பெரியார் 1000 சாதித்த செல்வங்கள்
7 முதல் 9-ஆம் வகுப்பினருக்கான பெரியார் 1000 தேர்வில் மாநில அளவில் முதலிடம் பெற்றவர்
அறிவுலக ஆசான் தந்தை பெரியார் அவர்களின் 137ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தின் பெரியார் சிந்தனை உயராய்வு மய்யமும், ‘பெரியார் பிஞ்சு’ இதழும் இணைந்து கடந்த அக்டோபரில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சுமார் 500 மய்யங்களில் ‘பெரியார் 1000’ வினா-விடைப் போட்டித் தேர்வினை நடத்தியது.
இத்தேர்வு முடிவுகள் 20.12.2015 காலை 8 மணிக்கு www.periyarquiz.com இணையதளத்தில் வெளியிடப்பட்டது.
பொதுவாக மாணவர்கள் மத்தியில் ‘பெரியார் 1000’ வினா-விடைத்தேர்வு என்றால் நல்ல மதிப்பும், எதிர்பார்ப்பும் ஏற்பட்டிருக்கிறது. இது போட்டித் தேர்வுகளுக்கு முன்னோடி என்பதையும் தாண்டி, ஏறக்குறைய தமிழ்நாடு முழுவதுமாக மாவட்ட வாரியாக முதல் மூன்று இடங்களிலும், மாநிலத்தில் முதலிடத்திலும் வெற்றி பெற்றவர்களுக்கு எல்லா மட்டத்திலும் கிடைத்த அங்கீகாரம் அவர்களை தலைநிமிரச் செய்திருக்கிறது.
டில்லிக்கு சுற்றுலா சென்றது, மேனாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமைச் சந்தித்து உரையாடியது உள்ளிட்ட பலப்பல அனுபவங்கள் தேர்ச்சியடைந்த மாணவர்களின் தன்னம்பிக்கையை பெருக்கியிருக்கிறது.
பெரியார் 1000 வினா விடைத் தேர்வு நான்காவது ஆண்டாக கடந்த அக்டோபர் மாதம் 10 ஆம் தேதி தொடங்கி 15 ஆம் தேதி வரையிலுமாக மூன்று கட்டங்களில் புதுவை, தமிழ்நாடு ஆகிய இரண்டு மாநிலங்களில் ஒரே சமயத்தில் நடைபெற்றது.
இதில் 6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை ‘பெரியார் 1000’ என்ற தலைப்பில் தமிழ், ஆங்கிலம், பிரெஞ்சு ஆகிய மூன்று மொழிகளிலும், 9ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்புகளுக்கு தமிழில் ‘சிந்தனைச்சோலை பெரியார்’ என்ற தலைப்பிலும் இரண்டு பிரிவுகளாக நடத்தப்பட்டு, இலட்சக்கணக்கான மாணவர்கள் தேர்வு எழுதினர்.
சென்ற ஆண்டைப்போலவே இந்த ஆண்டும் மாநில அளவில் தேர்வு பெறுகின்ற மாணவர்களுக்கு அறிவும், பொழுதுபோக்கும் ஒன்றாகச் சேர்ந்தது போல சுற்றுலா மற்றும் பல வாய்ப்புகள் அமையவிருக்கின்றன.
மழை, வெள்ளம் காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட தேர்வு முடிவுகள் 20.12.2015 காலை 8 மணியளவில் www.periyar quiz.com இணையதளத்தில் வெளியிடப்பட்டன. காலை முதலே பல்லாயிரக்கணக்கில் மாணவர்கள் தங்கள் மதிப்பெண்களைத் தெரிந்துகொள்ளும் ஆர்வத்துடன் இணையதளத்தைப் பார்த்து வருகின்றனர்.
இவ்விணைய தளத்தில் தங்களின் பெயர் முகவரியைப் பதிவு செய்யும் மாணவர்களுக்கு ‘பெரியார் பிஞ்சு’ சிறப்பிதழ் இலவசமாக அனுப்பி வைக்கப்படவுள்ளது.
மேலும், தங்கள் மதிப்பெண்ணுடன் கூடிய சான்றிதழையும் உடனுக்குடன் இணையத்தில் பெற்று அச்செடுத்துக் கொள்ளும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. இவைதவிர, மாவட்ட தேர்வு மய்யம் வாரியாக ஒருங்கிணைப்பாளர்களுக்கு மதிப்பெண் பட்டியல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
மாநில அளவில் வெற்றி பெற்ற 11 பேரில் செ.மனோ மட்டும்தான் முதல் பிரிவான ‘பெரியார் 1000’ தேர்வில் வெற்றி பெற்றிருக்கிறார். மீதி 10 பேர் ‘சிந்தனை சோலை பெரியார்’ என்ற இரண்டாவது பிரிவில் வெற்றி பெற்று சாதனை படைத்தவர்கள். 11 பேர்களில் 7 பேர் மாணவிகள் என்பது குறிப்பிடத்தக்கது.