பிஞ்சு அனுபவம்
நம் மூதாதையர் வாழ்ந்த இடங்கள் சென்னைக்கு அருகிலேயே குடியத்தில் இருக்கின்றன. ‘பார்க்கலாமா?’ என்று கேட்டார் அப்பா. கடந்த ஜூலை மாதத்தில் ஒரு ஞாயிற்றுக்கிழமை காலை 6.45 மணிக்கு பூவிருந்தவல்லியிலிருந்து கிளம்பி பேருந்து நிலையத்திற்குச் சென்றோம். 7.20க்கு நாங்கள் சுற்றுலா செல்லவிருந்த பேருந்து வந்தது.
அதில் நாங்கள் 6 பேரும் ஏறினோம். முதலில் பூண்டி நீர்த் தேக்கத்திற்குச் சென்றோம். அங்கு காலை உணவை முடித்துவிட்டு, அங்கு இருந்த இடங்களைப் பற்றி எங்களுக்கு வழிகாட்டி அழைத்துச் சென்ற கடலியல் ஆய்வாளர் ஒரிசா பாலு அவர்கள் கூறினார். மீண்டும் சிறிய பேருந்து பயணத்திற்குப் பிறகு நடக்கத் தொடங்கினோம். அங்கிருந்து 7 கி.மீ. எல்லோரும் இளைப்பாறி-இளைப்பாறி நடந்து சென்றோம்.
செல்லும் வழியில் ஒரிசா பாலு அவர்கள் குடியம் குகைகள் எப்படித் தோன்றியது என்பதை எல்லாம் கூறினார். 12 லட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய மனிதர்கள் அதாவது நம் மூதாதையர்கள் வாழ்ந்த இடமாம் அது. கற்காலம் பற்றியெல்லாம் பாடத்தில் தான் படித்திருக்கிறேன். அது எங்காவது ஆப்பிரிக்காவில் இருக்கும் என்றுதான் நினைத்து வந்தேன். நம் அருகிலேயேஇருப்பது அறிந்து வியந்தேன்.
இன்னொருவகையில், என்னுடைய நீண்ட நாள் ஆசை அன்றுதான் நிறைவேறியது. அது என்ன என்றால் மலைமேல் ஏறவேண்டும் என்பதுதான். முதலில் மலையில் ஏறி குகைக்குச் செல்லும்போது நானும் நிலாவும் நின்று நின்று ஏறினோம். அங்கு போய் குகையைப் பார்த்தோம். அங்கு தேன்கூடுகள் அதிகமாக இருந்தன. குகையும் மிகப் பெரியதாக இருந்தது. இரண்டாவது மலையில் ஆசை ஆசையாக நாங்கள் 4 பேரும் ஏறினோம். ஆனால் அங்கு ஒரு சிறிய சுனையை மட்டுமே பார்த்தோம்.
அந்த மலையில் இருந்து இறங்கி பேருந்து நின்ற இடத்திற்குச் சென்று பேருந்தில் ஏறி பூண்டி ஏரிக்குச் சென்று மதிய உணவை 4 மணிக்குச் சாப்பிட்டோம். அதன்பின் மீண்டும் பேருந்தில் ஏறி ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள கோனே அருவிக்குச் சென்றோம். அருவியில் குளித்துவிட்டு கீழே இறங்கினோம். அதன்பின் புகைப்படம் எடுத்துக்கொண்டு அங்கிருந்து சென்னைக்குக் கிளம்பினோம். வரும்போது பாட்டு கேட்டுக் கொண்டே வந்தோம். அங்கு சென்றதில் புது விசயங்களைத் தெரிந்து கொண்டேன்.
– வி.எம்.வேலவன், பூவிருந்தவல்லி