படிப்பு இனிது! தேர்வு எளிது!
படிப்பு இனிது! தேர்வு எளிது!
“ஆத்தாடி… இந்த மாசம் மார்ச்… அடுத்து ஏப்ரல்! போச்சு… போச்சு… முழு ஆண்டுத் தேர்வு வரப்போவுது…” அப்படின்னு கதறுற மக்களா நம்ம பெரியார் பிஞ்சுகள் இருக்க மாட்டீங்கன்னு நம்புறோம்.
ஏன்னா, பாடம், படிப்பு எல்லாம் நம்ம அறிவைப் பெருக்க, அதையும் முறையோடு கற்க, கற்றலை வழிமுறைப்படுத்தத் தான்! தேர்வுக்காக படிக்கிறது எந்த விதத்திலும் அறிவை வளர்க்கப் போவதில்லை. அது நாம் கற்றதை அளந்து பார்க்க இப்போதைக்கு இருக்கும் ஓர் அளவுகோல். அவ்வளவு தான்.
பாடம் நடத்துகிற போதே ஒழுங்காகக் கவனித்து, சந்தேகம் வந்தால் புரியும் வரை கேட்டு, மனப்பாடம் என்னும் மாயையிலிருந்து விலகி, புரிந்து படித்து, படித்துப் புரிந்து கொண்டிருப்பீர்கள் அல்லவா? அதனால் நமக்கு தேர்வு பயம் அவசியமில்லை. எந்தக் கவலையுமில்லாமல் தேர்வை எழுதி வாருங்கள். பதற்றப்படாமல், பதற்றப்படுத்துபவர்கள் பக்கத்திலும் இல்லாமல் இன்பமாய் தேர்வுக் கூடத்துக்குச் செல்லுங்கள்.
வாழ்க்கை ஒவ்வொரு நொடியிலும் நடத்தும் தேர்வில் வெற்றி பெற்றுக் கொண்டிருக்கும் நமக்கு, இந்தத் தேர்வுகளெல்லாம் ஜுஜூபி தானே! ம்ம்ம் சீக்கிரம் நன்றாகத் தேர்வை முடித்துவிட்டு, கோடையைக் கொண்டாட வாருங்கள். அறிவைப் பெருக்கியபடி, வாழ்வை ருசிப்போம்.
விடுமுறை, கோடைக் கொண்டாட்ட இதழ்களில் என்னென்ன வேண்டும் என்பதையும் மறக்காமல் எங்களுக்கு எழுதுங்கள்!