சும்மா மொக்க போடாதீங்க
“பிஞ்சுகளா இந்த மழை போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா?” என்று கேட்க வேண்டாம். நினைத்தாலே போதும் நம்மை உண்டு இல்லையென்று ஆக்கிவிடுவார்கள் போலிருக்கிறது. மனிதன் செய்த இந்த மாபெருந் தவறுக்கு மழைக்கு கெட்ட பெயர் கிடைத்திருக்கிறது.
மழைதானே பூமிக்கே உயிர்ச்சத்து. பூமிக்கு என்றால் அதில் நாமும் அடக்கம்தானே! தண்ணீரில்தானே நாம் மூச்சு வாங்குகின்ற உயிர்வளி என்று சொல்லப்படுகிற ஆக்சிஜனும் உள்ளது. அதை நம்மால் வெறுக்கமுடியுமா? ஆகவே நாம் மழையை வெறுக்காமல் கொண்டாடவே வேண்டும். அதற்கான வாய்ப்பை அரசுகள் நமக்கு செய்துதர வேண்டும். அவ்வளவுதான்.
“சரி, போனதுபோகட்டும். வான் மழையைத்தான் பார்த்துவிட்டோம். ஒரு மாறுதலுக்காக வினாடிவினா மழையைப் பார்க்கலாமா?” என்று கேட்டதும் அன்றலர்ந்த ரோஜா போன்ற மலர்ந்த முகத்துடன் வாசலில் நின்றும், ஜன்னல் வழியே கையை வெளியே நீட்டி ‘ஜோ’வென்று பெய்யும் மழையைத் தொட்டும்,
கையில் பட்டுத்தெறிக்கின்ற மழைத்துளி முகத்திலும் படும்போது சிலிர்த்தும் பரவசப்படுகின்ற பிஞ்சுகள், வினாடிவினா மழை என்று சொன்னதும் சுருதி இறங்கிப்போய் ஆமையும், நத்தையும் தங்கள் தலைகளை உடலுக்குள் இழுத்துக்கொள்வது போல உற்சாகம் குறைந்து போயினர். ஆனால், அடுத்த நொடியே உற்சாகமாகத் தயாராகிவிட்டனர். வினாடி வினாப் போட்டியில் விளையாடுவதற்கா? அடப்போங்க! விளையாட இல்லை? வேடிக்கைப் பார்ப்பதற்கு!
சரி, விசயத்திற்கு வருவோம். சென்னையிலுள்ள அறிவியல் கழகம் கடந்த ஒருமாதமாக மாநில அளவில் நடத்திய ‘வினாடி வினா போட்டி’யில் இறுதிப்போட்டிக்கு அறிவுச்செல்வன், யாழ்திலீபன், தங்கமணி ஆகிய மூவரும் தேர்வு பெற்றிருந்தனர். இன்று தேர்வாகும் மூவரில் ஒருவர் அடுத்தாண்டு தேசிய அளவில் டில்லியில் நடைபெறும் போட்டியில் பங்குபெறுவர்.
மூவருக்கும் உள்ளுக்குள் ஒரே படபடப்பாக இருந்தது. மாணவர்களைக் காட்டிலும் மூவரின் வீ¢ட்டினருக்குத் தான் படபடப்பு அதிகம். மூவரும் சரியான நேரத்திற்கு போட்டி நடைபெறும் அரங்குக்கு வந்துவிட்டனர். அரங்கினுள் ஏராளமான பிஞ்சுகள் அமர்ந்திருந்தனர். அவர்களோடு போட்டியில் கலந்துகொள்ளும் மூன்று பிஞ்சுகளின் பெற்றோர்களுமாக அரங்கம் நிறைந்திருந்திருந்தது.
எல்லாமே மிகச்சரியான நேரத்திற்கு நடந்துகொண்டிருந்தது. போட்டியை நடத்துகின்ற-வரும் வந்துவிட்டார். அவர்
போட்டியில் கலந்துகொள்ள வந்த மூவரையும் வரவேற்றுப் பேசிவிட்டு போட்டியின் விதிகளைக் கூறினார். “கேள்விகள் கேட்கப்படும். பதில் தெரிந்தவர்கள் யார் வேண்டுமானாலும் மணியடிக்கும் பொத்தானை அழுத்தி மற்றவர்களை முந்திக்கொண்டு பதில் சொல்லாம்” என்று கூறிவிட்டு தொடங்கினர். அரங்கில் கனத்த மவுனம்.
“ஒரு நாளைக்கு 24 மணி நேரம் என்பது சரியா?”
தங்கமணி அனிச்சையாக பொத்தானை அழுத்திவிட்டு “தவறு” என்றான்.
“சரியான பதில் என்ன?”
அவளிடம் பதிலில்லை. அரங்கினுள்ளும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர். யாழ்திலீபன் பொத்தானை அழுத்தினான்.
“யெஸ்… புரொசீட்”
“23 மணி 54 நிமிடங்கள் சார்”
“தவறு வேற யாராவது?”
அறிவுச்செல்வன், “23 மணி 58 நிமிடங்கள்” என்றான்.
“அதுவும் தவறு. சரியான விடை 23 மணிநேரம் 56 நிமிடங்கள்.”
அரங்கினுள் ஓ….. என்ற ஓசை வேகமாக எழுந்து மெதுவாக அடங்கியது.
“பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமி தன்னைத்தானே சுற்றிக்கொள்ள எடுத்துக்கொண்ட ஆண்டுகள் எத்தனை?”
அறிவுச்செல்வன் சட்டென்று பொத்தானை அழுத்தி யாருக்காவும் காத்திருக்காமல், “18 மணி நேரம்.” என்றான்.
“சபாஷ். சரியான விடை! அறிவுச்செல்வன் மற்ற இருவரையும் ஒரு மதிப்பெண்ணில் முந்துகிறார். அடுத்த கேள்வி, “பூமியில் இருக்கும் புவிஈர்ப்பு விசையைவிட செவ்வாயில் குறைவா? அதிகமா?”
தங்கமணி, “அதிகம் சார்”
“தவறு” என்று சொன்ன அடுத்த வினாடியே முந்திக்கொண்ட யாழ்திலீபன், “குறைவு சார்” என்றான்.
அரங்கமே அவனது சமயோசித புத்தியை மெச்சி பலத்த சிரிப்புடன் கையொலி எழுப்பியது. அறிவுச்செல்வனும், தங்கமணியும்கூட வெட்கப் பட்டபடியே அவனது வேகத்தைப் பாராட்டி கைதட்டினர். கேள்வி கேட்பவர் வாய்விட்டுச் சிரித்துவிட்டார். தொடர்ந்து அவர் “யாழ்திலீபன், அறிவுச்செல்வன் இருவரும் தலா ஒரு புள்ளிகள் பெற்று சமமாகவுள்ளனர்.” என்றதும் அதற்கும் கைதட்டல் எழுந்தது.
அடுத்த கேள்வி, “யுரேனஸ் கிரகத்தில் கோடைக்காலம் 21 ஆண்டுகள். குளிர் காலம்… என்று முடிக்கும் முன்னரே 21 ஆண்டுகள் என்று மூவருமே சொல்லிவிட்டனர். அரங்கம் சிரிப்பாலும் கைதட்டலாலும் அதிர்ந்தது. கேள்வி கேட்பவர் ஒரு சின்ன இடைவெளிவிட்டு, “சரியான பதில்” என்றதும் மீண்டுமொரு முறை அரங்கம் கிடுகிடுவென நடுங்கும்படி அதிர கைதட்டல் எழுந்தது.
அவர் இன்னும் முடித்திருக்கவில்லை. “ஆனால், இருவர் சொல்லியிருந்தால் அரை அரை மதிப்பெண் கொடுத்திருக்கலாம். மூவரும் ஒரே நேரத்தில் சொல்லியிருப்பதால், இதை குரல்பதிவுக் கருவியின் (சென்சார்) துணைகொண்டு தேர்வு செய்யப்போகிறேன்.” என்று கூறிவிட்டு, தொண்டையைத் தொட்டுக்காட்டி இரண்டு கைகளால் திரை வடிவம் காட்டினார். எள் விழுந்தால்கூட கேட்கும் அளவுக்கு அவ்…வளவு அமைதி.
அனைவரும் திரையையே பார்த்துக்-கொண்டிருந்தனர். அந்தக் கருவியில் நுண்ணிய நேர வேறுபாடுகளைக்கூட துல்லியமாக கண்டறியும் வசதியிருந்தது. யார் முதலில் உச்சரித்தது என்று இன்னும் சற்று நேரத்தில் தெரிந்துவிடும். திடீரென்று அரங்கம் உயிர்பெற்றெழுந்ததுபோல பெரும் ஓசை அலையோசையைப்போல எழுந்தது. திரையில் தெரிந்த எழுத்துகளுக்காகத்தான் அந்த ஓசை.
அதில் தங்கமணியின் பெயரும் யாழ்திலீபனின் பெயரும் ஒரே வரிசையிலும், அறிவுச்செல்வனின் பெயர் அடுத்த வரிசையிலும் வந்திருந்தது. அறிவிப்பாளரின் குரல் ஒரு துள்ளல் ஓசையோடு, “யாழ்திலீபன் தங்கமணி இருவரும் தலா அரை அரை மதிப்பெண்” என்று அறிவித்தார். கணக்குப்படி யாழ்திலீபன் அரை மதிப்பெண்ணில் முன்னணியில் இருந்தான்.
அரங்கத்தினுள் மேலும் ஒரு பரபரப்பு ஏற்பட்டது. போட்டி முடிவடைய இன்னும் 5 நிமிடம்தான் இருந்தது. அதற்குள் யார் வெற்றிபெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு எகிறிக்கொண்டிருந்தது.
திரையில் தங்கமணி லு, யாழ்திலீபன் 1லு, அறிவுச்செல்வன் 1 என்று காட்டியது.
கேள்விகள் தொடர்ந்தது…
“விண்வெளியில் பயணம் செய்த முதல் மிருகம் இது கேள்வியல்ல, நானே சொல்லி விடுகிறேன். முதல் மிருகம் நாய். அந்த நாயின் பெயர் என்ன?”
அரங்கம் மீண்டும் கனத்த மவுனத்தில் வீழ்ந்தது. நேரம் கடந்து கொண்டிருந்தது. அந்தக் கேள்விக்கான நேரம் முடிந்ததும், “விடை… லைக்கா” என்று அறிவிப்பாளரே கூறிவிட்டு, “இரவு வானில் எத்தனை விண்மீன்களை வெறும் கண்களால் பார்க்க முடியும்.?”
தங்கமணி தவறாக அழுத்திவிட்டு, “2000 விண்மீன்கள்.” என்றாள். சட்டென்று நினைவுக்கு வராமல் தடுமாறிக்கொண்டிருந்த அறிவுச் செல்வனுக்கு தங்கமணியின் 2000 என்ற எண் உதவி செய்ய, “3000 விண்மீன்கள்” என்று பதில் சொன்னான்.
அறிவிப்பாளர் எந்த எதிர்விணையும் இல்லாமல் இருவரையும் மாறிமாறி பார்க்க, விடை சரியானதுதானா? இல்லையா? என்று தெரியாமல் அரங்கமும் போட்டியாளர்களும் ஊசி முனையில் அமர்ந்திருப்பதைப்போல அமைர்ந்திருந்தனர். திடீரென்று அவர் உற்சாகப்பந்தாக மாறி, “சரியான விடை” என்று அறிவிக்க ஒட்டுமொத்த அரங்கினர் உற்சாக பந்துகளாகவே மாறி எழுந்து நின்று “ஹேய்…” என்று கத்தியபடி கை வலிக்க வலிக்க தட்டினர்.
இப்பொழுது அறிவுச்செல்வன் 2, யாழ்திலீபன் 1லு. அறிவுச்செல்வன் அல்லது யாழ்திலீபன் இருவரில் ஒருவர் வெற்றி பெரும் வாய்ப்பு இருந்தது.
அதற்குள்… அறிவிப்பாளர் நேரம் முடிந்தது என்று சைகை காட்டினார். பார்வையாளர்கள் குழம்பிப் போயினர். இன்னமும் 1லு நிமிடங்கள் இருந்தது. அறிவிப்பாளர் மீண்டும் பேசுகிறார்.
கடைசிக்கேள்வி. இதற்குப்பதில் சொன்னால் 2 மதிப்பெண் என்று அரங்கத்தை ஆச்சரியத்தில் ஆழ்த்திவிட்டு. “என்னை நானே கேள்வி கேட்டுக்கொண்டால் நான் யார்? தமிழில் அல்ல!” இதுதான் கேள்வி என்று முடித்தார். அனைவரும் திகைத்துப்போயினர்.
தங்கமணி மட்டும் எதுவோ ஒன்று நினைவை உந்தித்தள்ள, who am i என்று கூறிவிட்டு, “ஹூவாமை சார்” என்றாள் சந்தேகத்துடன். இப்பொழுது அறிவிப்பாளர் துள்ளிக்குதித்தார். “சரியான விடை. 2லு மதிப்பெண் பெற்று தங்கமணி வெற்றிபெறுகிறார்” என்று கத்த அனைவரும் நினைவாற்றல் மட்டும் வெற்றி பெறாமல் சுயசிந்தனையும் சேர்ந்து வெற்றி தந்ததை எண்ணியோ அல்லது வேறு எதுவோ நமக்குத் தெரியாது…. நம்பமுடியாமல் திகைத்து நிற்கின்றனர்.