பிஞ்சுத் திரை
எப்போதும் குழந்தைகளுக்கான படங்கள் என்றால் பெற்றோர்கள் தான் அழைத்துச் செல்வார்கள். நிறைய குழந்தைகள் நடித்து, குழந்தைகளுக்குப் பிடிக்கும் வகையில் பெற்றோர்களுக்காக உருவாக்கப்பட்டிருக்கும் படம் தான் பசங்க 2. அதைப் பற்றிய விமர்சனத்தைத் தான் இங்கே எழுதியிருக்கிறார் தளபதி மாமா. படித்துவிட்டு படத்தையும் பார்த்துவிடுங்கள்.. அப்பா, அம்மாவோடு!
பசங்க, மெரினா படங்களை இயக்கிய பாண்டிராஜ் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் மேலும் ஒரு சிறந்த படைப்பு. பெற்றோர்களே உங்கள் ஆசைகளை, கனவுகளை, விருப்பு வெறுப்புகளை உங்கள் குழந்தைகள் மீது திணிக்காதீர்கள் என்பது தான் படத்தின் மய்யக்கரு.
இயற்கை பிரசவிப்பு இயலாதபோது ஆபரேஷன் செய்து குழந்தையை வெளியில் எடுப்பது மருத்துவ வளர்ச்சி. தன் குழந்தை மருத்துவராக வேண்டும் என்ற ஆசையில் அந்த ஆபரேஷனுக்கே நேரம் குறிக்க ஜோதிடரை அணுகும் முட்டாள்தனத்தை நாசூக்காக காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர்.
குழந்தை வயிற்றில் வளரும்போதே பள்ளிக்கு விண்ணப்பிப்பதும், கட்டணம் அதிகம் என்பதாலேயே அந்தப்பள்ளி உயர்ந்தது எனக் கருதும் மக்களின் மனப்போக்கையும் சுட்ட தவறவில்லை.
”பசங்க கெட்ட வார்த்தைகளைப் பேசுறதில்லை. கேட்ட வார்த்தைகளைத்தான் பேசுறாங்க.”
”மதிப்பெண்களை எடுக்கணும்னு நினைக்காம மதிப்பான எண்ணங்களை வளர்க்கணும்”
போன்ற நறுக் சுருக் வசனங்களால் அரங்கம் கரவொலியில் நிறைகிறது.
“நம்ம காலத்தில் அரசாங்கம் பள்ளிகளை நடத்தியது. சாராயக் கடைகள் தனியாரால் நடத்தப்பட்டது. இப்போ சாராயக்கடைகள் அரசாங்கம் நடத்த பள்ளிகள் தனியாரால் நடத்தப்படுகிறது” என வயதான பெரியவர்கள் பேசிக்கொள்ளும் காட்சி அரசுக்கு சுழற்றப்பட்ட சாட்டை.
மருத்துவர் வேடமிட்ட நடிகர் சூர்யா மூலம், குழந்தைகளை வளர்க்கவும், அவர்களிடம் பழகவும் பெற்றோர்களுக்கு நிறைய சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். ஆசிரியையாக நடித்திருக்கும் அமலா பாலும் இதில் அடக்கம்.
குழந்தை நட்சந்திரங்களான நிஷேஷ், வைஷ்ணவி இருவரும் புதுமுகங்கள் என்பதை நம்ப முடியவில்லை.
நிஷேஷின் குத்தாட்டம் அவ்வப்போது பார்ப்பவர்களையும் எழுந்து ஆடவைக்கிறது. பள்ளிகளுக்கான போட்டியில் கதைசொல்லி கலங்கடிக்கிறார் வைஷ்ணவி.
முனிஷ்காந்த்-_-வித்யா, கார்த்திக்குமார்_-பிந்துமாதவி ஆகியோரின் கதாபாத்திரங்கள் இந்தக்கால இளம் பெற்றோர்களை கண் முன் நிறுத்தியிருக்கின்றன. இயக்குநர்கள் சமுத்திரக்கனி, ஆர்.வி.உதயகுமார், ராமகிருஷ்ணன், இசையமைப்பாளர் சிற்பி, இமான் என கௌரவத்தோற்றங்களுக்கும் பஞ்சமில்லை.
சமுத்திரக்கனி தன் மகளை பள்ளிக்கு அழைத்துச்செல்லும் வழியில் அவள் படிக்கும் அரசுப்பள்ளி ஆசிரியர் தன் குழந்தையை சேர்க்க தனியார் பள்ளியில் காத்திருப்பதைப் பார்த்து “உங்களுக்கே, உங்கள் பள்ளிகள் மீது நம்பிக்கை இல்லையெனில்,
மற்றவர்களுக்கு எப்படி வரும்?” எனக் கேட்டு அரசுப் பணியில் இருப்பவர்கள் தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளிகளிலேயே சேர்க்க சட்டம் இயற்றவேண்டும் என்று சொல்வது அருமை. ரியாலிட்டி ஷோக்களின் போலித் தன்மையையும் தோலுரிக்கத் தவறவில்லை இயக்குநர்.
படம் முழுக்க வண்ணக் கலவையாய் படைத்தளித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியன். நெருடல் இல்லாத இசை.
மொத்தத்தில் குழந்தைகள் கண்டுகளிக்கவும் பெற்றோர் கற்றுகொள்ளவுமான படம் பசங்க 2! இயக்குநருக்கு வாழ்த்துகள். படத்தில் நடித்ததோடு தயாரிப்பிலும் பங்கெடுத்த சூர்யா பாராட்டுக்குரியவர்.
-_ -கி.தளபதிராஜ்