டம்டம்டம்
காடே உருகும் படியான அழுகுரல் கேட்டது. அது ஒரு மரத்தின் அழுகுரல் தான். அந்த மரம் காட்டின் நடுப்பகுதியில் இருந்தது. அழுகுரல் அதிகமாகிக் கொண்டே போனது. ஒவ்வொரு மிருகமாக ஒவ்வொரு பறவையாக அந்த மரத்தின் அருகே வந்தன.
எல்லோரும் மரத்தை சுற்றி நின்றனர். மரத்தில் ஒரு இலை கூட இல்லை. மரத்தில் ஒரு பூவோ பழமோ இல்லை. வெறும் கிளைகள் மட்டுமே இருந்தன. அதுவும் காய்ந்து போய் இருந்தது. மரம் ஒரு சோகப் பாடலை பாடிக்கொண்டிருந்தது. அந்தப்பாடல் இது தான்.
“ஊருக்கெல்லாம் வசிப்பிடமாய் நான்
இருந்தேன் டம்டம்டம் டம்டம்டம்
வருவோர்க்கெல்லாம் நிழல் தந்து
உதவினேனே டம்டம்டம் டம்டம்டம்
பசிக்கையிலே பழங்களையும் நான்
கொடுத்தேன் டம்டம்டம் டம்டம்டம்
பூச்சிக்கெல்லாம் இலைகளையும் நான்
பகிர்ந்தேன் டம்டம்டம் டம்டம்டம்
பறவையெல்லாம் தத்தி நடக்க கிளை
கொடுத்தேன் டம்டம்டம் டம்டம்டம்
எல்லாம் தந்தேன் எல்லாம் தந்தேன்
டம்டம்டம் டம்டம்டம்
நான் போறேன் நான் போறேன்
டம்டம்டம் டம்டம்டம்”
மரத்திற்கு வயதாகிவிட்டதால் இலைகள் குறைந்தன. தண்ணீர் குறைந்துவிட்டதால் இன்னும் இன்னும் அதன் பழங்கள், பூக்கள் குறைந்துவிட்டன.
“மரமே, என்னாச்சு. ஏன் இப்படி பாடுற” என ஆறுதலாக கேட்டது பறவை ஒன்று.
“தண்ணி… தாகம் எடுக்குது பறவையாரே. பூமிக்கு அடியில் வேர் மூலமும் தண்ணீர் வரவில்லை, வானத்தில் இருந்தும் தண்ணீர் வரவில்லை. ரொம்ப தாகமா இருக்கு. தண்ணி இல்லாததால கிளைகளும் வாடுகின்றன. என் முடிவுக்காலம் வந்துவிட்டது என நினைக்கிறேன்” என்றது. மரத்தின் குரல் தழுதழுத்தது.
இதனைக் கேட்ட கூடி இருந்த பறவைகளும் மிருகங்களும் வருத்தம் கொண்டன. இந்த மரத்தோடு ஒவ்வொருவருக்கும் உறவு இருந்தது. ஏதோ ஒரு காலத்தில் ஒவ்வொருவருக்கும் இந்த மரம் உதவி இருக்கின்றது.
“அப்படி தனியாக விட்டுவிடமாட்டோம்” என்று சொல்லியபடி மேலே பறந்தது குருவி. தன் சின்ன அலகில் எவ்வளவு தண்ணீர் முடியுமோ அவ்வளவு தண்ணீரை பக்கத்தில் இருந்த குட்டையில் இருந்து எடுத்து வந்து மரத்தின் மீது கொட்டியது. அது மூன்று சொட்டு தான் இருக்கும். இதனைப் பார்த்த மிருகங்களும் பறவைகளும் களத்தில் குதித்தன. ஒவ்வொருவரும் தண்ணீர் எடுத்து வர ஆரம்பித்தனர்.
சில மிருகங்கள் கூடை போல தயாரித்து அதில் தண்ணீர் எடுத்து வர ஆரம்பித்தனர். மரத்தின் மீது கொட்டினர். மரத்தை சுற்றி தண்ணீர். ‘புஸ்ஸ்ஸ்’ என திடீரென தண்ணீர். அந்த மரத்தின் நிழலில் இளைப்பாறியதற்காக யானை ஒன்று தண்ணீரை தன் தும்பிக்கையில் எடுத்து வந்து பீய்ச்சி அடித்தது. மரம் சொட்டச் சொட்ட நனைந்தது.
இருட்டத் துவங்கியது. வீட்டில் இருந்து கொண்டு வந்த பழங்களை எல்லோரும் பகிர்ந்து மரத்தை சுற்றி அமர்ந்து உண்டனர். அந்த இரவினை அங்கேயே கழிக்கத் திட்டமிட்டனர். ஒன்றாகவே மரத்தைச் சுற்றி உறங்கினார்கள்.
காலையில் “ஏய் இங்க பாருங்க இங்க பாருங்க” என கிளி எல்லோரையும் எழுப்பியது. மரம் பூத்துக் குலுங்கி இருந்தது. பச்சை நிறத்தில் மட்டும் இல்லாமல் பல வண்ணங்களில் இருந்தது. வெள்ளை நிறத்தில் மரமெங்கும் பூக்கள்.
இதற்குக் காரணம் எல்லோரின் பரிவும் அக்கரையும் தான்.
ஆனால்… ஆனால் மரம் மெல்ல மெல்ல சரிய ஆரம்பித்தது. “என்னால் இந்த பாரத்தை தாங்க முடியவில்லை. என் காலம் முடிந்துவிட்டது நண்பர்களே. நீங்கள் செய்தது காலம் தாழ்ந்த உதவி என நினைக்கிறேன். காட்டில் உள்ள மற்ற மரங்களைக் காப்பாற்றுங்கள். அதுவே நீங்கள் எனக்கு செய்யப் போகும் பேருதவி” என சொல்லியபடி டமால் என மரம் விழுந்தது. எல்லோரும் அமைதியாகச் சுற்றி நின்றனர்.
“டம்டம்டம் டம்டம்டம்” என இசை ஒலித்தது. அதன் பின்னர் அந்த பகுதிக்கு சென்றாலே அந்த குரல் கேட்கும். அங்கே வேறு மரம் வந்துவிட்டது. காட்டில் இருக்கும் ஒவ்வொரு மரத்தையும் கனிவாக பார்க்க ஆரம்பித்துவிட்டன. மிருகங்களும் பறவைகளும். எந்த மரத்தின் அழுகுரலும் இதுவரை கேட்கவே இல்லை.