மைப் போன்ற மிருகங்களைப் பயன்படுத்திக் கொள்கிறான்.
அது தெரியாம நாம ஏமாந்து போறோம். எத்தனை பலம் பொருந்திய உடலும் உருவமும் நமக்கு இருந்து என்ன? எதிர்த்துக் கேட்க முடியாத அடிமையாக இருக்கும்வரை, இப்படித்தான் இருக்க வேண்டும்! தும்பிக்கை வளர்ந்திருக்கிறது… ஆனால், அதனால் என்ன பயன் _- நம்பிக்கை இல்லாத வாழ்க்கையிலே?…” என வருத்தப்பட்டபடி புறப்பட்டது உழைக்கும் யானை.