குழந்தைகள் நாடகம்
குழந்தைகள் நாடகம்
காப்போம் வாரீர்
இடம்: வீட்டு வாசல்
பங்கேற்போர் : சுமதி, செல்வி, அம்மா கற்பகம், அப்பா சுந்தரம், பெரியப்பா
தேவையான பொருள்கள்: பெரிய பிளாஸ்டிக் பை. அதனுள் சின்ன பிளாஸ்டிக் பொட்டலங்கள்
காட்சி : 1
(சுமதி வீட்டு வழியாக செல்வி வருகிறாள் சுமதியைப் பார்த்து)
செல்வி: என்ன சுமதி எங்க கிளம்பிட்ட…?
சுமதி: செல்வி நானு, எங்க அம்மா, ஊருல இருந்து வந்திருக்கிற எங்க பெரியப்பா, எல்லாரும் பீச்சுக்குப் போறோம்! நீயும் வர்றியா!
செல்வி: வறேன் சுமதி… ஒரே ஒரு நிமிஷம் இருங்க… நான் போயி எங்க அம்மாக்கிட்டே சொல்லிட்டு வந்திடுறேன்.
சுமதி: சீக்கிரம் ஓடியா…
(செல்வி ஓடுகிறாள். சுமதியின் அம்மா உள்ளிருந்து வந்து….)
அம்மா: என்னா சுமதி புறப்படலாமா?
சுமதி: அம்மா! அம்மா!! ஒரு நிமிஷம் இருங்கம்மா எங்க கிளாஸ்ல படிக்கிறாளே செல்வி… அவளும் நம்மகூட வறாளாம்… அவங்க அம்மாக்கிட்டே கேட்டுக்கிட்டு வர போயிருக்காள். இப்ப வந்துடுவாள்.
அம்மா: சரி… அவ வந்ததும் கூப்பிடு நாம போலாம்!
(சுமதி அம்மா உள்ளே போகிறாள்)
சுமதி: இதோ வந்துடுறேன்னு போனா. ஆளக் காணமே…
(செல்வி பெரிய பிளாஸ்டிக் பையுடன் வருகிறாள்)
வா செல்வி… என்ன இது இவ்வளவு பெரிய பொட்டலம்….
செல்வி: இதுவா… கடற்கரைக்கு போயி, நாம சாப்பிட பாப்கான், முறுக்கு, சீட, அதிரசம், தண்ணி தாகம் எடுத்தா குடிக்க தண்ணி எல்லாமே கொண்டு வந்திருக்கேன். உனக்கும் சேத்துதான்…
சுமதி: அங்கேயே இதெல்லாம் விக்குமே அதை வாங்கி சாப்பிடலாமே…
செல்வி: ஊகூம்… அதெல்லாம் நல்லதா இருக்காது… அதனாலதான் எங்க அம்மா தயார் செய்ததை சின்ன சின்ன பிளாஸ்டிக் கவர்லெ போட்டுக் கொண்டு வந்திருக்கேன் தெரியுமா?
சுமதி: அப்படியா? சரி இதெல்லாம் சாப்பிட்டுட்டு…
செல்வி: சாப்பிட்டுட்டு இந்த கவரெல்லாம் அங்கேயே தூக்கிப் போட்டுட்டு ஜாலியா கை வீசிக்கிட்டு வர வேண்டியதுதான்.
சுமதி: நாங்க இன்னைக்கு பீச்சுக்குப் போலே….
செல்வி: ஏன் திடீர்னு போகலேன்னு சொல்றே…
(சுமதி அம்மா உள்ளேயிருந்து வந்தபடி)
அம்மா: சுமதி! செல்வி வந்தாச்சா…. போலாமா?
செல்வி: ஆண்டி…. சுமதி என்ன ரெடியாகி வரச் சொன்னா இப்ப பீச்சுக்குப் போலேன்னு சொல்றா… ஏன் போகலே….?
சுமதி: ஆமாம்மா! இப்ப போக வேணாம்!
அம்மா: என்ன சுமதி நீதானே பீச்சுக்கு போணும்னு கேட்டே…
சுமதி: நான்தான் கேட்டேன் இப்ப புடிக்கல…
அம்மா : என்னாச்சு சுமதி உனக்கு?
(பெரியப்பா வந்தபடி)
பெரியப்பா: நான் சொல்றேன்…. சுமதியும் செல்வியும் பேசிக்கிட்டிருந்ததை நான் கேட்டுக்கிட்டுதான் இருந்தேன். செல்விய பீச்சுக்கு கூப்பிட்டது சுமதிதான்… இப்ப போகலேன்னு சொன்னதும் சுமதிதான்…
அம்மா: அதுதான் ஏன்?
செல்வி: அதான் ஆண்ட்டி எனக்கும் புரியலெ…
பெரியப்பா : எனக்குப் புரிஞ்சுடுச்சு. செல்வி நீ கொண்டு வந்த இந்த பலகார மூட்டைய வீட்டுல கொண்டுபோயி வச்சுட்டு வந்தா சுமதி பீச்சுக்குப் புறப்படும். என்ன சொல்றே சுமதி?
சுமதி: ஆமாம்! பெரியப்பா சொன்ன மாதிரி செல்வி இந்தப் பலகார மூட்டைய வீட்டுலேயே வச்சுட்டு வந்தா நாம பீச்சுக்குப் போலாம்.
செல்வி: எங்க அம்மா ஆசையா கொடுத்தது… இதை நான் மத்தவங்களுக்கு தர மாட்டேன்னு நினைச்சுதானே… வீட்டுல வச்சிட்டு வரச் சொல்றே?
பெரியப்பா: அதான் இல்லே…
அம்மா: அப்பறம் என்ன காரணம்?
பெரியப்பா: நான் சொல்றேன்… செல்வி கொண்டு போற பலகாரத்த தந்தாலும், தரலேன்னாலும் சுமதி வருத்தப்பட மாட்டா… அந்த பலகாரம் இருக்கிற பிளாஸ்டிக் பைய கடற்கரையிலேயே போட்டுட்டு வந்திடுவேன்னு செல்வி சொன்னதுதான் இதுக்குக் காரணம்.
அம்மா: அடடே! இப்பதான் எனக்குப் புரியுது. பிளாஸ்டிக் பொருட்களை, குப்பைகளை கண்ட இடத்திலே போடக்கூடாதுன்னு நேத்து அவங்க அப்பா சொன்னாரு. அதை மனசுலெ வச்சுக்கிட்டுதான் இப்படி சொல்லியிருக்கா சுமதி…
சுமதி: ஆமாம்மா! தூக்கி எறியிற பிளாஸ்டிக்கு, குப்பை இதையெல்லாம் கண்ட இடத்திலே போட்டா… சுற்றுச் சூழலும் பாழாகும்… பொது சுகாதாரமும் கெட்டுப் போகும்.
செல்வி: சுமதி! எனக்கு இதுவரையிலே இந்த விஷயம் தெரியாது…
பெரியப்பா: இப்ப தெரிஞ்சுக்கிட்டியா செல்வி, வீட்ல செய்த நல்ல பலகாரத்தை எல்லாரும் சாப்பிடணும்னு கொண்டு வந்தியே… அது ஏன்?
செல்வி: கடையிலே விக்கிற ஈ மொச்சதைத் தின்னா உடம்பு கெட்டுடும்னு… அம்மா சொன்னாங்க.
பெரியப்பா: கடையிலே விக்கிற ஈ மொச்ச பலகாரத்தைத் தின்னா உடம்பு கெட்டுடும். கண்ட இடத்திலே பிளாஸ்டிக்கு, குப்பையெ தூக்கி எறிஞ்சா ஊரே கெட்டுடும்.
செல்வி: அது எப்படி ஊரே கெட்டுடும்னு சொல்றீங்க…
பெரியப்பா: ஆமா… காகிதம், துணி இந்த மாதிரிப் பொருள்கள் எல்லாம் சீக்கிரமா மண்ணுல மக்கிப்போயிடும், கண்ணாடி கூட நீண்டநாள் கழிச்சு மக்கிப்போயிடும்… நெகிழின்னு நல்ல தமிழ்ல சொல்ற இந்த பிளாஸ்டிக் இருக்கே அது எவ்வளவு நாள் ஆனாலும் மக்கவே மக்காது.
சுமதி: பிளாஸ்டிக் மக்காததுனால என்ன ஆகும்னு சொல்லுங்க பெரியப்பா…
பெரியப்பா: பிளாஸ்டிக் மக்காததுனால பூமியில பெய்யிற மழைத் தண்ணிய மண்ணுக்குள்ள இறங்காமத் தடுத்திடும். தண்ணி இறங்காத மண்ணுல பயிர்கள் வளராது… மண்ணு மலடாப் போயிடும்…
செல்வி: அப்ப பிளாஸ்டிக்க கண்ட இடத்துல போடாம மொத்தமா சேத்து வச்சு எரிச்சுட்டா…
பெரியப்பா: தப்பு! தப்பு! பிளாஸ்டிக்க எரிக்கவே கூடாது.
சுமதி: ஏன் பெரியப்பா பிளாஸ்டிக்க எரிக்கக்கூடாது?
பெரியப்பா: பிளாஸ்டிக்கை எரிச்சா அதிலேயிருந்து டயாக்சின்கிற புகை வரும்…
செல்வி: (சிரித்தபடி) எந்தப் பொருளை எரிச்சாலும் புகைதானே வரும்.
பெரியப்பா: ஆமா… ஆனா பிளாஸ்டிக்க எரிச்சா வரக்கூடிய டயாக்சின்கிற புகை இருக்கே ரொம்ப ஆபத்தானது… அதை சுவாசிக்கிறவங்களுக்கு நுரையீரல் சம்பந்தமான நோய்கள் வரும். புற்றுநோய் உண்டாகிறத்துக்கும் வாய்ப்பிருக்கு.
செல்வி: அப்படீன்னா பிளாஸ்டிக்க தூக்கி எறியவும் கூடாது… எரிக்கவும் கூடாதா…
(சுமதி அப்பா சுந்தரம் வந்து கொண்டே)
அப்பா: ஆமாமா! பிளாஸ்டிக்கை மட்டுமில்ல டயரு, ரப்பர், இதையெல்லாம் கூட எரிக்கக்கூடாது. அது சரி என்ன எல்லாரும் தெருவுலேயே நின்னு பேசிக்கிட்டிருக்கீங்க.
பெரியப்பா: நல்ல நேரத்திலே வந்திங்க சுந்தரம்.
அம்மா: நீங்க நேத்து சுமதிக்கிட்டே சொன்னீங்களே பிளாஸ்டிக்கு குப்பை இதையெல்லாம் கண்ட இடத்திலே தூக்கிப் போடக்கூடாதுன்னு…
அப்பா: ஆமா!
சுமதி: அதனாலேதான் செல்வி கொண்டு வந்த பலகார மூட்டையை எடுத்துக்கிட்டு பீச்சுக்கு போக வேணாம்னு முடிவு பண்ணிட்டேன்.
செல்வி: அந்த பிளாஸ்டிக்கு குப்பைய அங்கேயே போட்டுடலான்னு நான் சொன்னது தப்பா போச்சு!
அப்பா: அது தப்புதானே!
பெரியப்பா: செல்வி! கடற்கரையிலே நாம தூக்கிப் போடுற பிளாஸ்டிக் காற்றுல பறந்து கடலுக்கு போயிடும். அதுலெ ஒட்டியிருக்கிற தின்பண்டத்துக்கு ஆசைப்பட்டு அதை மீன்கள், கடல்வாழ் உயிரினங்கள் சாப்பிடும். அதோட உடம்பு கெட்டுப்போகும், அதப் புடிச்சு சாப்பிட்டா நம்ம உடம்பும் கெட்டுப்போயிடும்.
அப்பா: அது மட்டுமில்லே… மக்கா தன்மை கொண்ட இந்த பிளாஸ்டிக் சாக்கடை, கால்வாய், இதுல போய் விழுந்தா மொத்தமா சேந்து நீர் போற பாதையையே அடச்சிடும். அதனாலேயும் சிக்கல் இருக்குது.
பெரியப்பா: தேவையில்லேன்னு நினைக்கிற பொருட்களை எரிச்சா அந்த புகையினாலே ஓசோன் மண்டலம் ஓட்டையாப் போயிடும்.
செல்வி: அது என்ன ஓசோன் மண்டலம்?
பெரியப்பா: அதுவா… பூமிக்கு மேலே சூரிய வெளிச்சம் நேரா வந்து படாமெ பாதுகாப்பா இருக்கிறதுக்குப் பேருதான் ஓசோன் மண்டலம்.
அப்பா: அதாவது கண்ணுல சூரிய வெளிச்சம் படாம இருக்க நாம கூலிங் கிளாஸ் போட்டுக்குவோமே அந்த மாதிரி…
பெரியப்பா: சரியாச் சொன்ன… சுந்தரம். கூலிங் கிளாஸ்லெ ஓட்டை விழுந்தா என்ன ஆகும்?
சுமதி : கண்ணு கூசும்!
பெரியப்பா: அதே மாதிரிதான் ஓசோன் மண்டலம் ஓட்டையாப் போனா… சூரியனின் புற ஊதாக் கதிர்கள் மனிதர்களை நேரடியாத் தாக்கும்… அதனாலே தோல் வியாதிகள் வர வாய்ப்பிருக்கு…
அப்பா: நம்ம நாட்டுல இருக்கிற தொழிற்சாலைகளின் புகை, வாகனங்களின் புகை, இப்படி கண்ட குப்பை, பிளாஸ்டிக்கு இதையெல்லாம் எரிக்கிற புகை இதனால பூமி இப்ப ரொம்ப சூடாயிடுச்சு…
அம்மா: அய்யய்யோ! பூமி சூடாயிட்டா என்னாகும்?
பெரியப்பா: மனுஷன் சூடாயிட்டா கோபப்படுற மாதிரி… பூமி சூடாயிட்டா பருவ நிலையெல்லாம் மாறி மாறிப் போயிடும்.
சுமதி: பெரியப்பா பருவ நிலை மாறிக்கிட்டுதான் இருக்கும்.
செல்வி: ஆமா! கோடை காலம் போயி, மழை காலம் வரும். அது போயி, குளிர்காலம் வரும்.
பெரியப்பா : நான் அப்படிச் சொல்லலே… கோடை காலத்திலே மழை வரும், மழை காலத்திலே சுள்ளுனு வெயில் அடிக்கும்… வெயில் காலத்திலே பனி கொட்டும்…
சுமதி: நாங்க உங்களை மாதிரி பெரியவங்களா ஆகும்போது எல்லாமே தலைகீழா மாறிடும் போலிருக்கே…
அப்பா: பூமி சூடானதுனாலே அண்டார்டிகாவிலே உள்ள பனிப்பாறைகள் உருகி அந்த தண்ணி கடல்ல வந்து சேரும்.
செல்வி: அப்ப தண்ணி நிறைய கிடைக்கும்னு சொல்லு…
பெரியப்பா: அதான் இல்லே… கடல் நீர்மட்டம் உயர உயர குட்டி குட்டி தீவெல்லாம் மூழ்கிடும். நாம இப்ப பாக்கப்போற பீச்சுகூட இடம் மாறி முன்னாடி வர வாய்ப்பிருக்குனு ஆராய்ச்சியாளர்கள் சொல்றாங்க…
சுமதி: அய்யய்யோ…. இந்த நிலைமையை தடுக்கணும்ணா நாம என்ன செய்யணும் பெரியப்பா!
பெரியப்பா : உங்களை மாதிரி சின்ன குழந்தைங்க, பெரியவங்க எல்லாரும் சுற்றுச் சூழல்ல கவனம் செலுத்தணும்.
அப்பா: சின்ன பிளாஸ்டிக் கவர்தானே யாருக்குத் தெரியப் போவுது அப்படின்னு கண்ட இடத்திலே தூக்கிப் போடக்கூடாது.
பெரியப்பா : இந்த பூமிய காப்பாத்த எல்லாரும் பொறுப்பா இருக்கணும்…
செல்வி: சரி சரி வாங்க…. பீச்சு இடம் மாற்றதுக்குள்ள ஒரு தடவை போய் பாத்திட்டு வந்திடுவோம்!
சுமதி: இந்த பிளாஸ்டிக் கவரோடவா…
செல்வி: இதையெல்லாம் வீட்டுக்குக் கொண்டுபோயி பேப்பர்ல மாத்திக் கட்டி எடுத்துக்கிட்டு வந்துடுறேன்!
சுமதி: செல்வி உனக்கு மட்டும் எப்படி இவ்வளவு பிளாஸ்டிக் கவர் கிடைச்சுது?
செல்வி: எங்க வீட்டுல கடைக்குப்போயி எது வாங்குனாலும் பிளாஸ்டிக் கவர்ல போட்டுக் கொடுக்கச்சொல்லி கேட்டு வாங்கிக்கிட்டு வருவோம்! அதான் இவ்வளவு கவரு.
பெரியப்பா: அது ரொம்ப ரொம்ப தப்பு!
செல்வி: அப்பறம் எப்படி பொருள்களை வாங்கிக்கிட்டு வர முடியும்.?
அப்பா: கடைக்குப் போகும்போதே வீட்டுல இருந்து துணிப்பையெ எடுத்துக்கிட்டுப் போகணும். பிளாஸ்டிக் பையக் குடுத்தா வேண்டான்னு சொல்லணும்.
பெரியப்பா: முடிஞ்சவரைக்கும் தூக்கி எறியிற பிளாஸ்டிக்க தவிர்க்கணும்.
அம்மா: எங்க வீட்டுல யாருமே பிளாஸ்டிக்கை பயன்படுத்துறதில்ல. தப்பித் தவறி எதாவது பொருளுங்க பிளாஸ்டிக் பையில வந்தாலும் அதையெல்லாம் தூக்கிப்போடாம கவனமா சேத்துவச்சு பழைய பொருள் வாங்குறவங்ககிட்ட எடை போட்டு வித்திடுவோம்.
செல்வி: அடடே! இது நல்ல யோசனையா இருக்கே! இனிமே எங்க வீட்டுலயும் தூக்கி எறியிற பிளாஸ்டிக்கை பயன்படுத்த மாட்டோம். எந்த கடைக்குப்போனாலும் துணிப் பையை எடுத்துக்கிட்டுப் போயிடுறோம்.
பெரியப்பா: ஆகா! இதுபோல எல்லாரும் முடிவு பண்ணிட்டா ஊரே நல்லாயிருக்கும்.
சுமதி: இப்ப எல்லாரும் மகிழ்ச்சியா பீச்சுக்குப் போலாமா?
அம்மா: ம் புறப்படுங்க போவோம்!
செல்வி: பீச்சுக்குப்போயி அங்கே இருக்கிறவங்ககிட்டேயும் பிளாஸ்டிக்கை தவிர்ப்போம்! மண் வளத்தைக் காப்போம்ன்னு எடுத்து சொல்லுவோம். ம் வாங்க போலாம்.
செல்வி : ஒரு நிமிஷம் இருங்க… நான் போயி பலகாரத்தை பேப்பர்ல மடிச்சுக்கிட்டு வந்துடுறேன்.
அம்மா: பரவாயில்லே செல்வி… வா நாம பீச்சுக்குப் போவோம்! பலகாரத்தை சாப்பிட்டுட்டு அந்த பிளாஸ்டிக்கு, தேவையில்லாத குப்பை எல்லாத்தையும் தூக்கி எறியாம திருப்பி கொண்டு வந்து மறு சுழற்சிக்குப் பயன்படுத்த விலைக்கு கொடுத்துடுவோம்.
பெரியப்பா: அதுவும் நல்ல யோசனைதான்! வாங்க… போவோம்!