குழந்தைகள் நாடகம்
கதா பாத்திரங்கள்:
செல்வி _ சிறுமி, மலர் _ சிறுமி,
பாலு _ சிறுவன், முத்து _ சிறுவன், தாத்தா, அப்பா சின்னசாமி
தேவையான பொருள்கள்:
நாற்காலி, செய்தித்தாள்
காட்சி 1
இடம்: தோட்டம்
பங்கேற்போர்: செல்வி, மலர், பாலு.
(மலர் வந்தபடி)
மலர்: செல்வி, பாலு எல்லாம் தோட்டத்தில் இருக்கிறதா தாத்தா சொன்னாரு, ஒருத்தரையும் காணோமே, எங்க போயிருப்பாங்க…
(சுற்றும் முற்றும் பார்க்கிறாள்… பின்புறத்தில் இருந்து செல்வியும், பாலுவும் பே… என பயமுறுத்தியபடி குதிக்கின்றனர்….)
மலர்: அடச் சீ… ஏன் இப்படி பயங் காட்டுறிங்க…
பாலு: உன்னை பயப்பட வைக்கத்தான்…
மலர்: நான் ஒண்ணும் பயப்படலப்பா…
செல்வி: அப்ப உனக்கு பயமே கிடையாதா?
பாலு: மலருக்கு பயம் கிடையாது, தைரியந்தான் இல்ல…
மலர்: பயங் காட்டுனதெல்லாம் போதும்… இன்னைக்கு என்ன விளையாட்டு விளையாடலாம் அதைச் சொல்லுங்க?
செல்வி: நாலு பேரு இருந்தா ரெண்டு குழுவா விளையாடலாம்… மலர் நம்ம முத்து எங்க காணோம்?
மலர்: அவனா லீவு விட்டதில இருந்து வீட்டிலேயே அடஞ்சி கிடக்குறான்.
பாலு: மலர் நீ போயி பேசி எப்படியாவது அவன விளையாட கூட்டிக்கிட்டு வர்றியா?
மலர்: சரிடா பாலு, நீங்க ரெண்டு பேரும் இங்கயே இருங்க… நான் அவனப் போயி கூட்டிக்கிட்டு வந்துடுறேன்.
(மலர் போகிறாள்)
காட்சி 2
இடம்: முத்து வீட்டு வாசல்
பங்கேற்போர்: மலர், முத்து.
(மலர் வேகமாக வந்து)
மலர்: முத்து… முத்து…
(முத்து வந்தபடி)
முத்து: வா மலர்… எதுக்கு கூப்பிடுற?
மலர்: நம்ம தெரு முனையில இருக்கிற தோட்டத்துல பாலு, செல்வி எல்லாரும் இருக்காங்கடா… நீயும் வந்தீன்னா நாம ஜாலியா விளையாடலாம்.
முத்து: அய்யய்யோ… நா வரலப்பா… எங்கப்பா வேலையில இருந்து திரும்பி வர்ற நேரம்.. நான் உங்களோட வெளியிலே விளையாடுறதை பாத்தாரு அவ்வளவுதான்…
மலர்: டேய்! முத்து… பள்ளிக்கூடத்திலே எங்களோட சேர்ந்து நல்லா ஆட்டம் போடுறே… இப்ப லீவுதானே வாடா விளையாடலாம்…
முத்து: லீவு நாள்லெ எங்கேயும் வெளியிலே போயி விளையாடக்கூடாது! அப்படின்னு எங்கப்பா வீட்டுலேயே விளையாடச் சொன்னாரு!
மலர்: யாருக்கிட்டே கதை விடுறே; உங்க வீட்டுல உன்னைத் தவிர வேறே யாருமே இல்லே. அப்பறம் எப்படி விளையாட முடியும்?
முத்து: கம்ப்யூட்டர் இருக்கில்ல அதுலே கேம் இருக்கில்ல அதுலே விளையாடுவேன்!
மலர்: சரி… சரி… அதெல்லாம் ஊருக்குள்ளே ஆளே இல்லாதப்ப விளையாடிக்க.. இப்ப நாம எல்லாரும் சேர்ந்து விளையாடலாம். வாடா போலாம்…
முத்து: சரி… நீ கட்டாயப்படுத்தி கூப்பிடுறதுனாலே நான் வர்றேன்… கொஞ்ச நேரம்தான் விளையாடுவேன் எங்க அப்பா வர்றதுக்குள்ள நான் வீட்டுக்கு வந்துடுவேன்…
மலர்: சரி… வா… டேய்… பாலு… செல்வி… முத்து வந்துட்டான்… எல்லாரும் விளையாடலாம்… ஓடியாங்க…
காட்சி 3
இடம்: தோட்டம்
பங்கேற்போர்:
மலர், செல்வி, முத்து, பாலு
(4 குழந்தைகள் வட்டமாக நின்றபடி)
கொலை கொலையா முந்திரிக்கா
நரியே நரியே சுத்திவா…
கொள்ளையடிச்சவன் எங்கிருக்கான்…
கூட்டத்தில் இருக்கான் கண்டுபிடி…
முத்து: செல்வி…. நீ அவுட்டு… இப்ப நீதான் புடிக்கணும்…
குலை குலையா முந்திரிக்கா
நரியே நரியே சுத்தி வா
கொள்ளையடிச்சவன் எங்கிருக்கான்
கூட்டத்தில் இருக்கான் கண்டுபிடி…
செல்வி: டேய்… முத்து உங்க அப்பா வந்துட்டாருடா…
(மற்ற குழந்தைகள் ஓடி விடுகின்றனர்; முத்துவின் அப்பா வருகிறார்)
அப்பா: டேய்… முத்து! நில்லுடா…
(முத்து ஓடப் பார்க்கிறான்)
எங்கே ஓடுறே!… வீட்டுக்கு வா உன்னை கவனிச்சுக்குறேன்!…
(என்று சொல்லியபடி போகிறார்)
காட்சி 4
இடம்: சாலை
பங்கேற்போர்:
முத்து, தாத்தா
(முத்து தனியாக அழுதபடி வருகிறான்.
எதிரே வந்த தாத்தா)
தாத்தா: என்னய்யா… முத்து!… எங்கே அழுதுக்கிட்டே போகிறே?
முத்து: தாத்தா! எங்க அப்பா லீவு நாள்லெ வீட்டை விட்டு எங்கேயும் போகக்கூடாது, வீட்டுலேயே இருக்கணும், கம்ப்யூட்டர்ல மட்டும் விளையாடணும் அப்படின்னு சொன்னாரு…
நான் என் பிரண்டுகளோட சேர்ந்து தோட்டத்துல விளையாடிக்கிட்டு இருந்தத எங்க அப்பா ஆபீஸ்ல இருந்து வரும்போது பாத்துட்டாரு; வீட்டுக்குப் போனா அடிப்பாரு தாத்தா…
தாத்தா: ஓகோ! அப்படியா சமாச்சாரம்! சரி… சரி… நீ என் கூடவா.. நான் உன்னை உங்கப்பா அடிக்காதபடி காப்பாத்துறேன்…
முத்து: அது எப்படி தாத்தா?
தாத்தா: வா… வா… வீட்டுக்குப் போவோம்…
முத்து: தாத்தா எனக்கு ரொம்பப் பயமா இருக்கு… சொன்ன பேச்சைக் கேக்கலைன்னு அப்பா அடிப்பாரு.
தாத்தா: கவலைப்படாதே; நான்தான் உன் கூட வர்றேனே…
காட்சி 5
இடம்: முத்து வீட்டு வாசல்
பங்கேற்போர்:
தாத்தா, அப்பா ஏகாம்பரம், முத்து.
தாத்தா: ஏகாம்பரம், ஏகாம்பரம்…
அப்பா: அடடே! வாங்க தாத்தா! என்னைக்குமில்லாம இன்னைக்கு நம்ம வீட்டுக்கு வந்திருக்கீங்க!
தாத்தா: ஒரு முக்கியமான விஷயமா உன்னை பாக்க வந்தேன்!
அப்பா: அப்படியா என்ன விஷயம் தாத்தா…
தாத்தா: என் பேத்தி மலரு கிளி வளக்கணுன்னு ஆசைப்படுறா… அதனாலே ஒரே ஒரு கிளி அதுவும் நல்ல கிளியா… சின்ன கிளியா வாங்கி ஒரு கூண்டுலெ போட்டு… குடுக்கலாம்னு நினைக்கிறேன்… நீ வாங்கிட்டு வந்து தர்றியாப்பா…
அப்பா: வாங்கிட்டு வரலாம்… அது வளக்கிறது ரொம்ப சிரமம் தாத்தா…
தாத்தா: அட ஒத்தக் கிளி வளக்குறதுலே என்னப்பா சிரமம். கிளி பறக்காதபடி இறக்கையை வெட்டிட்டு கூண்டுக்குள்ள போட்டுடனும். ஒரு சின்னக் கிண்ணம் வாங்கி அதுல பால் பழமெல்லாம் போட்டு கூண்டுக்குள்ள வச்சுட்டா அது சாப்பிட்டுட்டு ஜாலியா இருக்குமில்ல…
அப்பா: அது எப்படி தாத்தா? இறக்கைய வெட்டிப்புட்டு, கிண்ணத்துல பால் பழமா? நல்லாருக்கு தாத்தா… ஒத்தக் கிளிய வாங்கி இப்படி செய்தா அது ஒத்தக் கிளியா இருக்காது… செத்தக் கிளியா போயிடும்…
தாத்தா: ஏகாம்பரம்… கிளி வாங்க வேணாம்… நீ சொல்ற மாதிரி அது நமக்கு மட்டும் இல்லெ… கிளிக்கும் சிரமந்தான்… அது சரி உன் மகன் முத்து எங்கே?
அப்பா: அவனைப் பத்தி பேசாதிங்க தாத்தா… சொன்னப் பேச்சு கேக்காத பய…
தாத்தா: அப்படியெல்லாம் சொல்லாதப்பா… ஏன் கோபப்படுறே….
அப்பா: கோபப்படாம என்ன செய்யிறது? லீவுல வெளியிலே போயி பசங்களோட சேந்து ஆட்டம் போடக் கூடாதுன்னு சொல்லி கம்ப்யூட்டர் வாங்கி வச்சு வீட்டுலேயே விளையாடுன்னு சொன்னா… கேக்காம வெளியிலே போயி விளையாடுறான்…
தாத்தா: ஓகோ! அதுக்குத்தான் கோபப்படுறியா? ஏன் குழந்தை வெளியிலே போயி விளையாடக் கூடாதா?
அப்பா: தாத்தா… அக்கம் பக்கத்து வீட்டுப் பிள்ளைகளோட சேர்ந்து ஆட்டம் போட்டா அப்பறம் சரியா படிக்க மாட்டான் தாத்தா… அது மட்டுமில்லே… வீண் வம்புதான் வந்து சேரும்…
தாத்தா: அப்படியா? அது சரி; நீ சின்ன புள்ளையா இருக்கும்போது வீட்டுக்குள்ளவே இருந்தியா?
அப்பா: இல்லே…
தாத்தா: அப்புறம் உன் மகன் மட்டும் வீட்டுக்குள்ளவே இருக்கணும்ங்கிறே…
அப்பா: அப்ப இந்த மாதிரி கம்ப்யூட்டர் வசதியெல்லாம் இல்லே…
தாத்தா: அப்பா… ஏகாம்பரம் விஞ்ஞான வசதி என்னதான் பெருகுனாலும்… மனித உடம்பு இருக்கே அது இயற்கையா இயங்குனாதான் நல்லது. உட்கார்ந்த இடத்திலேயே புள்ளை விளையாடிக்கிட்டிருந்தா உடம்பும் மனசும் வீணாப் போயிடும்… படிப்பு எப்படி குழந்தைக்கு முக்கியமோ… அதேமாதிரி உடம்பை இயக்கி விளையாடுற விளையாட்டும் முக்கியம்.
அது மட்டுமில்லே… குழந்தைங்க கூட்டமா சேர்ந்து விளையாடும்போது மனசுக்கு மகிழ்ச்சியும், நம்மாலே முடியும் அப்படிங்கிற தன்னம்பிக்கையும் உண்டாகுது… மத்தவங்களோட விட்டுக்குடுத்து இணைஞ்சு செயல்படுற நல்ல பண்பும் வளருது. விளையாட்டுலெ வெற்றி தோல்வியை சந்திக்கிறதாலே மனம் பக்குவப்படவும் வாய்ப்பு இருக்கு…
அப்பா: அட… இந்த சின்ன விளையாட்டு விஷயத்திலே இவ்வளவு பெரிய உண்மை இருக்கா…
தாத்தா: ஆமாப்பா… சின்ன கிளியை கூண்டுல அடச்சு வச்சு கிண்ணத்தில் பால் பழம் தந்தா அது மகிழ்ச்சியா இருக்காதுன்னு தெரிஞ்ச உனக்கு குழந்தையை வீட்டுக்குள்ளெவே அடச்சு வச்சா மகிழ்ச்சி அடையாதுன்னு தெரிய வேணாமா? குழந்தைங்க விளையாடுறதுக்கான வாய்ப்பை நம்மள மாதிரி பெரியவங்கதான் உருவாக்கித் தரணும்.
அப்பா: தப்புதான் தாத்தா! தப்புதான்… நான் கோபப்பட்டதாலே முத்து பயந்து ஓடுனான்… எங்கே போனான்னு தெரியலியே… அவங்க அம்மாவும் வீட்டுலெ இல்லே… நான் எங்கே போயி தேடுவேன்…
தாத்தா: நீ எங்கேயும் போயி தேட வேணாம்… முத்து இங்கேதான் இருக்கான்…
(தாத்தாவுக்குப் பின்னால் இருந்து முத்து மெதுவாக வெளியே வருகிறான்)
அப்பா: அடடே… முத்து இவ்வளவு நேரம் இங்கதான் இருந்தியா, சரி சரி நீ போயி கொஞ்ச நேரம் விளையாடிட்டு வா…
முத்து: அப்பா! உண்மையாவா சொல்றீங்க…?
அப்பா: ஆமாப்பா… குழந்தை படிக்கிறது எவ்வளவு முக்கியமோ அதேமாதிரி ஓடி விளையாடுறதும் முக்கியம்னு நல்லாப் புரிஞ்சுக்கிட்டேன்.
முத்து: தாத்தா… ரொம்ப நன்றி… வர்றேன் தாத்தா…
தாத்தா: விளையாடும்போது கவனமா விளையாடணும்… ஓடு… ஓடு… உன் நண்பர்கள் எல்லாம் உனக்காகக் காத்துக்கிட்டு இருப்பாங்க…
முத்து: அப்பா டாட்டா…
அப்பா: போ முத்து ஓடி விளையாடு…
முற்றும்