மகியும் நோவாவும்
”என்னை காப்பாத்துங்க காப்பாத்துங்க” என்ற சத்தத்தைக் கேட்டுத்தான் மகி அந்தக் கூண்டை நோக்கி ஓடியது. மகி சுற்றித் திரியும் ஓர் அணில். தற்சமயம் ஒரு மிருகக்காட்சி சாலையில் சுதந்திரமாக சுற்றிக்கொண்டு வருகின்றது.
‘காப்பாற்றுங்க’ எனக் கத்தியது ஒரு பச்சைக் கிளி. புதிதாக இந்தக் கிளியைப் பிடித்து வந்திருக்கின்றார்கள். மிருகக்காட்சி சாலையில் உள்ள பறவைகள் பகுதியில் உள்ள ஒரு கூண்டில் அடைத்திருந்தார்கள். உடன் பல பச்சைக்கிளிகள் இருந்தன. ஆனால் அவை எதுவும் சத்தம் போடாமல் இருந்தன. ஒரே ஒரு பச்சைக்கிளி மட்டும் கத்திக்கொண்டே இருந்தது.
கூண்டில் உச்சியில் இருந்த கம்பியில் நின்றுகொண்டு கம்பியை தன் மேல் அலகைக் கொண்டு கடிக்க முயற்சித்துக் கொண்டிருந்தது. அணில் வந்து சலசலப்பினை ஏற்படுத்தியது. அதனைக் கூட கேட்கும் சக்தி கிளிகளுக்கு உண்டு. உடனே அந்த திசையில் கத்தியது. அணில் கிளிக்கு அருகே வந்ததும்.
“என்ன அழகு கிளியே புதிதாக வந்திருக்கின்றாயா?”
“ஆமாம் அணிலே. என்னை இரண்டு நாட்கள் முன்னர் பிடித்து வந்தார்கள். எப்படி கண்டுபிடித்தாய்?”
“மற்றவை அமைதியாக இருக்கும்போதே தெரிகின்றதே”
தன்னை எப்படியாவது காப்பாற்றும்படி கெஞ்சிக்கேட்டது கிளி. தன்னுடைய பெயர் நோவா என்று தெரிவித்தது. மகியை இனி மகி என அழைக்காதாம் நோவா, அதற்கு பதில் டார்சன் என அழைக்கப்போவதாக சொல்லியது. டார்சன் என்ற பெயரை எங்கோ குழந்தைகள் விளையாடும் இடத்தில் கேட்டிருக்காம். அணிலை பார்த்ததும் அந்தப் பெயர் தான் நினைவிற்கு வந்தது என்று சொன்னது நோவா.
‘முதலில் இங்கிருந்து தப்பிப்பது சாத்தியம் இல்லை’ என்றது டார்சன். பின்னர் நோவா தொடர்ந்து வலியுறுத்தியதால் ஏதேனும் வழி இருக்கின்றதா என ஆராயத் துவங்கியது. “என்னைக் காப்பாற்றும் முன்னர் எங்கிருந்தாவது நல்ல சிவந்த பழங்களை கொண்டுவா டார்சன். இங்கே பழங்களே சரியில்லை. எல்லாம் காய்களாகவே உள்ளன” என்றது. பழத்தை எடுத்து வந்தாலும் எப்படி உள்ளே கொடுப்பது என்று தெரியவில்லை டார்சனுக்கு.
பகலில் நோவாவை பார்க்க நிறைய சிறுவர் கூட்டம் வந்தது. ஏனென்றால் நோவாவிற்கு வெளியே இருந்த போது மனிதர்கள் பேசுவதை திரும்பச் சொல்லி பழக்கம் உண்டு. தூரத்தில் யாரேனும் வரும் போது குழந்தையின் பெயரை அழைத்தால், அவர்கள் அருகே வந்தது அந்த பெயரைச் சொல்லி அழைக்கும்.
“செழியா..செழியா..”
“யாழினி..யாழினி…”
பகலில் குழந்தைகளை பார்க்கும் போது மட்டும் நோவா சந்தோஷமாக இருக்கும். டார்சன் எடுத்து வரும் பழங்களை உள்ளே அனுப்ப ஒரு குழாயைக் கண்டுபிடித்திருந்தது நோவா. அந்த பழங்களை சாப்பிட்ட, அங்கிருந்த கிளிகளுக்கு ரொம்ப சந்தோஷம்.
“இப்படிப்பட்ட பழங்களை நாங்கள் சாப்பிட்டதே இல்லை” என்றன. நோவா வெளி உலகில் தான் பார்த்த எல்லா விஷயங்களையும் சொல்ல ஆரம்பித்தது. கிளி ஜோசியரிடம் மாட்டிய கதை, அங்கிருந்து தப்பித்த கதை, கிளிகள் நிறைந்திருக்கும் மரத்தின் கதை, பழங்கள் தின்ற கதை என சதா சொல்லிக்கொண்டே இருக்கும்.
டார்சன் கடைசியாக நோவா தப்பிக்க ஒரு யோசனையைத் தெரிவித்தது. கூண்டின் ஒரு பகுதியில் மரம் இருந்தது. அதனை யாரேனும் சதா அலகுகளால் கொத்திக்கொண்டிருந்தால் மரத்தில் ஒரு பொந்து வரும், அதன் வழியாக ஒவ்வொருவராக தப்பிக்கலாம் என்றது. மற்ற கிளிகள் கொஞ்சம் பயந்தன. ஆனால் மாலையானதும் நோவா அந்த மரத்தை கொத்திக்கொண்டே இருந்தது. டார்சன் மற்றொரு வேலையையும் செய்தது, தன்னுடைய நண்பன் மரங்கொத்தியை அழைத்து வெளிப்புறம் இருந்து கொத்தச் சொன்னது. ஒரு வாரத்தில் மிகச்சிறிய பொந்து உருவானது.
அதன் வழியாக பழங்களை இரண்டு நாட்களுக்கு கொடுத்தது. அன்று இரவு பொந்து பெரிசாகிவிடும் அனைவரும் தப்பிக்கலாம் என்றது நோவா.
நோவா வெளியே வரும் அளவிற்கு பொந்து உருவானது. மற்ற கிளிகள் கொஞ்சம் பெரியதாக இருந்ததால் அவை வரமுடியவில்லை. அதற்குள் பக்கத்தில் இருந்த மயில் சத்தம் போட்டதால் பயந்து அந்த கிளிகள் உள்ளே போய்விட்டன. நோவாவும் அங்கிருந்து பறந்துவிட்டது. மறுநாளே நோவா பறந்ததை அந்த பகுதி பணியாளர்கள் கண்டுபிடித்துவிட்டார்கள். மேலே ஏறி பொந்தினை அடைத்துவிட்டார்கள்.
நோவா பாதுகாப்பாக பத்து கிலோமீட்டர் தூரத்திற்கு பறந்துவிட்டது. இரண்டு தினங்களுக்கு பின்னர் மீண்டும் மிருககாட்சி சாலைக்கு மேலே பறந்துவந்து டார்சனைத் தேடியது.
“யே நோவா, திரும்ப ஏன் இங்க வந்தாய்? மாட்டிக்கொள்வதற்கா?”
“இல்லை டார்சன், நாம் அனைவரையும் காப்பாற்ற வேண்டும், வா…”