சும்மா மொக்க போடாதீங்க
பக்கத்துத்தெரு சின்னத்தம்பித் தாத்தான்னா பிஞ்சுகளுக்கு கொள்..ளைப் பிரியம். ஏன்னா, அவரு ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை மாலையிலும் நல்ல நல்ல கதைகளாச் சொல்லுவாரு. இதோ, அடுத்த ஞாயிறும் வந்து விட்டது….
“தாத்தா இந்த வாரம் எதைப்பத்தி பேசப்போறோம்? _ இது நம்ம நனிபூட்கையின் தனிக்குரல். “இந்த பம்பரம் எதுக்குத் தாத்தா?” _ இது சித்தார்த்தனின் புத்தியில் உதித்த சின்னக் கேள்வி. “நம்ம பூமியைப்பத்திதான்”
_ தாத்தா கொஞ்சம்கூட கவலைப்படாம இரண்டுக்கும் சேர்த்து சிக்கனமா ஒரே பதிலைச் சொன்னாரு. தாத்தா எந்திருச்சி நிற்க ஆரம்பிச்சுட்டாரு. அப்பிடின்னா கதை சொல்லப்போறாருன்னு அர்த்தம்!
“எல்லாரும் வந்துட்டீங்க… நல்லது… நல்லது… ரொம்ப நல்லது! சரி, ஒரு ஊர்ல ஒரு பம்பரம் இருந்துச்சாம். அந்த பம்பரத்துக்கு திடீரென்று கர்வம் அதிகமாயிடுச்சாம். புல்லுக்கும் இந்த பம்பரத்துக்கும் ஒருநாள் சண்டை வந்திடுச்சாம். “பம்பரம் பம்பரம் நீ ஏன் இப்பல்லாம் என்கூட சரியா பேசறதேயில்லை”ன்னு புல்லு ஏக்கத்தோட கேட்டுச்சாம்.
அதுக்கு பம்பரம் தலையைத் திருப்பிக்கினு, “உன்கூட நான் ஏன் பேசணும்?” அப்பிடின்னுச்சாம். அதுக்குப் புல் மிகுந்த ஆச்சரியத்தோட, “நாம இரண்டு பேரும் நல்லாதானே பேசிகிட்டு இருந்தோம். நமக்கிடையிலே சண்டை கிண்டை எதுவுமேயில்லையே! என்னாச்சு உனக்கு?” அப்பிடின்னு வருத்தத்தோட கேட்டுச்சாம்.
அதுக்கு அந்த பம்பரம் என்ன பண்ணுச்சு தெரியுமா?” என்று ஒரு கேள்வியோடு தாத்தா நிறுத்த, பிஞ்சுகளுக்கும் மற்றவர்களுக்கும் அது என்ன பண்ணுச்சு என்று தெரிந்து கொள்ளவேண்டும் என்று பரபரப்பான ஆவலாக இருந்தது. தந்திரமாக விட்ட இடைவெளி போதுமென்று தாத்தாவே மீண்டும் தொடர்ந்தார்.
“இந்த பிரபஞ்சம் தெரியுமா? அதுல நம்ம சூரியக் குடும்பம் தெரியுமா? சூரியனோட சக்தி தெரியுமா? அந்த சூரிய குடும்பத்திலிருக்கிற _ நாம நின்னுகிட்டு பேசிகிட்டிருக்கோமே அந்த பூமியைத் தெரியுமா? இந்த பூமி தன்னையே இயக்கிற சூரியனையே அதிர வைக்குதே அந்த வியப்பான பிரபஞ்ச ரகசியம் தெரியுமா? அப்பிடி இப்பிடின்னு தெரியுமா? தெரியுமா”ன்னு கேள்விக்கணைகளாகக் கேட்டு புல்லை மயக்கமே போட வச்சிருச்சுருச்சாம்.
பிறகு ஒரு வழியா சமாளிச்சுகிட்ட புல்லு கேட்டுச்சாம் “எனக்கு இதுல ஒரு தெரியுமா கூடத் தெரியாது. எனக்குத் தெரிஞ்சதெல்லாம் நீயும் நானும் நல்ல நண்பர்கள்; அவ்வளவுதான்.” அப்புடின்னு அப்பாவியா சொல்லிச்சாம். அதுக்கு அந்த பம்பரம் அகங்காரத்தோட “ஹாஹாஹா…”ன்னு சத்தம் போட்டு சிரிச்சுகிட்டு மறுபடியும் பேசிச்சாம்.
பூமியின் ஆட்டத்தை (Axial Precession of Earth) சூரியன், நிலவு போன்றவற்றின் ஈர்ப்பு அதிகப்படுத்துகின்றது. சூரியனின் அச்சை மய்யமாகக் கொண்டு சுற்றவைக்கும் (Axial Precession of Sun) காரணிகள் வெகு தொலைவில் இருப்பதாலும், சூரியனைச் சுற்றியுள்ள கோள்களின் தாக்கம் சூரியன் மீது சிறிய அளவில் இருப்பதாலும் பூமியை விட பம்பரம் போல இப்படி சூரியன் போடும் வட்டம் குறைவு தான்.
“ஏ… அற்பப் புல்லே, அதாவது விண்வெளியிலே உள்ள ஒரு குறிப்பிட்ட நட்சத்திரத்தை மிக நுட்பமான தொலைநோக்கிகள் கொண்டு ஆராயும்போது, ஒரு அச்சில் சுற்றிக் கொண்டிருக்கும் அந்த நட்சத்திரம் மிக அற்ப அளவில் அசைவது தெரிகிறதாம். அப்படி அசைந்தால் அதைச்சுற்றி பல கிரகங்கள் இருப்பதாகப் பொருளாம்.
காரணம், பக்கத்தில் இருக்கிற கிரகங்களின் ஈர்ப்பு விசைதான் அந்த நட்சத்திரத்தின் அற்ப அசைவுக்கு அளவுகோலாம். இப்படித்தான் பூமியின் ஈர்ப்பு விசைகூட நம்ம சூரியனையே அற்ப அளவுக்கு அசைக்குமாம். இப்படித்தான் இந்த பிரபஞ்சத்தின் ஆயிரமாயிரம் சூரியக் குடும்பங்களைக் கண்டு பிடிக்கறாங்களாம்” என்று மிகுந்த தற்பெருமையோடு பீத்திக்கொண்டது பம்பரம்.
உள்ளுக்குள் சிரித்துக்கொண்ட புல்லுக்கு ஏதோ புரிந்தது. ஏதோ புரியாமலுமிருந்தது; “அதுசரி கிரகங்களோட ஈர்ப்பு விசையாலே நட்சத்திரங்களே அற்ப அளவில் அதிர்கிறது என்பது எனக்குப் புரிகிறது. இது இயற்கை. இதில் நீ பெருமைப்பட என்ன இருக்கிறது. இதனால் என் நட்பை ஏன் முறித்துக்கொண்டாய்?” என்று பளிச்சென்று கேட்டு விட்டது. பம்பரம் சளைக்காமல் பேசியது.
“நான் சுற்றும் போது, சுற்றுகின்ற இறுதி நேரத்தில் ஆடாது அசையாது சுற்றிக்கொண்டிருப்பேனாம். அதை ‘பம்பரம் தூங்கும் நேரம்’ என்று சொல்வார்களாம். அப்படி தூங்குவது என்று சொன்னாலும், நான் மிக அற்ப அளவுக்கு இப்படியும், அப்படியுமாக நகர்ந்து கொண்டுதானிருப்பேன்.. அதாவது என் ஆணி தரையில் சிறிய வட்டம் போட்டுக் கொண்டுதானிருக்கும்.
தனது அச்சில் சுழன்று கொண்டிருக்கின்ற சூரியனும் ஒரு புள்ளியில் நிலைத்து நிற்காமல் இவ்விதம் சிறு வட்டம் போடுகிறது. அதுதான் அற்ப அதிர்வு என்பதை என். ராமதுரை என்ற எழுத்தாளர் என்னை… என்னை எடுத்துக்காட்டி எல்லோருக்கும் புரிய வைத்திருக்கிறார் தெரியுமா? என்று மீண்டும் அதே கர்வத்தோடு கூறியது.
“நல்ல விசயம்தான். சூரியனோ, பூமியோ சுத்திகிட்டே இருக்குமே. என் நண்பனோ, ‘சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு, சரியும் வரையில் சாய்ந்தாடுன்னு’ தலைசுத்தி கீழே விழுந்திடுவானே. அவனாலே தொடர்ந்து சுத்த முடியாதே” என்று வெள்ளந்தியாக கூறியதும், பம்பரத்துக்கு இதுவரையிலும் புரியாத ஏதோ ஒன்று புரியத் தொடங்கியது.
அது மிகவும் இன்பமாகவும் இருந்தது. கர்வத்தின் போது ஏற்பட்ட இன்பத்தைவிட இது மிகவும் இனிமையாகயும் இருந்தது. புல்லை அன்போடு பார்த்து, “நண்பா என் கண்களைத் திறந்துவிட்டாய். என் கர்வம் அழிந்தது. இனி நீயும் நானும் ஒண்ணு. என் கர்வத்தில் விழுந்தது மண்ணு” என்று ஆனந்தமாக பாடியது. அதன் பிறகு, அவர்கள் இருவரையும் எந்த சக்தியாலும் பிரிக்க முடியவில்லை.
அவ்வளவுதான் கதை முடிஞ்சிருச்சு நல்லாயிருக்கா” என்று பிஞ்சுகளைப் பார்த்துக் கேட்டார். நல்ல..£ இருந்துச்சு! சூப்பரா… இருந்துச்சு! அருமையா இருந்துச்சு! என்று வெவ்வேறு பதில்கள் வந்தன. அதற்குள் நன்றாக இருட்டி விட்டிருந்தது. பிஞ்சுகளின் பெற்றோர்கள் வந்து அவரவர் குழந்தைகளை அழைத்துக் கொண்டு சென்றனர்.
அடுத்த வார ஞாயிற்றுக்கிழமைக்காக பிஞ்சுகளும், தாத்தாவும் ஒரு சேர ஏங்கியபடியே விடை கொடுத்துக்கொண்டனர். பம்பரம் இன்னமும், “நீயும் நானும் ஒண்ணு! என் கர்வத்தில் விழுந்தது மண்ணு” என்று தலைகால் தெரியாமல் தன் நண்பனோடு சேர்ந்து ஆடிக்கொண்டிருந்தது.