சென்னையில் சுயமரியாதைக் குடும்ப விழா
கடந்த 17.01.2016 ஞாயிற்றுக்கிழமை அன்று சென்னை பெரியார் திடலில் திராவிடர் திருநாளின் மூன்றாம் நாளில் குடும்ப விழா நடைபெற்றது. அந்நிகழ்ச்சியில் நான் என் குடும்பத்துடன் கலந்து கொண்டேன். நாங்கள் மகிழ்ச்சிக் கடலில் திளைத்தோம். எங்களைப்போல் பல குடும்பங்கள், ஆசிரியர் தாத்தா மற்றும் பல தோழர்கள் பங்கேற்றார்கள்..
அந்நிகழ்ச்சியில் எங்களுக்கும் எங்களின் பெற்றோர்களுக்கும் பல விளையாட்டுப் போட்டிகள் நடந்தது. அவை ஓட்டப் பந்தயம், கயிறு இழுத்தல், பம்பரம் விடுதல், அம்பு விடுதல், செய்கை விளையாட்டு, உறி அடித்தல், கபடி, எலுமிச்சை ஸ்பூன், பாட்டுப் போட்டி, பேச்சுப் போட்டி, கதைகள் கூறுதல், பெண்ணடிமை மற்றும் மூடநம்பிக்கை கருத்துகளை ஒழிக்கும் விளையாட்டின் மூலம் எடுத்துரைக்கும் வகையில் அமைந்த பரமபதம்,
நீர் நிரப்புதல், டயர் ஓட்டுதல், கால்பந்து, கூடைப்பந்து என்று பல போட்டிகள் நடந்தது. இதில் நாங்கள் அனைவரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு வெற்றி, தோல்வி என்று இரண்டையும் சந்தித்தோம். ஆனால் எங்களுக்கு அவற்றில் உள்ள ஈடுபாடுகள் குறையவில்லை. நாங்கள் ஆர்வத்துடன் இருந்தோம்.
குறிஞ்சித் திணை தொடர்பான பலவிதமான வண்ணப் புகைப்படக் கண்காட்சி, குறிஞ்சிக் குடில், வாத்து, முயல், நீருற்று, கோழிகளில் சில வகைகள், கவுதாரி, காடை என குறிஞ்சித் திணை சார்ந்து அமைக்கப்பட்டிருந்தது-.
உணவுத் திருவிழா பல மாவட்டங்களின் சிறப்பு வாய்ந்த திண்பண்டங்கள் கொண்ட கடைகளும் அமைக்கப்பட்டிருந்தது. பிறகு நாங்கள் குழுக்கள் குழுக்களாக ஆசிரியர் தாத்தாவுடன் இணைந்து புகைப்படங்கள் எடுத்துக்கொண்டோம்.
எங்களுக்கு இன்னும் பல புதிய நண்பர்களுடனும், குடும்பங்களுடனும் நட்பு மலர்ந்து. நாங்கள் அனைவரும் ஒரே குடும்பம் போன்று இணைந்து அந்நிகழ்ச்சியில் பங்கேற்றோம். குடும்பவிழா பற்றி நான் என் பள்ளி நண்பர்களிடமும்,
என் குடும்பத்தைச் சார்ந்தவர்களிடமும் சொல்லி மகிழ்ந்ததோடு மட்டுமல்லாமல் அடுத்த ஆண்டு குடும்ப விழாவிற்கு கலந்துகொள்ள அவர்களை வருமாறு அழைத்தேன். குடும்ப விழாவைப் பற்றி கூறும்பொழுது என் நண்பர்கள் அனைவரும் வியப்புடன் கேட்டு மகிழ்ந்தார்கள்.
அன்றைய நிகழ்வுகளை, மகிழ்வுகளை மீண்டும் மீண்டும் நினைக்கத் தூண்டும் வகையில் குடும்ப விழா நெஞ்சம் நிறைந்து மகிழ்சியுடனும் சிறப்புடனும் இருந்தது.
– யாழ்ஒளி, சென்னை