சும்மா மொக்க போடாதீங்க
இதோ, வகுப்பாசிரியர் லட்சுமியின் உத்தரவுப்படி 9 ஆம் வகுப்பு பயிலும் சுந்தரமூர்த்தி, தலைமை ஆசிரியரின் அறைக்குள் நுழைப்போகிறான். அய்யோ… வாசலில் யாருமே இல்லையே! எப்படி உள்ளே போவது? நாமாகவே நுழையலாமா? இல்லை இப்படியே வெளியில் ஓடிப்போய் விடலாமா? என்றுகூட தோன்றிவிட்டது அவனுக்கு.
தலைமை ஆசிரியர் மீது அவனுக்கு அவ்வளவு பயம். காரணம் அவர் ‘அப்படிப்பட்டவர்! இப்படிப்பட்டவர்!’ என்று பல வதந்திகள் பள்ளியில் உலவின. ஏதோவொரு உந்துதல் ஏற்பட்டு கதவை மெதுவாகத் திறந்து உள்ளே போனான். கதவுக்குப்பின்னால் ஒரு திரைச்சீலை இருந்தது. அதையும் விலக்கும் முன் பேச்சுக்குரல் கேட்டு, சட்டென்று நின்றான்.
ஓ… தலைமையாசிரியர் யாருடனோ பேசிக் கொண்டிருக்கிறார் போலிருக்கிறதே! இதற்கு வேறு தனி தண்டனை கிடைக்கும் போலிருக்கிறதே என்று தன்னைத்தானே நொந்து கொண்டான்.
குரல் தொடர்கிறது…
“பாருங்க சார்… காட்டுல இருக்கிற கரடி, புலி, சிங்கம் இதுக்கெல்லாம் மணி பார்க்கத் தெரியுமா? நாள் கணக்கு மாதக்கணக்கு தெரியுமா? இல்லை ஆண்டுக் கணக்குதான் தெரியுமா? இதெல்லாம் மனுசனுக்குத்தான். ஏன்? மனிதன்தான் நாகரிகம் அடைஞ்சுகிட்டு வர்றான். தன்னுடைய வசதிக்காக இதை உருவாக்கிகிட்டான்.”
“நீங்க சொல்றதும் சரிதான்.”
இந்த பதில் குரல், சுந்தரமூர்த்திக்கு தூக்கிவாரிப் போட்டது போலிருந்தது. இது தனது இங்கிலீஷ் ஆசிரியர் மாணிக்கத்தின் குரலல்லவா? ஓ… இன்று தனக்கு இரட்டை தண்டனை நிச்சயம்தான் என்று எண்ணி இன்னும் பயந்தான். வேறு வழியின்றி தொடர்ந்து குரலைச் செவிமடுத்தான்.
“தொடக்கத்துல ஒரு நாளுங்கறதை பகல் மட்டும்தான் நினைச்சான். அதனாலதான் ஜோதிடத்திலே நல்லநேரம், கெட்டநேரம் இரவுல எதுவும் இருக்காது. காலையில 6 மணிக்குத் தொடங்கி மறுநாள் 6 மணி வரைக்கும் ஒருநாள்னுகூட இருந்தது. மதியம் 12 மணிக்குத் தொடங்கி மறுநாள் மதியம் 12 மணியைத்தான் ஒரு நாளுன்னு சொன்னாங்க. இது எல்லாத்துக்கும் வரலாற்றுல பதிவுகள் இருக்குது.”
“அட! இவ்வளவு விசயம் இருக்குதா?!”
“பின்னே, சொல்லத் தொடங்கிட்டதனாலே மீதியையும் சொல்லிடறேன். நாளுக்குப்புறம் வாரம் எப்படி வந்ததுங்கறீங்க? இதுவும் ரோமானியர்களின் கணக்குத்தான். அவர்கள் நடத்தின சந்தையைக் கணக்கிட்டு வாரம் 8 நாளுன்னு வச்சுகிட்டாங்க. எகிப்தியர்கள் 10 நாளுன்னு வச்சிகிட்டாங்க. அசீரியான்னு ஒரு நாகரிகம். அவங்க 5 நாளுதான் ஒரு வாரமுன்னு வச்சிருந்தாங்க. கடைசியிலே 7 நாள் கணக்கு வந்துச்சி. இதெல்லாம் அவனவன் வசதிக்காக வந்ததுதான்.”
மாணிக்கம் ஆசிரியர் சங்கடத்தில் நெளிந்தார். ஏதோவொன்று உறுத்தியது அவருக்கு. தலைமையாசிரியரின் குரல் தொடர்கிறது…
“மாதக்கணக்கு முதலில் 10 மாதம்தான் இருந்தது. ‘ஜூலியட் சீசர்’ வந்தான். அவனுக்குன்னு ஒரு மாதம். அதுதான் ஜூலை! ‘அகஸ்ட்டஸ் சீசர்’ வந்தான். அவனுக்குன்னு ஒரு மாதம். அதுதான் ‘ஆகஸ்ட்’!”
“அட!” என்றார் மாணிக்கம் ஆசிரியர் தன்னையறியாமல். அவருக்கு மட்டுமல்ல, திரைச்சீலைக்குப் பின்னால் நின்று ஒட்டுக்கேட்டுக் கொண்டிருந்த சுந்தரமூர்த்திக்கும்தான் இந்தத் தகவல்களில் ஒரு பிடிப்பு ஏற்பட்டுவிட்டது.
தலைமையாசிரியரின் குரல் தொடர்கிறது…
“இன்னும் கேளுங்க… பூமி தன்னைத் தானே சுற்றி வந்தா ஒருநாள்! அதே பூமியை சந்திரன் ஒருமுறை சுற்றி வந்தா ஒரு மாதம்! அதே பூமி சூரியனை ஒரு முறை சுற்றி வந்தா ஓர் ஆண்டுன்னு இப்போ அறிவியல் பூர்வமா கண்டுடிச்சு சொல்லியிருக்காங்க. நாம பயன்படுத்திகிட்டு இருக்கிறோம். ஏன் திசைகளுக்குப் பெயர்கள் கூட மனுசனா வச்சுகிட்டதுதானே! இயற்கைக்கு இந்த கணக்கு வழக்கெல்லாம் கிடையவே கிடையாது.
ஆனால், மனுசங்களுக்கு? அதனாலதான் இத்தனை மணிக்கு பள்ளிக்கூடம். இத்தனை மணிக்குள்ள வந்திடமுன்னு நாம ஒரு கணக்கு வச்சிருக்கோம். ஆசிரியாரா இருந்துகிட்டு நீங்களே இப்படி தொடர்ச்சியாக தாமதமாக வரலாமா?”
சுந்தமூர்த்திக்கு மீண்டுமொருமுறை தூக்கிவாரிப் போட்டது. இங்கிலீஷ் ஆசிரியரே தாமதமாக வந்திருக்கிறாரா?
ஆசிரியர் வந்ததற்கே இப்படியென்றால், தாமாதமாக வந்துகொண்டிருக்கும் நமக்கெப்படியோ?! என்று ஏதேதோ எண்ணி நடுங்கிக்கொண்டிருந்தான்.
தலைமையாசிரியரின் குரல் தொடர்கிறது…
“மறுபடியும் தாமதமுன்னு இப்படி வந்து நிற்கவேண்டாம். போங்க, போய் வேலையைப் பாருங்க.”
மாணிக்கம் ஆசிரியர் தானிருக்கும் பக்கமாகத்தான் வரப்போகிறார் என்று சுந்தரமூர்த்தி தவறாக எண்ணி, பரபரப்படைந்தால் பக்கத்தில் வைக்கப்பட்டிருந்த பூக்கள் வைத்திருந்த அலுமினியக் குவளை கீழே விழுந்து பலத்த ஓசை எழுப்பிவிட மாட்டிக்கொண்டான்.
“யாரது?!”
தலைமையாசிரியரின் கணீரென்ற குரல் சுந்தரமூர்த்தியை உள்ளே வரவைத்துவிட்டது. அவனைப்பார்த்ததும் இப்போது தலைமையாசிரியர் திடுக்கிட்டுவிட்டார். அவன் தலைமையாசிரியரை எதிர்கொள்ளத் தயாரானான்.
“நீ இங்க எப்ப வந்தே-?”
“நீங்க காட்டுல இருக்கிற கரடி, புலி, சிங்கம் பத்தி இங்கிலீஸ் ஆசிரியர்கிட்ட பேசும் போதே…”
“ம்ம்… லேட் கமிங்கா…?”
“ஆமாம் சார்…”
தலைமையாசிரியருக்கு சங்கடமாகிவிட்டது. இதே விசயத்திற்காக ஆசிரியரை வெறும் பேச்சளவோடு மாணவனுக்கு தெரியும்படியே விட்டாயிற்று. இது வெளியே தெரியாமல் தடுப்பது எப்படி? என்று எண்ணியவர், இறுதியாக ஒரு முடிவுக்கு வந்தார்.
“இங்க பாருப்பா உங்க வகுப்பாசிரியர் சொல்லி கேட்காததனாலதான் இங்க அனுப்பிச்சிருக்காங்க. நான் உன்னை தண்டிக்க விரும்பலே. ஆனால், இங்கே நடந்ததையெல்லாம் நீ வெளியிலே போய் சொல்லிட்டா எல்லா கட்டுப்பாடுமே குலைஞ்சு போயிடும். என்ன பண்ணலாம் நீயே சொல்லு?”
சுந்தரமூர்த்திக்கு தலைமையாசிரியர் மீது எப்போதுமில்லாத அளவுக்கு மரியாதை ஏற்பட்டிருந்தது. அத்தோடு அவர்மீது ஏற்பட்டிருந்த பயமும் விலகிவிட்டது. அவர் விதிக்கும் கட்டுப்பாடு குலையாமலிருப்பதற்கு தான் என்ன செய்ய வேண்டுமென்று அவனுக்கு தெளிவாக விளங்கவிட்டது.
இனிமேல் தன்னால் தாமதமாக வரவே முடியாது என்றும் அவனுக்குத் தோன்றியது. ஏதோவொரு வேகத்தில் தலைமை ஆசிரியரிடம் அனுமதி பெறாமலேயே சட்டென்று வெளியேறி விட்டான். தலைமையாசிரியருக்கு புதிராகப்போய்விட்டது. என்ன செய்யப்போகிறானோ இவன் என்று தெரியாமல், வேறு வழியின்றி அவரும் அவனைப்பின் தொடர்ந்தார்.
இன்று புதிதாய் பிறந்தவன் போல உற்சாகமாகச் சென்ற சுந்தரமூர்த்தி தன்னுடைய வகுப்புக்குள் நுழையும் முன், சுற்றும்முற்றும் பார்த்துவிட்டு கைகளால் கண்கள் இரண்டையும் நன்றாக கசக்கிவிட்டுக்கொண்டு திடீரென்று தேம்பித்தேம்பி அழுதுகொண்டு உள்ளே நுழைய அனுமதி கேட்பதுபோல நின்றான். அவனைப்பார்த்ததும் லட்சுமி ஆசிரியருக்கே சங்கடமாகப் போய்விட்டது. மாணவர்களுக்கும்தான்.
ஆனால், நடைபாதையிலிருந்து அந்த வகுப்பின் ஜன்னல் வழியாக உள்ளே நடப்பதைப்பார்த்த தலைமையாசிரியர் உற்சாகத்துடன் வசீகரமாகப் புன்னகைத்துக் கொண்டே நடையைக் கட்டினார்.