தொ(ல்)லைக்காட்சி: கியூபாவுடன் ஓர் ஒப்பந்தம்
தொலைக்காட்சி வீட்டில் பலநேரம் தொல்லைக்காட்சியாகவே ஆகிவிடுகிறது. ஒட்டுமொத்தமாக தொலைக்காட்சியே பார்க்கக் கூடாது என்று குழந்தைகளைக் கட்டுப்படுத்தி விடவும் முடியாது. அது ஏதேனும் வேறு விளைவுகளை உருவாக்கலாம்.
குழந்தைகளுக் காக குடும்பத்தில் உள்ளவர்களும் பார்க்காமல் இருக்கவேண்டுமா என்று யோசித்தால், குழந்தைகளை விட பெரியவர்கள் தான் தொலைக்காட்சியின் பிடியிலிருந்து விடுபட வேண்டியவர்களாக இருக்கிறார்கள். எனவே இரு தரப்பும் ஓர் ஒப்பந்தத்திற்குள் வரவேண்டிய தாயிருக்கிறது.
அதை வெறுமனே சொல்லளவில் வைக்காமல் செயலளவில் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தியிருக்கிறார்கள் திருச்சி கியூபாவும் அவரது பெற்றோர்களான புனிதா – வி.சி.வில்வம் இணையரும்! இதோ அவர்களுடன் நாம் பேசியதிலிருந்து…
வீட்டில் தொலைக்காட்சி இல்லையா?
இருக்கிறது. பயன்படுத்துவதில்லை.
காரணம்?
தொலைக்காட்சிப் பார்ப்பது பார்வைக்கும், சிந்தனைக்கும் கேடு. எனவே ஒரு மாதத்திற்குக் ‘கேபிள்’ இணைப்பைத் துண்டிக்கலாம் என 9 வயது மகளுடன் ஒப்பந்தம் பேசினோம். ஒரு மாத ஒப்பந்தம் 5 மாதங்களாக நீட்டித்து வருகிறது. குழந்தைகளை மதித்தும், கேட்டும் செய்தால் எல்லாம் சாத்தியமாகிறது.
அதன்பிறகு?
‘எனக்கான பொழுது போக்கு என்ன?’ எனக் கேட்டார் கியூபா. விளையாட்டுகளை அறிமுகம் செய்தோம். நாங்களும் சேர்ந்து விளையாடி னோம். நிறைய வெளியில் சென்றோம். புது இடங்களை நோக்கி பயணித்தோம்.
என்ன விளையாட்டுகள்?
நொண்டி அடித்தல், ஸ்கிப்பிங், கேரம் போர்டு, பல்லாங்குழி, தாயம், ஓடிப் பிடித்தல் எனப் பலவகை. இது தவிர கராத்தே, நடனம், சதுரங்கம், ஓவியம் என அது ஒருவகை. தினமும் ஒரு மணி நேரம் வீதியில் விளையாட வேண்டும் என்பது எங்கள் கட்டாய கோரிக்கை.
தொலைக்காட்சியில் நல்ல விசயங்கள் இருக்கிறதே?
கண்டிப்பாக இருக்கிறது. நாளையே கியூபா தொலைக்காட்சி பார்க்க விரும்பினால் சாத்தியம்.
இந்த ஒப்பந்த எண்ணம் எப்படி தோன்றியது?
கியூபாவுக்குப் பார்வைக் குறைபாடு இருப்பதை இரண்டு வயதில் அறிந்தோம். அன்று முதல் கண்ணாடி அணிகிறார். பார்வைக் குறைபாட்டைக் குறைக்க எளிய பயிற்சிகளும், உணவுகளும் உள்ளன. ஆனால் குழந்தையாக இருப்பதால் அதில் சிரமம் இருந்தது.
பார்வைக் குறைபாட்டைக் குறைக்க முடியாவிட்டாலும், அது அதிகரிக்காமல் இருக்க முயற்சி செய்யலாம் என்பதன் விளைவே இந்த ஒப்பந்தம். அதேநேரம் தொலைக்காட்சியில் அறிவியல் நிகழ்ச்சிகள், பொது அறிவுச் செய்திகள் ஒளிபரப்பினாலும், குழந்தைகள் திரைப்படம் தொடர்பான நிகழ்ச்சிகளையே பல மணி நேரங்கள் பார்க்கின்றன. பெரியவர்களும் நாடகத் தொடர்களைப் பார்த்து, சோர்ந்து காணப்படுகின்றனர்.
எனவே குழந்தை கியூபா, கியூபாவின் பெற்றோராகிய நாங்கள், கியூபாவின் தாத்தா-பாட்டி அனைவரும் சேர்ந்து எடுத்த முடிவே இது.
குழந்தை எளிதாகப் புரிந்து கொண்டதா?
சிறு வயதில் இருந்தே கியூபாவைக் கேட்காமல் அல்லது அவரிடம் சொல்லாமல் எதையும் செய்வது கிடையாது. இரண்டு நாள் வெளியூர் பயணம் என்றால், முதல் நாளே எங்கு போகிறோம்? எங்கு தங்குவோம்? யாரைச் சந்திக்கிறோம்? எப்பொழுது திரும்புவோம்? என விவரம் சொல்லிவிடுவோம்.
குழந்தையின் மூளையில் செய்திகள் பதிவாகி, தயாராகிவிடும். பயணங்களில் எந்தச் சிரமும் இருக்காது. கியூபா சில தனித்திறன் வகுப்புகளுக்குச் செல்கிறார். “நான் இன்று ஓவிய வகுப்புக்குச் செல்லவில்லை”, என்றால், அன்று ஓவிய வகுப்புக்கு விடுமுறை. அதேபோல, “பள்ளிக் கூடம் போகவில்லை, வீட்டிலே இருக்கிறேன்”, என்றாலும் அன்று பள்ளிக்கு விடுமுறை.
இவற்றைப் பயன்படுத்தி பள்ளிக்கு அவர் விடுமுறை எடுப்பது அதிகபட்சம் ஆண்டுக்கு இரண்டு நாட்கள். ஆக, எந்தச் செய்தியாக இருந்தாலும் நம்மிடம் மதித்துச் சொல்கிறார்கள், நம்மிடம் அனுமதி கேட்கிறார்கள் என்கிற சிந்தனையின் விளைவு, ஒப்பந்தங்கள் எளிதாக கையெழுத்தாகிறது.
முற்றிலும் தொலைக்காட்சியைப் புறக்கணி யுங்கள் என்று நாம் பரிந்துரைக்காவிட்டாலும், அதன் நேரத்தைக் குறைத்தால் வேறு என்னவெல்லாம் பயன் என்பதை அனுபவித் தவர்கள் சொன்னதைத் தான் நாம் கேட்டோம்.
இது எல்லோருக்கும் பொதுவான முறையல்ல… ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒவ்வொரு பிஞ்சுக்கும் ஒவ்வொரு முறை! அவரவர்க்கேற்ற வழியை அவரவரே தேர்ந்தெடுங்கள். நேரத்தை சரியாகப் பயன்படுத்தி குடும்பத்திற்கும், சமூகத்திற்கும் பயனுள்ள வழியில் செலவிடுங்கள்.
– சமன்