திணித்து வருவதல்ல திறமை!
குழந்தை வளர்ப்பு என்பது வேறு; குழந்தையை உருவாக்குதல் என்பது வேறு. இந்த வேறுபாடு பல பெற்றோருக்குப் புரிவதில்லை; அறிவதும் இல்லை.
குழந்தை வளர்ப்பு என்பது, குழந்தைக்குத் தேவையான உணவு, உடை, மருத்துவம், பொழுது-போக்கு, உடற்பயிற்சி, அன்பு, ஆதரவு, பிணைப்பு, பாசம் இவற்றைக் கொடுத்து பிறந்தது முதல் வளர்ப்பது.
ஆனால், குழந்தை உருவாக்கம் என்பது வாழ்க்கை வடிவமைப்பு.
நடைமுறையில் பல பெற்றோர்கள் இந்த இரண்டையுமே முழுமையாக தாங்களே தீர்மானிக்கிறார்கள். “சந்தோஷ் சுப்பிரமணியன்” என்ற ஒரு திரைப்படத்தில் இது மிகச் சிறப்பாகக் காட்டப்பட்டுள்ளது. பிள்ளையின் வாழ்வை பெற்றோரே வாழ்வது போல அது ஆகிவிடும்.
ஒரு வாகனத்தை ஓட்டுநர் செலுத்துவதுபோல, பிள்ளைகளை பெற்றோர் செலுத்தும் நிலை வந்துவிடும். பிள்ளைகள் வாகனம் அல்ல; அவர்கள் உயிருள்ள, உணர்வுள்ள, நோக்குள்ள, விருப்பம் உள்ள, மானமுள்ள, மரியாதை விருப்பும், புகழ் விரும்பும் மனிதர்கள்.
இதை உணராத, அறியாத காரணத்தால் பெற்றோர் தங்கள் பிள்ளைகள் என்ன விரும்புகிறார்கள், என்ன எண்ணுகிறார்கள், என்ன கூறுகிறார்கள் என்பதை அறிய முற்படுவதும் இல்லை; காதுகொடுத்துக் கேட்பதும் இல்லை.
நான் சொல்வதைச் செய்! (Do what I say!) என்பதே நடப்பில் பெற்றோரின் அணுகுமுறையாக உள்ளது. ஆனால், இந்த அணுகுமுறை குழந்தைகளை அடிமைப்படுத்த, அடக்கியாள அல்ல. மாறாக, பிள்ளைகளின் மீதும் அவர்களின் வளர்ச்சிகளின்மீதும் உள்ள அளவுக்கதிமான அக்கறையினால்.
அந்த அன்பும், அக்கறையும் பிள்ளைகளின் விருப்பங்களை, நோக்கங்களை, சாதனைகளை, தன்னெழுச்சியைத் தகர்த்து விடுகின்றன என்பதை பெற்றோர் தவறாது கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும்.
பிள்ளைகளின் தன்னெழுச்சியான, தன்னார்-வத்துடனான, தன் விருப்ப இலக்கு நோக்கிய வாழ்வை வாழ பெற்றோர் பின்வருவனவற்றைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
குழந்தைகளை குழந்தைகளாக வாழ விடவேண்டும்!
குழந்தைகளுக்கென்று சில சிறப்பான இயல்புகள் இருக்கும். அதன்படி அவர்கள் செயல்பட அனுமதிக்க வேண்டும். ஒரு முதிர்ச்சி பெற்ற மனிதனின் வாழ்வை பிள்ளைகளிடம் எதிர்பார்க்கக் கூடாது.
ஆட்டம், பாட்டு, குறும்பு, கும்மாளம், ஓடுதல், குதித்தல், குழந்தைத்தனம்! அவற்றை அறவே பறித்து எறிந்து, அவர்கள் நம்மைப்போல வாழ வேண்டும்; எப்போதும் படிக்க வேண்டும், எழுத வேண்டும் என்று எதிர்பார்ப்பது அறியாமையாகும்.