பிஞ்சுகளே! பேச்சாற்றல் வளருங்கள்!
பிஞ்சுகளே! பேச்சாற்றல் வளருங்கள்!
-சிகரம்
பேசுவது என்பது மனிதர்க்கு மட்டுமே உரிய தனித்திறன். அத்திறன் இருப்பதால் தான் மனிதனுக்கு அறிவும் வளர்ந்தது ஆற்றலும் வளர்ந்தது உலகும் உயர்ந்தது.
பேசுவது என்பது பிறந்த பின் ஒரு வயதுக்கு மேல் மெல்ல மெல்ல சுற்றுச்சூழல் பழக்கத்தால் வருவது. எனவே, பேசுவது எல்லோருக்கும் இயல்பாய் இயலக்கூடியது ஆகும். ஆனால், பிஞ்சு மனதிலே பெரியவர்கள் ஒரு கருத்தை ஆழப்பதித்து விட்டனர்.
பேச்சாற்றல் என்பது எல்லோருக்கும் வராது. அது சிலருக்குத்தான் வரும் என்று. எப்படி கணக்குப் பாடம் கடினம் என்ற கருத்து மூளையில் ஏற்றப்பட்டதோ அவ்வாறே பலர் மத்தியில் பேசுவது கடினம் என்ற ஒரு கருத்தும் நம்மூளையில் ஏற்றப்பட்டுள்ளது.
எந்தவொன்றும் எளிமையாய் இருப்பதும் கடினமாய் இருப்பதும் ஆளுக்கு ஆள் மாறுபடும். ஒருவருக்குக் கடினமாய் இருப்பது இன்னொருவருக்கும் கடினமாய் இருக்க வேண்டும் என்பது கட்டாயம் அல்ல.
சிலருக்கு இயல்பாய் பேச வரும், சிலருக்குப் பாட வரும், சிலருக்கு வரைய வரும் இப்படி பலருக்கும் பல விருப்பம் ஆற்றல் உண்டு. ஆனால், பயிற்சி எடுத்து முயன்றால் எல்லோருக்கும் எல்லாமும் முடியும் என்பதே உண்மை.
எனவே பேச்சு வராது, கூட்டத்தைக் கண்டால் பயம், கைகால் நடுங்கும் என்பனவெல்லாம் மனக்குழப்பத்தின் வெளிப்பாடுகளேயன்றி உண்மை நிலைகள் அல்ல.
பேச்சாற்றலின் தேவை
ஒரு மனிதன் எவ்வளவு கற்றிருந்தாலும் பலவற்றை அறிந்திருந்தாலும் அவற்றைப் பிறருக்கு எடுத்துச்சொல்லும் ஆற்றல் இல்லையேல் அவற்றால் பயனில்லை. அதுவும் இக்காலம் போட்டிகள் நிறைந்தது. எனவே நம்மை நம்முடையதை வளர்க்க, நிலைநிறுத்த, வெற்றி பெறச் செய்ய பேச்சாற்றல் கட்டாயத் தேவை.
அதனால் தான் வேலைக்குச் செல்லும்போது பேச்சாற்றல் உள்ளதா என்று முதலில் பரிசீலிக்கிறார்கள். நன்றாக படித்து அதிகமதிப்பெண் பெற்றவனை ஓரம் ஒதுக்கி விட்டு சுமாராகப் படித்தவன் தனது சொல்வன்மையால் வேலையைபெற்று விடுகிறான். இன்றைக்கு இதுதான் உண்மை நிலை.
பேச்சாற்றலை வளர்ப்பதெப்படி?
சிறுவயது முதலே தன் குடும்பத்தவர் மத்தியில் தயக்கமின்றித் தனது கருத்துக்களைப் பேசவேண்டும். அடுத்து நண்பர்கள் மத்தியில் பேசவேண்டும். பிறகு பொதுமக்கள் மத்தியில் பேசவேண்டும்.
அதேபோல் பள்ளியில் வகுப்பில் முதலில் பேச வேண்டும், பின் பள்ளி நிகழ்வுகளில் பேச வேண்டும். அடுத்து பள்ளிகளுக்கு இடையே நடைபெறும் போட்டிகளில் பேசவேண்டும். பிறகு பொது மேடைகளில் பேச வேண்டும்.
நல்ல பேச்சாளர்கள் எப்படிப் பேசுகிறார்கள் என்பதைக் கவனித்து அதனைப் பின்பற்றி நமது பேச்சாற்றலை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
நாம் எதைப்பற்றிப் பேச வேண்டுமோ அதைப் பற்றிய விவரங்களை நூல்களிலிருந்தும், செய்தித் தாள்களிலிருந்தும், பெரியவர்-களிடமிருந்தும் தெரிந்து கொள்ள வேண்டும்.
குறிப்புகள் எழுதி வைத்தல் வேண்டும்
தொடக்கத்தில் பேசும்போது நாம் பேச வேண்டியவை குறித்து சில குறிப்புகளை முன்கூட்டியே எழுதிவைத்துக் கொண்டு அவற்றை பேசும்போது அவ்வப்போது பார்த்து பேசவேண்டும்.
பாடத்தோடு பொது அறிவு வளர்த்தல்
பாடப்புத்தகங்களை மட்டுமே படிப்பது என்ற நிலையை மாற்றி, பல்வேறு செய்திகளையும் படிக்க வேண்டும், கேட்க வேண்டும், அவற்றை அவ்வப்போது ஒரு நோட்டில் குறித்து வைத்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு குறித்து வைக்கும் குறிப்புகளை தலைப்பு வாரியாக குறித்து வைத்துக் கொண்டால், அவை நாம் பேசும் போது பெரிதும் உதவும். எழுதுவதற்கும் இது பயன்படும்.
அறிஞர் அண்ணா அவர்களே, தான் அறியும் உலக செய்திகளையும் உள்நாட்டுச் செய்திகளையும் ஒரு ஏட்டில் குறித்து வைப்பார். அவற்றைத் தேவையானபோது மேடைப்பேச்சில் பயன்படுத்துவார். அதனால்தான் அவர் சிறந்த பேச்சாளராக விளங்க முடிந்தது.
பிறரைப் போல் பேசக்கூடாது
ஒருவர் எப்படிப் பேசுகிறாரோ அப்படியே உடல் அசைவு, குரல், உடை என்று பின்பற்றக்கூடாது. அப்படி பின்பற்றினால் நமது தனித்தன்மை வளராது. பிறர் பேசுவதை பார்த்து கற்றுக்கொண்டு, நம் இயல்புப்படி சிறப்பாகப் பேச வேண்டும்.
எதிரிலிருப்பவர் பற்றிய மதிப்பீடு
பேச்சைக் கேட்க எதிரில் இருப்பவர்கள் எல்லாம் பெரியவர்கள். நமக்கு ஒன்றும் தெரியாது என்று எண்ணிக்கொண்டு பேசக்கூடாது. எதிரில் உள்ளவர்கள் நமக்கு வேண்டியவர்கள் தான். அவர்களைக் கண்டு நாம் ஏன் அஞ்ச வேண்டும் என்ற தன்னம்பிக்கையுடன் நம் கருத்தை அவர்கள் விரும்பி கேட்கும்படி நாம் சொல்ல வேண்டும்.
ஒலி அளவு
அரங்கத்தின் அளவிற்கு ஏற்ப நாம் நம் பேச்சொலியை அமைத்துக் கொள்ள வேண்டும்.
நகைச்சுவை, கதை
பேச்சின் இடையே பொருத்தமாக நகைச்சுவை மற்றும் கதைகளை எடுத்துக்காட்டினால் பேச்சை விரும்பிக் கேட்பர்.
மேற்கோள்:
சிறந்த அறிஞர்களின் கருத்துகளை இடையிடையே பொருத்தமாக மேற்கோள் காட்டிப் பேசினால் பேச்சு தரமுடையதாய் அமையும். எனவே பிஞ்சுகள் இவற்றை மனதிற் கொண்டு பேசிப் பழக வேண்டும். மேடைகளில் அச்சமின்றி பேச வேண்டும். அதன் மூலம் வாழ்வில் உயர வேண்டும்.