வீட்டுக்குள் மழை!
சூரியன் பத்து நாள் மேகச் சிறையிலிருந்து ஜாமீன் பெற்று மெல்…ல வெளியில் வந்து ஆசைதீர பூமிக்கு வெப்பத்தை வாரிவாரி மாரிபோல வழங்கிக்கொண்டிருந்தார். வடகிழக்கு பருவ மழை சற்றே ஓய்ந்திருந்த ஒரு ஞாயிற்றுக்கிழமை…
அறிவரசியின் வீட்டில் அவளுடைய பள்ளி நண்பர்கள் மூவரும் சேர்ந்து அறிவரசியின் அப்பா அன்பரசனின் செய்கையைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தனர். அவரோ பாட்டுப் பாடியபடியும் அதற்கேற்ப மெலிதாக ஆடியபடியே அப்பணியைச் செய்து கொண்டிருந்தார். திடீரென்று பாட்டு மாறி, மாரியைப் பற்றி _ அதாவது மழையைப் பற்றி பாடினார்.
அவர் ‘ஊசி போல மின்னிமின்னி ஊர் செழிக்கப் பெய்யும் மழை‘ என்ற கண்ணதாசனின் பாடலைப் பாடினார். பிஞ்சுகளோ அறிவிக்கப்படாத போட்டியாக அதை எண்ணிக்கொண்டு, ‘துளித்துளியாய் கொட்டும் மழைத் துளியாய் என் இதயத்தை இதயத்தை நனைத்துவிட்டாய்’ _ என்று அவர்கள் காலத்துப் பாடலைப் பாடி அசத்தினர்.
அன்பரசன் திடீரென்று “ஊருக்கு ஊரு சாராயம் தள்ளாடுது தமிழகம்’’ _ என்ற பாடலைப் பாடியதும் உற்சாகம் கரைபுரண்டோட பிஞ்சுகளும் அந்தப் பாடலை பாடினர். இரண்டு தலைமுறைக்கும் தெரிந்த பாடல் அல்லவா! திடீரென்று அன்பரசன் அந்த பாடலின் வார்த்தையை மாற்றிப்போட்டு,“ஊரெங்கும் மழைவெள்ளம் தத்தளிக்குது தமிழகம், நிவாரணம் செய்ய வக்கின்றி தள்ளாடுது அரசாங்கம்’’ என்று அதே மெட்டில் பாட, பிஞ்சுகள் ஏய்… என்று உற்சாகத்துடன் அவர்களும் சேர்ந்து பாடினர்.
சமையல் அறையிலிருந்த அன்பரசியின் அம்மா குணவதியோ “அது சரி, ஞாயிற்றுக்கிழமை வந்துட்டா போதும் வீடே ரெண்டு படுது’’ என்று சிரித்தபடி கூறியவாறே மதியஉணவு தயாரிக்கும் பணிகளில் கவனம் செலுத்தினார்.
சரி அப்படி என்னதான் செய்து நடக்கிறது அங்கே? வேறொன்றுமில்லை. மழை எப்படி வருகிறதென்று அன்பரசன் செய்முறை மூலம் பிஞ்சுகளுக்கு செய்து காட்டிக்கொண்டிருந்தார். அது என்ன செய்முறை? மிகவும் எளிமையானதுதான். எரியும் அடுப்பில் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி, அதை மூடிவிட்டு கொதிக்க வைப்பதுதான்.
இதோ! கொதித்தாயிற்று. அது ஆறுவதற்கு காத்திருக்கும்போதுதான் இப்படி மழைப் பாடல்களைப் பாடி கும்மாளம் அடித்தனர். அன்பரசன் பேசுகிறார். “பிஞ்சுகளா, இது எளிமையான முறைதான். ஆனாலும், நீங்கள் தனியாக செய்யக் கூடாது. சரியா? என்றதும் உள்ளுக்குள் இந்தப் பெரியவங்களே இப்படித்தான் என்று சலித்துக் கொண்டும், தெரிந்துகொள்ளும் ஆவலைக் கட்டுப்படுத்த முடியாமலும் வெளிப்படையாக, “சர்ர்ரிரீ…’ அடுத்தென்ன? அடுத்தென்ன?’’ என்று துளைத்தெடுத்தனர்.
ஒருவழியாக மூடியைத் திறக்க வேண்டிய நேரம் வந்ததும், “சரி, இதப்பத்தி ஒரு செயல் விளக்கம் சொல்லிடறேன். உங்களுக்கு தெரிஞ்சாக்கூட சொல்லலாம்.’’–என்று சொன்னதும், அவர்கள் ஒருவரையொருவர் மாறி மாறி வேடிக்கை பார்த்துக் கொண்டனர். நிலைமையைப் புரிந்துகொண்டு, அன்பரசன், “சரி, நானே சொல்கிறேன்.
இது உங்களுக்கும் தெரிஞ்சதுதான். ஆனால், இப்படி கற்பனை செஞ்சு பார்த்திருக்கீங்களா? அதாவது பாத்திரத்தில் இருக்கிற தண்ணீர்தான் கடல் தண்ணீர்! கீழே எரிகிற நெருப்புதான் சூரியன்! பாத்திரத்தில் இருக்கிற மூடிதான் வானம் அல்லது மேகம்னு வச்சிக்கலாம்.” என்று சொல்லிவிட்டு, நால்வரின் முகங்களையும் பார்த்தார்.
அதில் ‘அட!’ என்கின்ற பாவனை இருந்தது. அதை அவரும் ரசித்தார். ருசித்தார். அதிலிருந்து அவர்களை விடுவிக்க, அடுத்த கேள்வியைக் கேட்டார். “அதுபோகட்டும், சூடான தண்ணீர் என்னாகும்?’ _ என்று கேட்டு சற்றே இடைவெளி விட்டார். பட்டென்று நால்வரும், “ஆவியாகும்’’ என்றனர்.
அன்பரசன் முகத்தில் மகிழ்ச்சி புது மழைவெள்ளம் போல பொங்கியது. “ரொம்பச் சரி’’ என்று சொல்லிவிட்டு, தொடர்ந்து அவரே, “அப்புறம்?’’ என்று அடுத்த கொக்கியைப் போட்டார். “அப்புறம் விழுப்புரம்தான்.” என்று ஒரு குறும்புக்குரல் வந்ததும், கொல்லென்று சிரிப்பு எழுந்து அடங்கியது.
“ஆவியான தண்ணீர் லேசாக இருப்பதால் மேல போகுது. சூடு குறைந்ததும் அந்த ஆவி குளிர்ந்து மீண்டும் தண்ணீராக மாறுது. அப்படி மாறும்போது புவியீர்ப்பு காரணமாக மறுபடியும் பூமிக்கே வருது’’ என்று அன்பரசியின் நண்பி கயல்விழி எல்லாம் எங்களுக்குத் தெரிந்ததுதானே என்பதுபோல பொறுமை இழந்து சலித்தபடியே சொன்னாள்.
அன்பரசன், “இனிமேல் காக்க வச்சா நான் காலி’’ என்று கூற, பிஞ்சுகள் அனைவரும் கலீரெனச் சிரிக்கின்றனர். அன்பரசன் அந்த மூடியைப் பிடித்து மெதுவாகத் தூக்க அந்த மூடியின் உள்ளே சின்னச் சின்ன கொப்புளங்களைப் போல தண்ணீர் படர்ந்திருந்தது. அதைப் பார்த்ததும் பிஞ்சுகள் அட! என்று கண்களை அகல விரித்துப் பார்த்தனர்.
பிஞ்சுகள் இவற்றை ஏற்கனவே பார்த்திருந்தாலும், இந்த சிந்தனையோடு பார்த்ததில்லை அல்லவா? ஆகவே, அவர்களின் வியப்பைக் கண்டு குதூகலித்த அன்பரசன், “டொட்டடொய்ங்’’ என்று கத்தியபடி அன்பரசன், வானிலை இயக்குநர் எஸ்.ஆர்.ரமணனின் குரலில், “உருவமில்லாத,
பருவமில்லாத சிறுமழையோ அல்லது சிறுதுளிகளோ இந்த வீட்டில் இன்னும் சற்று நேரத்தில் ஒன்றாகவோ அல்லது ஒன்றன்பின் ஒன்றாகவோ மழையாகப் பெய்யும்’’ என்ற கூற, கேட்கவே வேண்டாம். குதூகலம் அங்கே கொடிகட்டிப் பறந்தது. அவர் சொல்லிமுடித்த அடுத்த மணித்துளியே, தட்டிலிருந்த நீர் “தட் தட்’’டென்று கீழே கொட்டியது. அனைவரும், “ஹோய்!…’’ என்று உற்சாகக் கூச்சலிட்டனர்.
“ஆனா, பூமியில் தண்ணீர் கீழே இருக்கு. சூரியன் மேலே இருக்கே. இது சரியா?” என்று அந்த குதூகலத்தினுடேயே பாக்கியா கேட்டாள். அன்பரசன் அவளது கன்னத்தை வலிக்காமல் கிள்ளி, “வெப்பம் மேல் இருந்து வந்தாலும் சரி, கீழேயிருந்து போனாலும் சரி, சூடான ஆவி மேலதான் போகும். அதுக்கு காரணம் புவியீர்ப்பு விசையிலிருந்து அது விடுபட்டுப் போவதுதான்.”
தப்பான கேள்வி கேட்டுவிடுவோமோ என்று அச்சப்பட்டு இதுவரை கேள்வி கேட்காமலிருந்த ஓவியா, தன் நண்பிகள் அனைவரும் கேட்டனரே எதுவும் தப்பாகவில்லையே என்று, “எல்லாம் சரி அங்கிள், ஆறு, குளம், குட்டை, சாலை என சென்னை, விழுப்புறம், கடலூர், புதுச்சேரின்னு எங்கெங்குப் பார்த்தாலும் தண்ணீரா குடியிருப்புகளை சூழ்ந்திருக்கே! மக்கள் எவ்வளவு துன்பப்படறாங்க.
இதுதவிர ஆறு, குளம், ஏரி, அணை எல்லாம் நிறைஞ்சு கடலுக்கு போற தண்ணீரும் ஏராளமாக இருக்கே. இவ்வளவு தண்ணீரா ஆவியாகி மேலே போச்சு.’’ என்று கேட்டேவிட்டாள். அன்பரசனும் கண்களை அகல விரித்து, “அவ்வளவு தண்ணீரா’’ என்று கைகளை அகல விரித்து அபிநயம் பிடித்தார். ஓவியா உட்பட அனைவரும் ‘கலீரென்று’ சிரித்துவிட்டனர். “எவ்வளவு தண்ணீர் வந்தாலும், அது வடிகிற மாதிரி வடிகால் வசதி இருந்தது.
ஆனா, மக்கள் தொகை பெருக்கம் எல்லாத்தையும் தலைகீழாக்கிடுச்சு. அதத்தான் இப்போ தமிழ்நாடு அனுபவிச்சுட்டு இருக்கு. இப்போ இருக்கிற அரசும் மக்கள் அரசா இல்லை. இதையெல்லாம் மாத்தனும்னா நமக்கு ஒரு நல்ல சிந்தனை தேவை. அதுக்கும் முன்னால இப்ப நமக்கு என்ன தேவைன்னா?
“ஆங்… அதுக்கு முன்னால நமக்கு என்ன தேவை? சோறுதான்’’ என்று அன்பரசி அம்மாவின் குரல் குறுக்கிட்டது. அன்புக்கும், அறிவுக்கும், சிரிப்புக்கும் பஞ்சமில்லாத அங்கே மீண்டும் ஒருமுறை பலத்த சிரிப்பொலி எழுந்தது.