நல்ல பாம்பு
‘டும்… டும்… டும்…’ மேள ஓசை கேட்டது. “எல்லாரும் ஒரு தடவை ஜோரா கை தட்டுங்கோ… இன்னும் அஞ்சு நிமிஷத்திலே இந்த இடத்திலே கீரிக்கும் பாம்புக்கும் சண்டை! ஏய்… யாரும் கை கட்டாதிங்கோ…” என உரத்த குரலில் ஆணை இட்டான் வித்தைக்காரன்.
மேளம் அடிக்கிற உதவி ஆள், வித்தைக்காரன் சொன்னதற்கு எல்லாம் “ஆமாம்” போட்டபடி இருந்தான். வருவோர் போவோர் கூடி நின்று வாய் பிளந்து பார்த்தபடி, அந்த வித்தைக்காரன் ஆணைக்கு ஆட்பட்டிருந்தார்கள். ஏமாந்து போவதற்கு ஆள் கிடைத்தால், ஏமாற்றுக்காரர்களுக்குச் சொல்லவா வேண்டும்?
“இதோ, இங்கே இருக்குதே கீரிப் புள்ளே… இது மைசூர் காட்டுலே புடிச்சது… இந்தக் கூடைக்குள்ளே இருக்குதே… பாம்பு… இது, அய்தராபாத்லே புடிச்சது. மோசமான நல்ல பாம்பு… இது வரைக்கும் இந்தப் பாம்பு பத்து பேரை வெடுக்குன்னு கடிச்சு, படக்குன்னு உயிரைப் போக்கியிருக்கு… தயவு செய்து எல்லோரும் கொஞ்சம் தள்ளி நில்லுங்கோ!…” என அச்சமூட்டியபடி பாம்பு அடைக்கப்பட்டிருக்கும் வட்டக் கூடையைக் கையில் எடுத்தான் பாம்பாட்டி கூட்டம் பயந்து சற்றுத் தள்ளி நின்றது.
கூடையைத் திறந்து உள்ளே இருக்கும் பாம்பை ஒரு தட்டுத் தட்டி, கோபம் உண்டாக்கி, மகுடியை எடுத்து அதன் முகத்தின் முன் ஊதினான். பாம்பு, ‘உஸ்…’ என்ற ஓசையுடன் படம் எடுத்தபடி மகுடி எந்தப் பக்கம் திரும்புகிறதோ அந்தப் பக்கம் எல்லாம் தலையைத் திருப்பிக் கோபத்துடன் பார்த்தது. கூடியிருந்த மக்கள் அச்சத்தோடும், அடுத்து என்ன நடக்குமோ என்கிற ஆர்வத்தோடும் பார்த்தனர்.
அவன் திடீர் என்று பாம்புக் கூடையை மூடினான். “இந்தப் பாம்புக்கும் அந்தக் கீரிக்கும் சண்டை விடறதுக்கு முன்னாடி… இதோ இருக்குதே இந்தச் சுடுகாட்டு மண்டை ஓடு… இதைவச்சு மந்திரிச்ச தாயத்து இருக்கு! அதை வாங்கிக் கட்டிக்கிட்டா… இது மாதிரி பாம்பு, தேளு கடிச்சா… பட்டுன்னு போயிடும்…”
“எது, உயிரா?” என்று மேளம் அடிப்பவன் குறுக்கிட்டான்.
“இல்லேடா… வலி போயிடும்… விஷம் உடம்புலே ஏறாது! ராத்திரி நேரத்திலே, காட்டுலே மேட்டுலே எங்கே போனாலும் பேய் பிசாசு அண்டாது. நினைச்ச காரியம் பலிக்கும்… அதிசய தாயத்து!…” என்றான் வித்தைக்காரன்.
“ஆமாங்கோ, ஒரு தாயத்து விலை பத்தே ரூபா… வாங்கிக் கட்டுங்கோ சாமி” மேளம் அடிப்பவன் குரல் கொடுத்தான் அந்த நேரத்தில், கூட்டத்திலிருந்த ஒருவர் நழுவ முயன்றார் அதைக் கவனித்த வித்தைக்காரன், “யாராவது வெளியே போனா, வாயிலே மூக்குலே ரத்தம் வரும்!” என அச்சமூட்டினான்.
“ஆமாங்கோ… இன்னும் அஞ்சு நிமிஷத்திலே கீரிக்கும் பாம்புக்கும் சண்டை! எல்லாரும் ஒரு தடவை ஜோரா கை தட்டுங்கோ…” என கவனத்தைத் திருப்பினான் மேளக்காரன்.
பயந்து போன சிலர் பத்து ரூபாய் கொடுத்து, தாயத்து வாங்கினார்கள். தாயத்து வியாபாரம் மும்முரமாக நடந்து கொண்டிருந்த நேரத்தில், கூடைக்குள்ளிருந்த பாம்பு மெல்லத் தலையை உயர்த்திக் கூடையின் மூடியை மேல் நோக்கித் தள்ளியது. கூடை திறந்து கொண்டது.
பல நாட்களாக வித்தைக்காரனின் கூடையில் அடைபட்டிருந்த பாம்புக்கு விடுதலை கிடைத்தது. மெதுவாக, அவன் வைத்திருந்த தட்டு முட்டுச் சாமான்கள் பக்கமாக ஊர்ந்து, அந்த இடத்தை விட்டுத் தப்பித்தது!
விரைந்து வந்த நல்ல பாம்புக்கு, பக்கத்திலிருந்த புதரில் ஒரு புற்று தெரிந்தது. அதில் ஏற்கனவே ஒரு பாம்பு இருந்தது. இதைக் கண்டதும், “யார் நீ? என்றது.
தன்னைப் போல் அங்கே ஒரு பாம்பு இருப்பதைக் காணவும், வந்த பாம்புக்கு ஆறுதலாக இருந்தது. “நானா?… ஒரு வித்தைக்காரன் கிட்டே மாட்டிக்கிட்டு… வேதனைப்பட்டு… தப்பி வந்திருக்கேன்!” என்றது. “அகதி மாதிரி வந்திருக்கியே! சரி, வா… வா…!”
“நல்ல வேளை, அந்தப் படுபாவிகிட்டே மறுபடி மாட்டிக்காம தப்பிட்டேன்! இடம் கொடுத்ததுக்கு நன்றி…”
அவ்வளவு மோசமான ஆளுகிட்டேயா மாட்டிக்கிட்டே?”
“நமக்கெல்லாம் பல்லுலெதான் விஷம். ஆனா அந்த வித்தைக்காரனுக்கு உடம்பு முழுக்க விஷம். எனக்கும் கீரிக்கும் சண்டை விடுறேன்னு சொல்லி, மக்களைக் கூட்டி- பொய் சொல்லி, தாயத்து வியாபாரம் செய்வான்.
கடைசிவரை சண்டையே நடக்காது. சண்டைக்கு விட்டா, கீரியோ நானோ செத்துப் போயிடுவோம். சண்டை பார்க்கிற ஆர்வத்திலே வந்தவங்களைப் பயமுறுத்தி, பணம் பறிக்கிறதிலேயே குறியா இருப்பான்… அப்பாவி மக்களும் ஏன், எதுக்கு, எப்படின்னு எதுவுமே கேக்காமல் ஏமாந்து போவாங்க!… அதை நினைச்சாதான் எனக்கு வருத்தமா இருக்கு!
நம்மை யாராவது துன்புறுத்தினா, உடனே வெகுண்டு எழுந்து வெடுக்குன்னு கடிச்சிடுவோம். ஆனா, விவரம் புரியாத அப்பாவி மக்கள் – போலியான வார்த்தைகளுக்கு மயங்கி… தங்கள் உரிமையைக் கூட இழந்து, ஊமையாய்ப் போறாங்களே! பாம்பின் விஷத்தைக் கூட மருந்தாப் பயன்படுத்தத் தெரிஞ்ச மனிதர்களுக்கு,
தாயத்துங்கறது மூளையைக் கெடுக்கிற மூடநம்பிக்கைங்கிறது தெரியல்லியே!” என வேதனையாய்ச் சொன்னது வந்த பாம்பு.
அனைத்தையும் அமைதியாகக் கேட்ட புதர்ப் பாம்பு, “பாம்புலெ எப்படி விஷமுள்ள பாம்பு, விஷமில்லாத பாம்புண்ணு இருக்கோ – அதே மாதிரி, மனிதர்களிலேயும் இருப்பாங்க போலிருக்கு. பாதிக்கப்பட்ட மக்களுக்காக இவ்வளவு வருத்தப் படுற நீ, உண்மையிலேயே நல்ல பாம்பு தான்!” என்று பாராட்டியது.