பிஞ்சுகளுக்கு மட்டுமல்ல…
“தாய் எட்டடிப் பாய்ந்தால் குட்டி பதினாறடி பாயும்” என்பது பழமொழி. அதாவது பிள்ளைகள் பெற்றோரைவிட இரட்டிப்புத் திறன் கொண்டவர்கள் என்பது அதன்பொருள். ஆனால், இன்றைய பிள்ளைகள் பெரியவர்-களைவிட பலமடங்கு ஆற்றல் பெற்று மிளிர்கின்றனர்.
கணினி, செல் பேசி பயன்படுத்துவது முதல், பிரச்சினைகளை அணுகுவது வரை அனைத்திலும் அதிகத் திறத்துடனும் நுட்பத்துடனும் செயல் படுவதை நாம் கண்டு வியக்கும் சூழல்கள் பலப்பல.
ஒடுக்கப்பட்ட, அடக்கப்பட்ட எதுவும் வாய்ப்புக் கிடைக்கும் போது வீரியத்துடன், வேகத்துடன் எழும் என்ற இயல்பிற்கேற்பவே, நூற்றுக்கணக்கான ஆண்டுகளாய் ஒடுக்கப்பட்ட நம் சமுதாயத்திற்கு தற்போது வாய்ப்புக் கிடைத்ததும் நம் வாரிசுகள், பிஞ்சுகள் உற்சாகத்தோடு ஒவ்வொன்றையும் சாதிக்கின்றனர்.
இரண்டு வயது பிஞ்சுக்குழந்தைகூட நுட்பத் தோடும், விவரத்தோடும் செயல்படுவதை நாம் கண் கூடாகக் காண்கிறோம். அவர்களை ஏமாற்றவோ, சமாதானப்படுத்தவோ, சரிக் கட்டவோ முடியவே முடியாது. முயன்றால் நாம்தான் தோற்றுப்போவோம்.
அன்றைக்கு 30வயது வரை கூட பொது அறிவே இல்லாமல், உண்டு, உழைத்து, உறங்கி காலந்தள்ளினர். ஆனால், இன்றைக்கு 3வயது குழந்தை எல்லாவற்றையும் அறிந்து வைத்திருக்கிறது.
பத்து வயது சிறுவர் முன் அறுபது வயது பெரியவர்கள் என்ன கற்றவராயினும் கல்லாதவராயே காட்சியளிக்கிறார். சென்ற தலைமுறையினும் இந்தத்தலைமுறை பன்மடங்கு அறிவும், ஆற்றலும், விழிப்பும், வேகமும் பெற்று விளங்குகின்றது.
இது வெல்லாம் மகிழ்ச்சிக்கும் பெருமைக்கும் உரியவைதான் என்றாலும், காட்டாற்று வெள்ளமாய், கரையில்லா பாய்ச்சலாய் பாய்ந்தால், பயன் கிடைப்பதற்கு மாறாய் பாழ்தான் ஏற்படும். எனவே, அவர்களின் ஆற்றலை முறைப்படுத்தி, நெறிப்படுத்தி பயனுறச் செய்ய வேண்டியது பெரியவர்களின் பெற்றோர்களின், மற்றவர்களின் கடமையாகும்.
பிள்ளையைப் பெற்று வளர்த்து, மூன்று வயதானதும் பள்ளியில் தள்ளிவிட்டு கடமை முடிந்ததாய் பெற்றோர்கள் கருதினால் அது தப்பான முடிவாகும்.
பெற்றோர் பிள்ளை உறவு என்பது புளியம் பழத்தைப் போன்றது. ஆம். புளியம் பழத்தைப் பார்த்து பெரியவர்கள் பெற்றவர்கள் பாடம் கற்க வேண்டும்.
புளியம் பழம் பிஞ்சாக, காயாக இருக்கும் போது அதன் ஓடும், உள்ளிருக்கும் பழமும் சுளையும் பின்னிப் பிணைந்து பிரிக்க-முடியாமல் இருக்கும். அதே காய் முற்றமுற்ற ஓடு சுளையிலிருந்து மெல்ல மெல்ல விலகும் நன்றாக முற்றி பழுத்ததும் ஓடும் சுளையும் தொடர்பற்று தனித்தனியே நிற்கும். என்றாலும் அந்த ஓடு உள்ளிருக்கும் சுளைக்கு கவசமாய் இருந்து காக்கும்.
இந்த முறையில் தான் பெற்றோர் பிள்ளை உறவும் இருக்க வேண்டும்.
அதாவது, பிள்ளைகள் பிஞ்சாக இருக்கும்போது பெற்றோர் பின்னிப் பிணைந்து அவர்களோடு உறவாட வேண்டும். புளியங்காய் முற்ற முற்ற அதன் ஓடு சுளையைவிட்டு விலகி வருவதுபோல், பெற்றோர் பிள்ளை வளர வளர பிள்ளைகளின் பிணைப்பிலிருந்து மெல்ல மெல்ல விலகவேண்டும்.
புளியம் பழம் நன்றாகப் பழுத்ததும் அதன் ஓடு சுளையைவிட்டு தனியே விலகி நிற்பது போல, பெற்றோர், பிள்ளைகள் ஆளான நிலையில் அவர்களிடமிருந்து விலகி நிற்கவேண்டும். அதேநேரத்தில், புளியம் ஓடு விலகிநின்றாலும் சுளைக்கு கவசமாய் நிற்பது போல, பெற்றோர் விலகி நின்றாலும் பிள்ளைகளைத் தங்கள் கண்காணிப்பு என்ற கவசத்துக்குள் வைத்து பாதுகாக்க வேண்டும்.
பெற்றோரின் கண்காணிப்பில்லா பிள்ளைகள் கரையில்லா நீரோட்டம் போல கண்டபடி ஓடி பாழாவதோடு, மற்றவர்களையும் பாழாக்குவர்.
வாகனத்தை இழுத்துச் செல்கின்ற எஞ்சின் மிகுந்த ஆற்றல் உடையதாயினும், விரைந்து இழுத்துச் செல்லும் வல்லமை உடையதாயினும், ஸ்டேரிங்கும், பிரேக்கும் இல்லையென்றால் என்னாகும். கண்ட படி ஓடி, கண்ட இடத்தில் மோதிச் சிதறும், மற்றதையும் சிதைக்கும்.
இன்றைய இளைஞர்கள் பேராற்றல் உள்ளவர்கள், சாதிக்கும் திறன் பெற்றவர்கள். ஆனால், அவர்களை பெற்றவர்களும், மற்றவர்களும் நெறிப்படுத்தி முறைப்படுத்தி வழிநடத்த வேண்டும்.
பிஞ்சுகளும் தங்களுக்குத் தாங்களே தற்கட்டுப்பாடும், தன்னொழுக்கமும் கொண்டு தங்களைத் தாங்களே வழிநடத்திச் செல்ல வேண்டும்.
ஒரு பிள்ளையின் வாழ்வில் இருபருவங்கள் உண்டு. 1. செலுத்தப்பட வேண்டிய பருவம், 2. செலுத்திக் கொள்ளும் பருவம். அதை இன்னும் எளிமையாக பச்சையாகச் சொன்னால், திருத்தப்பட வேண்டிய பருவம்; திருந்த வேண்டிய பருவம்.
18 வயதுவரை ஒரு பிள்ளையை மற்றவர்கள் நெறிப்படுத்தி, முறைப்படுத்தி வழிநடத்த வேண்டும், வளர்க்க வேண்டும். அதன்பின் அவர்களே தங்களை நெறிப்படுத்தி, முறைப்படுத்திக் கொண்டு செலுத்த வேண்டும், வாழ வேண்டும்.
இன்றைய பிள்ளைகள் தொழில்நுட்ப உலகில் வாழ்வதால் 10 வயது முதலே தன்னைத் தானே செலுத்தும் திறனும், விழிப்பும் பெற்றுவிடுவதால், பிள்ளைகளே தங்களைத் தாங்களே செதுக்கிச் செம்மை செய்து, சரியான, முறையான, நேர்மையான, நீதியான, மனித நேயவாழ்வை வாழவேண்டும்; மற்றவர்களுக்கும் உதவ வேண்டும்.
கேடு என்று தெரிந்ததைத் தவிர்ப்பதும். தப்பு என்று அறிந்ததை விலக்குவதும், தங்களைப்போல பிறரை நேசிப்பதும் செய்தாலே வாழ்வு செம்மைப்படும், சிறக்கும். இனிவரும் உலகு உங்கள் கையில். உணர்ந்து செயல்பட வேண்டியது உங்கள் கடமை!
பிள்ளைகள் எப்படி வளர்கிறார்கள்; வாழ்கிறார்கள் என்பதைப் பொறுத்தே எதிர்கால உலகம் அமையும். தாங்களும் தங்கள் வாரிசுகளும் வாழப்போகும் உலகம் சிறப்பாக, அமைதியாக, பாதுகாப்பாக அமைய அவர்கள்தான் பொறுப்பேற்க வேண்டும்! அதற்குப் பெரியவர்கள் துணைநிற்க வேண்டும்.