பேரறிவுக்கான ஆயுதம்
இன்றைய உலகில் பேரழிவுக்கான ஆயுதங்கள் (Weapons of Mass Destruction) நிறைந்திருக்கின்றன. ஒரே ஒரு குண்டைப் போட்டால் ஒரு ஊரெ காலாகாலத்துக்கும் அழிவைச் சந்திக்கும் படியான குண்டுகளை-யெல்லாம் தயாரித்து வைத்துக் கொண்டு மிரட்டுகின்றன பாழும் நாடுகள்.
அதைத் தான் வல்லரசுத் தன்மை என்று சொல்லி நம்மை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இப்படி ஆயுத வெறி பிடித்த நாடுகளின் போரால் எண்ணற்ற குழந்தைகள் இறந்து கொண்டிருப்பதை நாளும் நாம் செய்திகளில் பார்க்கிறோம் தானே!
இதுவா இந்த உலகத்திற்கு அவசியம்? என்ற கேள்வி எல்லோர் மனதிலும் இருக்கிறது. இதை வித்தியாசமாக வெளிப்படுத்துவதில் கலைஞர்கள் வல்லவர்கள் அல்லவா? பேரழிவுக்கான ஆயுதங்களை அவர்கள் உருவாக்கினால், நான் பேரறிவுக்கான ஆயுதங்களை (Weapon of Mass Instruction) உருவாக்குகிறேன் என்று களத்தில் இறங்கிவிட்டார் ரௌல் லெமெசாஃப். அர்ஜெண்டினாவின் பியுனஸ் அய்ரசைச் சேர்ந்த வித்தியாசமான, கொஞ்சம் அதீதமான கலைஞர் இவர்.
1979 ஆம் ஆண்டின் போர்டு ஃபால்கான் மாதிரி மகிழுந்தை எடுத்தார். பெரிய பெரிய டாங்கிகளால் மக்களைக் கொன்று போடுவதைக் குத்திக் காட்ட நினைத்தார். அதே வடிவத்தில் பாகங்களை உருவாக்கி மாற்றியமைத்தார்.
சுழலும் மேல் பாகம், இயங்காத நீளமான பீரங்கிக் குழல்கள், ராணுவத்தின் பச்சை வண்ணம், இவற்றோடு 900 புத்தகங்களை அடுக்கக் கூடிய வசதியோடு தனித்துவமான வாகனமாக அதை மாற்றி அமைத்தார்.
”எப்போதும் வித்தியாசமாக எதையாவது செய்யக்கூடியவர் ரௌல். அவர் இதைச் செய்யத் தொடங்கியதும் என்ன செய்யப்-போகிறார் என்று ஆச்சரியத்துடன் பார்த்தோம். இதோ உலகிற்கு இன்று தேவையான கருத்தைச் சொல்லக் கிளம்பிவிட்டார்” என்கிறார்கள் அவரது நண்பர்கள்.
புத்தகங்களைச் சுமந்துகொண்டு வீதியெங்கும் பயணிக்கிறது ரௌலின் புத்தகப் பீரங்கி. படிக்க வேண்டும் என்று யார் கேட்டாலும் அவர்களுக்கொரு புத்தகம் இலவசம். படிக்க வேண்டும் என்பது மட்டும் தான் குறிக்கோள். பீரங்கிக்கு யார் புத்தகம் கொடுப்பதானாலும் கொடுக்கலாம். அதை அவர் மற்றவர்களுக்குக் கொடுப்பார்.
அறிவை விரிவு செய்தால், அழிவு அழிந்துபோகும் என்பதை அழகாக, உறைக்கும்படி சொல்ல அவர் வைத்த பெயர் தான் எல்லாவற்றிலும் சிறப்பானது – Weapon of Mass Instruction, பேரறிவுக்கான ஆயுதம்.
அறிவாயுதம் ஏந்துவோம் என்று நம் பெரியார் தாத்தா சொல்வாரே! உலகின் அறிவாளர்களும் அப்படித்தான் சிந்திக்கிறார்கள். வாருங்கள் பிஞ்சுகளே, ஆயுதம் ஏந்துவோம்! அறிவாயுதம் ஏந்துவோம்!!
– சமா.இளவரசன்