எளிமையாய்க் கற்போம் எல்லா குறள்களையும்!
திருக்குறள் 2000 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட ஒரு அறநெறி நூல். உலக மாந்தர்கள் அனைவரும் கண்டு, உணர்ந்து, பின்பற்ற வேண்டிய ஒழுகலாறுகளே, நாடு, இனம், மொழி கடந்து உலகில் மகிழ்வாக வாழ விரும்பும் ஒவ்வொரு மாந்தரும் படித்து உணருவதற்காகவே இப்பாக்கள் படைக்கப்பட்டுள்ளன.
திருக்குறள் எழுதப்பட்டு 2000 ஆண்டுகளுக்கு மேலானதால் சொற்கள் ஒவ்வொரு தலைமுறையிலும் திரிந்து வேறுபட்டு, இப்பொழுது உரை எழுதிப் படிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.
நம் வீட்டிலும் குழந்தைகள் திருக்குறள் படிக்க வேண்டும் என்று எல்லோரும் சொல்கிறார்கள். பலரும் பரிசளிக்கிறார்கள். அடிக்கடி திருக்குறள் போட்டிகளும் நடைபெறுகின்றன என்றால், அதன் முக்கியத்துவம் நமக்கும் தெரியுமல்லவா?
1330 குறள்களையும் படித்து, எப்படி கேள்வி கேட்டாலும் சொல்லும் வல்லவர்களும் நம்மில் இருக்கத் தான் செய்கிறார்கள். அதேநேரம் அவர்கள் எப்படி படித்தார்கள் என்று நமக்கு ஒரு சந்தேகமும் இருக்கத் தான் செய்கிறது.
இதோ, அதற்கென ஒரு முறையைப் பரிந்துரைக்கிறார் புத்தகர் பொள்ளாச்சி நசன். யாருடைய உதவியும் இல்லாமல் தாங்களாகவே படித்துப் புரிந்து கொண்டு, தங்கள் வாழ்முறையைச் செப்பமாக அமைத்துக் கொள்வதற்காக இந்தத் திருக்குறள் படித்தல் பயிற்சியினை எளிமையாக்கி வடிவமைத்துள்ளார்.
அதன் படி முதல் கட்டமாக 303 குறள்களையும், அடுத்த கட்டமாக 500 குறள்களையும், நிறைவாக 527 குறள்களையும் அடையாளம் கண்டு, படித்தால் எளிதில் நினைவில் வைத்துக் கொள்ளலாம் என்கிறார் பொள்ளாச்சி நசன்.
“ஒவ்வொரு குறளையும் புரிந்து படிக்க வேண்டும்; தனித்தனிச் சொல்லுக்கான பொருளை உங்களுக்குள் உணர்ந்து கொண்டு படிக்க வேண்டும்; இதனை இசையுடன் படிக்க வேண்டும்.
இதன்மூலம் நீங்கள் படித்த திருக்குறள் உங்களுக்குள் பதிந்து விடும்” என்று சொல்லும் அவர் இதற்கென தனி இணையப் பக்கத்தில் (http://win.tamilnool.net/tkl300/index.html) தகவல்களையும், விளக்கங் களையும், அவர் பரிந்துரைக்கும் குறள்களின் பட்டியலையும் பதிவேற்றியுள்ளார். வேண்டு-வோர் அவ்விணையத்திற்குச் சென்று படிக்கலாம். சந்தேகங்களை அவரை செல்பேசியில் அழைத்தும் தீர்த்துக் கொள்ளலாம்.
– பவானி