வெடிகளை தவிர்த்து, புத்தகங்களை வாங்கிக் கொடுங்கள்!
தீபாவளிப் பண்டிகை என்பது அறிவுக்குப் பொருந்தாத கட்டுக்கதை என்பதும், தமிழர்களின் விழா இல்லை என்பதும் பெரியார் பிஞ்சுகளான நமக்கு நன்றாகவே தெரியும். இருந்தபோதிலும் நம் நண்பர்கள், அக்கம் பக்கத்தினர் வெடிவெடிக்கும்போது நமக்கும் ஆசை பிறக்கும், ஆனால், அதனால் ஏற்படும் பாதிப்பை நாம்தான் எடுத்துக் கூறவேண்டும்.
ஓராண்டு முழுவதும் வாகனங்கள் வெளியிடும் புகையினால் ஏற்படும் சுற்றுச்சூழல், உடல்நலக் கேட்டைவிட, ஓரிருநாள் கொண்டாடப் படும் தீபாவளி பண்டிகையின்போது வெடிக்கப்படும் வெடிகளில் இருந்து வெளிவரும் புகையின் அளவும், அதனால் ஏற்படும் உடல்நலக் கேடும் அதிகம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
தீபாவளியின்போது வெடிகளால் காசு கரியாவதுடன், சுவாசக் கோளாறு மற்றும் தோல் நோய்கள் வருகின்றன. இதனைக் கருத்தில் கொண்டுதான் கர்நாடக மாநில முதல்வர் சித்தராமைய்யா, ‘வெடிகளைத் தவிர்த்து புத்தகங்களை வாங்கிப் பரிசளியுங்கள்’ என்று கூறியுள்ளார்.
கர்நாடக மாநிலம் முழுவதும் 8 இலட்சம் குறுஞ்செய்தி வாயிலாகவும், விளம்பர பதாகைகள், வானொலி, பண்பலை, திரையரங்க விளம்பரங்கள் மூலமாக இந்த விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ள முதல் மாநில முதல்வர் என்ற பெருமைக்கும் உரியவராகியுள்ளார்.
—–_ இப்பொழுது சொல்லுங்கள், திரு. சித்தராமைய்யா கூறியது சித்தத்தில் ஏற்றிக் கொள்ள வேண்டியது தானே!.
– கா.அமுதரசன்