கடந்து போன எதிர்காலம்
இன்றைய வாழ்க்கையில் நேற்று நடப்பதைக் கூட மறக்க வேண்டிய சூழலுக்கு ஆளாகிறோம். இதில் நாளை என்ன நடக்கப்போகிறது என்பதை யூகிக்க முடியுமா..? சில மதங்களில் தோன்றும் மதபோதகர்கள் அல்லது மதவாதிகள், மந்திரவாதிகள், தாங்கள் யூகித்துச் சொல்வதாக மக்களை நம்ப வைத்து கொண்டு இருக்கிறார்கள்.
இத்தனையாவது ஆண்டில் உலகம் அழிந்துவிடும். இந்த தேதியில் பூகம்பம் வரும், புயல் அடித்து மக்கள் சாவார்கள் என்று சொல்லித்தான் நம்மை ஏமாற்றிக் கொண்டுயிருக்கிறார்கள். அது தெரியாமல் சிலர் சொத்துக்களை எல்லாம் விற்று நன்றாக செலவழித்து வாழ்க்கையை மகிழ்வாகக் கொண்டாடுவோம் என்ற முட்டாள் தனமாகச் செய்துவிட்டு, பின்பு வருத்தப்பட்டுக் கொண்டிருப்பார்கள்.
சாமி, ஜோசியம், மதபோதகம், மந்திரவாதிகள், நாடி ஜோசியம் என்று இன்னொரு நபருடன் பகிர்ந்துகொண்ட நம் வாழ்க்கைக் கதையை (நம்மிடமே விசயத்தை வாங்கி) மிகைப்படுத்தி நல்லதாகவோ, கெட்டதாகவோ கூறி சொல்லி பணம் பறிப்பவர்களை நம்பி மகிழ்வான வாழ்க்கையை இழக்கிறார்கள் பலர்.
இவர்கள் ஒருபுறம் இருக்கட்டும். அறிவியல் சிந்தனையாளர்களும், வருங்காலத்தில் உலகம் இப்படி மாறக்கூடும் என்று சொல்லியிருக்-கிறார்கள். அவர்கள் சொல்வது வெறும் ஊகத்தினாலல்ல..
நம் பெரியார் தாத்தா கூட வருங்கால உலகம் எப்படி இருக்கும் என்று சொல்லும்போது, மனிதனின் வளர்ச்சியையும் சிந்தனையையும் தன்னுடைய தேவையை நிறைவு செய்துகொள்ள உழைக்கும் மனநிலையையும் வைத்துத் தான் இனி வரும் உலகம் நூலில் செய்திகளைச் சொல்லுவார்.
அறிவியல் சிந்தனையுடன் கொஞ்சம் கற்பனையையும் கலந்து கதை எழுதுபவர்கள், அறிவியல் வளர்ச்சி எப்படியெல்லாம் போகும் என்பதையும் சிந்தித்து தான் படைப்புகளை எழுதுவார்கள். அவர்கள் சொன்ன காலத்தில் அதே மாதிரி அவை நடக்காவிட்டாலும், கொஞ்சம் அதை நோக்கிய பயணமோ, அல்லது அவர்களின் கற்பனையையும் மிஞ்சிய பயணமோ நிச்சயம் நிகழ்ந்திருக்கும்.
அப்படித்தான் இப்போது ஓர் அனுபவம் உலகம் முழுக்க வாழும் திரைப்பட ரசிகர்களுக்குக் கிடைத்தது. 1985 ஆம் ஆண்டில் ஜெமிகிக்ஸ் இயக்கி, ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் தயாரித்து வெளிவந்த “Back to the Future” என்ற திரைப்படத்தில் கால இயந்திரத்தில் (Time Machine) பயணித்து கடந்த காலத்துக்கும் எதிர்காலத்துக்கும் செல்வது போன்ற காட்சியமைப்பு இருக்கும். அப்படி எதிர்-காலத்துக்குப் பயணிப்பதாக அவர்கள் காட்டும் நாள் 2015 அக்டோபர் 21. அட, ஏதோ நெருக்கமாக இருப்பது போல் தெரிகிறதா? இப்போது தான் கடந்து போயிற்றே!
காலப் பயணம் என்பதும், ஒரு காரில் ஏறி கடந்த காலத்துக்கும், எதிர்காலத்துக்கும் போவது என்பதும் சாத்தியமில்லை என்றாலும்,
படம் வெளிவந்த 1985 முதல் 1989 வரையிலான காலத்தில் 2015 எப்படியிருக்கும் என்ற கற்பனையில் இந்தப் படத்தின் காட்சிகள் வடிவமைக்கப்பட்டிருந்தன. பறக்கும் கார், பறக்கும் பலகை (Hover Board), முகம் பார்த்துப் பேசும் தொலைப்பேசி என்று பல புதுமைகள் வரலாம் என்று கணித்திருப்பார்கள்.
அவற்றில் சிலவற்றை நாம் எப்போதோ அடைந்து-விட்டோம். பறக்கும் கார், பறக்கும் பலகை எல்லாம் இன்னும் பெரிய அளவில் வந்துவிடவில்லை தான். ஆனால், அதற்கான முயற்சிகள் பெருமளவில் நடந்து-கொண்டிருக்கின்றன.
சரி, இப்படி வருங்காலத்தில் குறிக்கப்பட்ட ஒரு நாள் வெகு சாதாரணமாக நம்மைக் கடந்து போவதை விட முடியுமா? உலகம் முழுக்க பல வகையிலும் கொண்டாடினார்கள் இந்த நாளை! நாமும் பெரியார் பிஞ்சு சார்பில் இத்திரைப்படத்தின் 3 படங்களையும் திரையிட்டு விவாதித்து மகிழ்ந்தோம்.
ஒருபடம் நாளைய உலகத்தை நம் கண் முன்னே காட்டியது இன்று எப்படி இருக்கிறது என்று 1985 ஆம் ஆண்டில் இப்படத்தைப் பார்த்திருந்தவர்கள் இப்போது இருந்தால் கண்டிப்பாக வியந்து போய் இருப்பார்கள் என்பது தான் உண்மை.
நாம் அதற்குப் பிறகு பிறந்தவர்களாயிற்றே, என்று நினைக்கிறீர்களா? அதனால் என்ன இப்போதும் அப்படம் கிடைக்கிறது. வாய்ப்பிருப்போர் பாருங்கள்… இன்றைய வளர்ச்சியையும் அன்றைய எதிர்பார்ப்பையும் ஒப்பிட்டுப் பாருங்கள்!
-_ பிரதிபா லெனின்