பட்டாசுத் தொழிலுக்குப் பாதுகாப்பு!
பட்டாசுத் தொழிலுக்குப் பாதுகாப்பு!
தானியங்கி தீயணைப்பான் கண்டுபிடித்த அரசுப் பள்ளி மாணவர்
பட்டாசுத் தொழிற்சாலையில் தீப்பிடித்தால், அதனை தானியங்கி முறையில் கண்டறிந்து அணைக்கும் கருவியை உருவாக்கியிருக்கிறார் விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம் நாராணாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளி ஒன்பதாம் வகுப்பு மாணவர் ஜெயக்குமார். இந்தக் கருவியை உருவாக்கியதற்காக மாவட்ட அளவில் அவருக்கு முதல் பரிசு கிடைத்துள்ளது.
இதுகுறித்து அவர், “சிவகாசியிலுள்ள ஜமீன்சல்வார் பட்டியில் இருக்கிறது எங்கள் வீடு. சிலிண்டரில் இருந்து கேஸ் லீக் ஆனால், உடனே எச்சரிக்கை அலாரம் எழுப்பும் கருவியை எட்டாவது படிக்கும்போதே வடிவமைத்தேன். தில்லியில் நடைபெற்ற இன்ஸ்பயர் போட்டியில் அதற்காக கலந்துகொண்டபோது அப்துல் கலாம் எனது முயற்சியைப் பாராட்டினார்.
அஞ்சு வருசத்துக்கு முன்னாடியே எங்கப்பா இறந்துவிட்டார். எங்க அம்மா, பஞ்சவர்ணம், பட்டாசு தொழிற்சாலையில் பட்டாசு சரம் பின்னும் வேலையை செய்யறாங்க. பட்டாசு தொழிற்சாலையில அடிக்கடி விபத்து ஏற்படுது. அதனால் நிறைய பேரு இறந்து போறாங்க. அதைத் தடுக்கணும்னு நினைச்சேன். எங்க பள்ளி கணக்கு ஆசிரியர் கருணைதாஸ் எனது முயற்சிக்கு உதவினார்.
பட்டாசு தொழிற்சாலையில் உள்ள எட்டுக்கு எட்டு அடி அறையில் நான்கு பேர் உட்கார்ந்து வேலை செய்வாங்க. அறையில் தீப்பிடிச்சுதுன்னா, அறையில் வெப்பம் அதிகரிக்கும். அதை உணரும் சென்சார், எச்சரிக்கை அலாரத்தை ஒலிக்கவிடும். இந்த சத்தத்தைக் கேட்டதும், அங்கிருந்து தொழிலாளர்கள் வெளியேறிவிடலாம். முடிந்தால் தீயை அணைக்க முற்படலாம்.
அலாரம் அடிக்கும் அதே வேளையில், பேட்டரி உதவியுடன், மோட்டார் இயங்கி, தொட்டியில் இருந்து தண்ணீரை வேகமாக பைப் மூலம் கொண்டுவந்து, அறை முழுவதும் தெளித்து தீயைக் கட்டுப்படுத்தும். தீ விபத்தால் ஏற்படும் புகையானது, எக்சாஸ்ட் மூலம் வெளியேற்றப்படுகிறது. இவை அனைத்தும் தானியங்கி முறையில் நடக்கும். சோலார் மின்சாரம் முறையிலும் இந்தக் கருவியை இயக்க முடியும். இதற்கு 2 ஆயிரம் ரூபாய் மட்டுமே செலவானது’’ என்கிறார்.
இந்தக் கண்டுபிடிப்பைப் பற்றி பேஸ்புக்கில் எங்கள் ஆசிரியர் பதிவு செய்திருக்கிறார். இதுவரை 30 ஆயிரம் லைக்குகளும், 29 ஆயிரம் கமெண்ட்ஸ்களும் வந்துள்ளன. எனது கண்டுபிடிப்பை கேள்விப்பட்டு, பெங்களூரில் உள்ள அமெரிக்க நிறுவனம், எங்க ஸ்கூலுக்கே வந்து பாராட்டிட்டுப் போனாங்க. இஸ்ரோ விஞ்ஞானிகள் உள்பட நிறைய பேர் பாராட்டினாங்க’’ என்று மகிழ்ச்சியோடு கூறினார்.
“மாநில அளவில் நடந்த பல்வேறு அறிவியல் கண்காட்சியில் பங்கு பெற்று பல பரிசுகள் பெற்றிருக்கிறார். அம்மாவின் துணையில் வளரும் அவருக்கு எதிர்காலத்தில் டாக்டராகவோ, விஞ்ஞானியாகவோ ஆக வேண்டும் என்பது ஆசை’’ என்று தனது மாணவனைப் பற்றி பெருமிதத்துடன் கூறினார் ஆசிரியர் கருணைதாஸ்.
ஒடுக்கப்பட்ட பிள்ளைகள் வாய்ப்பு கிடைத்தால் உயர்வுகளை எட்டுவர். சாதனைகளைப் படைப்பர், அறிவுத் திறனைக் காட்டுவர் என்பதற்கு இவர் ஓர் எடுத்துக்காட்டு!