சும்மா மொக்க போடாதீங்க
தனியார் பள்ளி ஒன்றில்…
சரஸ்வதி ஆசிரியர் அறிவியல் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். அதில் சூரிய குடும்பம் பற்றியும், கிரகங்கள், நட்சத்திரங்கள் பற்றியும், பிரபஞ்சத்தின் தோற்றம் ஆகியவைகளைப் பற்றி தொட்டுக்காட்டிப் பேசினார். அந்த வகுப்பிலிருக்கும் மாணவன் அன்புக்கு இயல்பாகவே கேள்வி கேட்கும் குணம் உண்டு.
யாரிடம் கேட்கிறோம் என்பது பற்றி அவன் என்றைக்கும் எண்ணிப் பார்த்ததேயில்லை. இப்போதும் சட்டென்று எழுந்து “நட்சத்திரங்கள் பிறக்கின்றன என்று சொன்னீர்கள். அவைகள் எப்படி இறக்கின்றன?’’ _ என்று கேட்டுவிட்டான். ஆனால், ஆசிரியரின் நிலைதான் திண்டாட்டமாகப் போய்விட்டது. ஏனென்றால், அவன் கேள்விக்கான பதில் அந்தப் பாடப் புத்தகத்தில் இல்லை.
இந்த சங்கடம் இரண்டு மணித்துளிகள் நீடித்திருக்கும் அவ்வளவுதான். அதற்குள் வாசலில் பரபரப்பான காலடி ஓசைகள் கேட்டது. ஆசிரியர் பரபரப்பாக வெளியில் சென்று; அதைவிட பரபரப்பாக உள்ளே வந்தார். அவரைத் தொடர்ந்து பள்ளியின் தலைமையாசிரியருடன் புதிதாக _ அறிமுகமில்லாத ஒருவரும் உள்ளே வந்தார்.
மாணவர்கள் அனிச்சையாக எழுந்து “வணக்கம் சார்’’ _ என்று ராகம் பாடினர். அவர் தலையசைப்பில் வணக்கம் சொல்லி, கையசைப்பில் அனைவரையும் அமரச் சொன்னார். பிறகு, மாணவர்களைப் பார்த்து, “என்ன வகுப்பு இது?’’ என்றதும், மீண்டும், “அறிவியல் சார்’’ _ என்ற ராகம் ஒன்றுபோல எழுந்து அடங்கியது.
“சரி, யாராவது எழுந்து உங்க ஆசிரியர் சொல்லிக் கொடுத்ததில் ஏதாவது ஒன்றைச் சொல்ல முடியுமா?’’ _ என்று கேட்டார். சற்று நேரம் ஓசையற்றுப் போனது. மாணவர்களுக்குள் யார் எழுவது? என்ன சொல்வது? என்று ஒருவரையொருவர் பரபரப்புடன் பார்த்துக் கொண்டிருந்தனர். சட்டென்று அன்பு எழுந்தான். வகுப்பாசிரியருக்கு திக்கென்று இருந்தது. இவன் என்ன சொல்லித் தொலைக்கப் போகிறானோ என்று.
அவன் சொல்லவில்லை. கேட்டான்.
“இந்தப் பாடத்தில இல்லாததுலருந்து ஏதாவது கேள்வி கேட்கலாமா சார்? தலைமையாசிரியரும், வகுப்பாசிரியரும் திடுக்கிட, ஏதாவது சொல்வான் என்றிருந்தால் கேட்கிறானே என்று ஆச்சர்யத்துடன், கல்வியதிகாரி புன்னகைத்த-வாறே தோள்களைக் குலுக்கிக்கொண்டு, “தாராளமா கேளுப்பா’’ _ என்றார்.
“நட்சத்திரங்கள் பிறக்கின்றன என்றும், இறக்கின்றன என்றும் தெரிந்து கொண்டேன். அவை எப்படி இறக்கின்றன என்பது தெரியவேண்டுமென ஆவலாக இருக்கிறது சார்’’ _ என்றான்.
வெளிப்படையாக சிரித்துக்கொண்டே பேசினார். “நட்சத்திரங்களின் ஆயுள், அவற்றின் நிறை, வெப்ப ஆற்றல் இவற்றுடன் தொடர்புடையது. நடுத்தர அளவுடைய நட்சத்திரங்கள் _ நமது சூரியன் போன்றவை ஆயிரம் கோடி ஆண்டுகள் வாழ்கின்றன. இந்த காலகட்டத்தில் அதன் மய்யத்திலிருந்து ஹைட்ரஜன் முழுவதும் தீர்ந்து ஹீலியமாக மாறுகிறது. ஹீலியம் அணுக்கருக்கள் ஒன்றிணைந்து கார்பன், ஆக்சிஜன் இரண்டும் உருவாகின்றன.
இது ஒரு புதிய அணுக்கரு வினை. இதனால் பெரும் வெப்பம் ஏற்பட்டு, நட்சத்திரம் விரிவடைகிறது. அப்படி விரிவடையும்போது அந்த நட்சத்திரம் புதன், வெள்ளி கிரகங்களின் சுழற்சிப் பாதையை நெருங்கிவிடும். அதற்குள் பூமிக்குள்ளிருக்கும் அனைத்தும் ஆவியாகிவிடும்’’ _ என்று சொல்லி சற்றே நிறுத்திவிட்டு, அனைவரையும் நோட்டமிட்டார். குண்டூசி போட்டால்கூட அதன் ஓசை கேட்கும் அளவுக்கு அமைதியாக இருந்தது.
அவர் தொடர்ந்தார்…
“நட்சத்திரங்களின் ஹீலியம் இருப்பு முழுமையாக தீர்ந்த பிறகு, சூரியனின் மய்ய வெப்பம் குறைந்து மீண்டும் நட்சத்திரம் சுருங்குகிறது. அது குறைவாக ஒளியை வீசும். பிறகு மெல்ல மெல்ல தேய்ந்து மங்கும். இறுதியாக விண்ணில் அடர்ந்த கருமையான கோளமாக வானில் இருக்கும். அவ்வளவுதான். இதைத்தான் நட்சத்திர இறப்பு என்கிறோம்’’ _ என்று முடித்தார்.
இந்த விளக்கத்தை யாரும் எதிர்பார்க்கவில்லை. அன்புவுக்கு மிகுந்த மனநிறைவு ஏற்பட்டுவிட, ஏனோ என்னவென்று தெரியாத உணர்வுடன் வேகமாகச் சென்று அந்த கல்வி அதிகாரியின் அருகில் சென்று அண்ணாந்து பார்த்து, “இதை நான் எதிர்பார்க்கவேயில்லை. மிக்க நன்றி சார்’’ _ என்றான்.
அவர் புன்னகைத்தபடி குனிந்து, “உன் பெயர் என்ன? என்றார்.
“அன்பு சார்’’
“Do you know, who am I?’’
“தெரியாது சார்’’ என்று சொல்லிவிட்டு who am I- யா என்று நொடிப்பொழுது யோசித்துவிட்டு, பொறிதட்டியது போல, ‘பெரியார் பிஞ்சில்…’ என்று நினைத்து, உற்சாகமாக ‘ஹூவாமை’-யா சார் என்று கேட்டே விட்டான். அவரோ -”ச்சே… ச்சே… இப்படியெல்லாம் கிறுக்குத்தனமா யாராவது பேரு வச்சுப்பாங்களா. என் பெயர் தமிழ்ச்செல்வன்” என்று சொல்லி, அன்புவை நன்றாகக் கட்டித் தழுவிவிட்டு, மின்னல் வேகத்தில் வெளியேறி, அடுத்த வகுப்புக்குச் சென்றுவிட்டார்.