கொண்டாடித் தீர்த்த மழை
தமிழ்நாட்டில் வழக்கமாக அக்டோபர் முதல் டிசம்பர் வடகிழக்குப் பருவ மழை இருக்கும் என்று நாம் படித்திருக்கிறோம். அனுபவித்துமிருக்கிறோம். ஆனால், நடுவில் இருக்கும் நவம்பரை நாம் மறக்க முடியாத படி செய்திருக்கிறது இந்த ஆண்டு பெய்த மழை.
பிஞ்சுகளின் கணக்கில் சொல்ல வேண்டுமானால், விடுமுறைக்கு எது வழிவகுக்கிறதோ அதுவே நல்ல மழை. அப்படிப் பார்த்தால் கடந்த 6-ஆம் தேதியிலிருந்து கிட்டத்தட்ட 20 நாட்கள் நல்ல விடுமுறை மழை தான் பிஞ்சுகளுக்கு!
ஒவ்வொரு நாளும் கார்ட்டூன் தொலைக்காட்சியும், விளையாட்டு தொலைக்காட்சியையும் மாற்றாமல் பார்க்கும் குழந்தைகளெல்லாம் இந்த 20 நாட்களும் செய்தித் தொலைக்காட்சிகளை விடாமல் பார்த்திருக்கிறார்கள்… பார்த்திருக்கிறீர்கள் அப்படித்தானே!
கன மழை பெய்யும் வாய்ப்பிருப்பதாகச் சொன்னாலும் சரி, மழை விட்டாலும் தண்ணீர் நிறைந்திருப்பதன் காரணமாக பாதுகாப்புக் கருதி பள்ளிக்கு விடுமுறை விட்டாலும் சரி என்று நாமும் கொண்டாடி இருந்துவிட்டோம்.
ஆனால், தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் மழை, வெள்ளம் பலரைப் பலி கொண்டிருக்கிறது. பலர் வீடிழந்து, உணவிழந்து, உடல் நலமிழந்து தவித்திருக்கிறார்கள்… தவித்துக் கொண்டிருக்-கிறார்கள். அதிலும் குறிப்பாக கடலூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும், இன்னும் சில கடலோர மாவட்டங்களும் கடுமையாகப் பாதிக்கப்-பட்டிருக்கின்றன.
நாள்தோறும் அவர்கள் படும் துன்பங்களைப் பார்த்து நம்மில் பலர் கடுமையாக வருந்தியிருக்கிறோம். மழை இனிமையானது தான் – நாம் பாதுகாப்பாக இருக்கும்போது! ஆனால், அன்றாடம் உழைத்துப் பிழைக்க வேண்டியவர்களுக்கும்,
குடிசைகளில் வாழும் நம் உறவுகளுக்கும் இப்படிப்பட்ட மழை இனிமையானதாக இருக்க முடியாது. அவசரத்திற்கு வெளியில் எங்கும் செல்ல முடியாத நிலையில் உடல்நலமின்றி இருப்பவர்களும் கடும் அவதிப்படுவார்கள்.
பெரிய பெரிய வீடுகளில் ஓரிருவர் மட்டும் வாழும்போது, ஆயிரக்கணக்கான பேர் குடிசைகளில் ஏன் வாழ வேண்டியிருக்கிறது என்ற கேள்வியை நாம் எழுப்பவேண்டாமா? இவையெல்லாம் எப்போது மழை பெய்தாலும் இந்தியாவில் நடக்கக் கூடிய நிகழ்வுகள். இந்த ஆண்டு பெரிய பெரிய வீடுகளைக் கட்டியவர்களும் வீடே மீன் தொட்டி ஆனதைப் போல, நீர் புகுந்து தவித்திருக்கிறார்கள். ஏன் நம் நாட்டில் இந்த நிலை.
அப்படியென்றால், வெளிநாடுகளில் இப்படி இல்லையா? அமெரிக்காவில் கூட கடும் மழை பெய்து வாகனங்கள் எல்லாம் அடித்துக் கொண்டு போவதைப் பார்த்திருக்கிறோமே செய்திகளில்? என்று கேட்கலாம். கலிபோர்னியா போன்ற பகுதிகளில் பெய்யும் மழையையும், வீசும் புயலையும் ஒப்பிட்டால் நமக்கு இப்போது பெய்திருக்கும் மழை ஒன்றுமேயில்லை.
சிங்கப்பூர் போன்ற நாடுகளிலெல்லாம் மழை பெய்த சிறிது நேரத்திற்கெல்லாம் மழைத்தண்ணீர் வடிந்து, உரிய கால்வாய்கள் வழியாக நீர் சேமிக்கப்படும் இடங்களுக்குச் சென்று-விடும்.குடிநீர் அவ்வளவு எளிதில் கிடைக்காத அந்த நாட்டுக்கு இத்தகைய வடிகால்கள் மூலம் சேமிக்கப்படும் நீர் தான் சுத்திகரிக்கப்பட்டு தடையின்றி குடிநீராகக் கிடைக்கிறது.
சரி, அப்படியே இருக்கட்டும். பிற நாடுகளில் இருக்கும் வசதிகள் நம்மிடம் இல்லாமல் இருக்கலாம். ஆனால், இத்தனை ஆண்டுகள் பெய்த மழையும், இந்த ஆண்டு பெய்த மழையும் ஏற்படுத்தியிருக்கும் பாதிப்புகளில் ஏன் இவ்வளவு வேறுபாடு? இந்த ஆண்டு கடுமையாக இருக்கிறதே என்று யோசித்தால் நமக்கு விடை கிடைக்கும்.
இயற்கையாக நீர் சென்று சேர்வதற்கான வழித்தடங்களையும், ஆறுகள், குளங்கள், ஊருணிகள், ஏரிகள், கண்மாய்கள், வாய்க்கால்கள் …. இப்படி ஏராளமாக இருந்த நீர் சேகரிக்கப்படும் இடங்களையும் நாம் குறைத்துவிட்டோம்… அழித்துவிட்டோம்… அபகரித்து விட்டோம். பல ஊர்களில் ஏரிகள் இருந்த இடங்களில் தான் வீடுகள் கட்டப்பட்டிருக்கின்றன. அதனால் தான் மழை நீர் தேங்குமிடங்களாக இப்போது அவை மாறிவிட்டன.
இதைப் புரிந்துகொண்டு நாம் பழைய நீர் சேமிப்பிடங்களைக் காப்பாற்றவும், புதிய நீர் சேமிப்பிடங்களை உருவாக்கவும் வேண்டும். குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகள் தான் மழைநீர் மண்ணில் ஊறாமல் தடுக்கின்றன.
இவ்வளவு மழை பெய்த இதே நாட்டில் தான் கோடை காலத்தில் குடிநீர் கிடைக்காமல் தவிக்கப் போகிறோம் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். முறையாக எல்லாவற்றையும் பராமரித்தால் இந்த நிலை இருக்காது தானே! எனவே, சுற்றுச் சூழல் காக்கப்படவேண்டியதன் அவசியத்தை மீண்டும் ஒரு முறை உணர்த்தியிருக்கிறது மழை.
மழை – இயற்கை! அதற்கு அறிவோ, திட்டமோ, நோக்கமோ எதுவும் இருக்க முடியாது. யாரும் கிளப்பி விட முடியாது. மழை வந்தால் தான் நாடு செழிக்கும் என்ற பருவநிலை உள்ள நம் நாட்டில், வகையாகக் கிடைத்த இந்த மழையைத் திட்டுவதாலோ, பழிப்பதாலோ எதுவும் நடந்துவிடப் போவதில்லை.
மாறாக, நல்ல மழை கிடைக்கும் வகையில் காடுகளை பெருக்குவதும், நீரை முறைப்படி சேமிப்பதும், ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர்ப்பிடிப்புப் பகுதிகளை பராமரிப்பதும் நமது கடமை தானே பிஞ்சுகளே! மழை நம்மை மகிழ்விக்கத் தான் கொண்டாடித் தீர்த்திருக்கிறது… ஆனால், அதனால் திண்டாடிப் போகும் படி ஆன நிலை ஏன் வந்தது, அதை எப்படி மாற்றுவது என்று சிந்திப்பது நம் கடமை.
உங்களுக்கு என்ன தோன்றுகிறது? நீங்களும் எழுதுங்கள். சிறந்த கருத்துகளுக்குப் பரிசும், பதிப்பும் உண்டு.
– பிஞ்சண்ணா