பொறியியல் கல்வியை எளிமையாக்கிட காணொளியில் விள(கல)க்கும் இளைஞர்
பொறியியல் கல்வியை எளிமையாக்கிட காணொளியில் விள(கல)க்கும் இளைஞர்
முகநூல், ட்விட்டர், யூடியூப் போன்ற சமூகவலைதளங்கள் இன்று மிகப்பெரிய மாற்று ஊடகமாக நம் முன்னே வளர்ந்து நிற்கின்றன. அச்சு ஊடகங்கள், வானொலி, தொலைக்காட்சிகள், திரைப்படம் போன்ற ஊடகங்கள் அனைத்தும் இனி சமூக வலைதளங்களை சார்ந்தே இயங்க வேண்டிய ஒரு காலத்தை கிட்டத்தட்ட அடைந்தே-விட்டோம் எனலாம்.
சமூகவலைதளங்கள் என்பவையும், நாள்தோறும் புதிய புதிய மாற்றங்களுக்கும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கும் உள்ளாகி வருகின்றன என்றபோதிலும், இந்திய/ தமிழக சூழலில் அதன் உள்ளடக்கம் என்பவை பழமைவாதமும் பிற்போக்குத்தனமும் நிரம்பியதாக இருப்பதை நாம் மறுக்க முடியாது.
சினிமாவும், அரசியலும் சார்ந்த கருத்துக்-களும் பதிவுகளுமே இந்த ஊடகங்களில் அதிக பெரும்பான்மையான இடத்தை ஆக்கிரமித்திருக்-கிறது. பொழுதுபோக்கு, கேளிக்கை, விளம்பரம் மற்றும் பல சமூக சீரழிவு செயல்பாடுகள், என்று சமூகவளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் நேரெதிர் திசையில் இந்த சமூக ஊடகங்கள் பயணிக்கின்றனவோ என்று நாம் அச்சப்பட வேண்டியிருக்கிறது.
இன்றைய இளைய தலைமுறையினர் தங்களுடைய பெரும்-பான்மையான நேரத்தை இத்தகைய வலைதளங்களில் வீணாக செலவளிக்கும் கவலைக்குரிய போக்கும் நிலவுகிறது.
இந்த சூழ்நிலையில், சிலர் தனிநபர்களாகவும் குழுவாகவும் மேற்கொள்ளும் ஆக்கப்பூர்வமான சில முயற்சிகள் நமக்கு ஆங்காங்கே நம்பிக்கை அளிக்கின்றன. அதில் ஒருவர்தான் இராமநாதபுரத்தை சேர்ந்த பிரேமானந்த் சேதுராஜன் என்கிற இளைஞர்.
இராமநாதபுரம் செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரியில், மின்னனுவியல் மற்றும் தொடர்பியல் துறையில் (Electronics and communication), இளங்கலை பொறியியல் (B.E) பட்டப்படிப்பு முடித்துவிட்டு தற்போது அமெரிக்காவில், விமானத்திற்கான தொழில்நுட்பப் பிரிவில் மென்பொருள் பொறியாளராக பணிபுரிந்து வருகிறார் பிரேம்.
திரைப்படக் காட்சிகளும், திரைப்படம் சார்ந்த பதிவுகளுமே அதிக அளவில் நிரம்பியிருக்கும் யூடியூப் (www.youtube.com) வலைதளத்தை, அறிவியல் கருத்துக்களை எளிமையாகக் கற்பிக்கும் ஊடகமாக பயன்படுத்தும் வேலையைத்தான் பிரேம் முன்னெடுத்திருக்கிறார். கல்விக் காணொளிகள் (Educational Videos) என்கிற வடிவம் அல்லது எண்ணம் புதியது என்று நாம் சொல்ல முடியாது.
ஆனால் காட்சி ஊடக நுட்பங்களைப் பயன்படுத்தி, சுவாரசியமாகவும், கடினமான கருத்துகளையும் எளிமையாகப் புரியவைக்கும் கல்வி முயற்சிகள் தமிழில் அதிகம் செய்யப்படவில்லை. அத்தகைய ஒரு பணியைத் தான், பிரேம் தன்னுடைய Lets make engineering simple (பொறியியல் கல்வியை எளிமையாக்குவோம்) என்கிற தன்னுடைய யூடியூப் பக்கத்தின் (youtube channel) மூலமாக கடந்த ஓராண்டாக செய்து வருகிறார்.
இதுவரை இருபதுக்கும் பேற்பட்ட காணொளிப் பதிவுகளை உருவாக்கி வெளியிட்டிருக்கிறார்.
இயற்பியலில் பெர்னோல்லியின் கொள்கை (Bernouli’s principle) என்றால் என்ன, நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களில் அது எப்படி செயல்படுகிறது என்பதை எளிமையான எடுத்துக்காட்டுடன் விளக்கியது அவருடைய முதல் பதிவு.
கால இயந்திரம் (Time machine) என்பது சாத்தியமா, அதைக் கொண்டு கடந்த காலத்திற்கு பயணிக்கமுடியுமா என்பதை சார்பியல் கோட்பாட்டின் (Relativity theory) அடிப்படையில் அடுத்தடுத்த பதிவுகளில் விளக்குகிறார். தொடர்ந்து எண்கணித (Calculus) கோட்பாடுகளை அதன் நடைமுறைப் பயன்பாடுகளை விளக்குகிறார்.
ஈர்ப்புவிசை (Gravity) என்றால் என்ன அது எப்படி செயல்படுகிறது, நிலாவின் ஈர்ப்பு விசையை ஏன் நாம் உணர்வதில்லை, எப்படி துணைக்கோள்கள் அதன் சுற்றுப்பாதையில் இருந்து விலகாமல் பயணிக்கின்றன என்பதற்கு விளக்கம் தருகிறார். எலுமிச்சை பழத்தைக் கொண்டு எப்படி சிறிய அளவிலான மின்சாரத்தை உற்பத்தி செய்வது என்கிற செயல்முறை விளக்கமும் அதற்கு பின்னால் உள்ள அறிவியலை அவர் விளக்கும் முறையும் அருமை.
கடினமாக அறிவியல் மற்றும் கணிதக் கோட்பாடுகளையும் அதன் பொறியியல் பயன்பாடுகளையும் எளிமையாக நடைமுறை எடுத்துக்காட்டுகளைக் கொண்டு விளக்குவதுதான் பிரேமின் தனிச்சிறப்பு. அறிவியலையும் கணிதத்தையும் எப்படி கற்பிக்கவேண்டும், எப்படி கற்பித்தால் அவை மாணவர்களுக்கு சுமையாக இல்லாமல் சுவையாக மாறும் என்பதை பிரேமின் காணொளிப் பதிவுகள் நமக்கு கற்பிக்கின்றன.
மக்களிடைய அறிவியல் மனப்பான்மையை வளர்க்கவும், மாணவர்களிடையே அறிவியல் கணித பாடங்களின் மீது ஆர்வத்தை தூண்டவும், பொறியியல் கல்வியை எளிமையாக்கவும் பின்பற்றவேண்டிய உத்திகளும் நுட்பங்களும் என்ன என்பதை நாம் பிரேமிடம் கற்றுக் கொள்ள வேண்டும்.
இன்னும் பலரும் இதுபோன்ற முயற்சிகளில் ஈடுபட வேண்டும், பரவலாக இவை பயன்படுத்திக் கொள்ளப்பட வேண்டும் என்பதுதான் பிரேமின் விருப்பம். அவருடைய முயற்சி பாராட்டுக்குரியது.
– பிரபா அழகர்