மின்சாரம் எதனால் ஆனது? 5
சென்ற கட்டுரையில், ஓடிக் கொண்டிருக்கும் எலக்ட்ரான்கள் தன்னுடைய ஆற்றலை (I) இழந்து விடாதவாறு கடத்தப்பட, மின்னழுத்த வேறுபாடு (V) என்ற ஒன்று அவசியம் என்பதைப் பார்த்தோம். அவ்வாறு மின்னழுத்த வேறுபாடு இருந்தாலும், கடத்தி வழியே கடத்தப்படும் மின்னோட்டத்திற்கு எதிராக அந்த கடத்தி மின்தடையை (R) செலுத்தும் என்றும், அந்த மின்தடையானது ஒவ்வொரு கடத்திக்கும் மாறாத ஒரு அளவு என்பதையும் பார்த்தோம். ஓமின் விதிப்படி V=IR என்பதையும் பார்த்தோம்.
எல்லாம் சரி, ஓடிக்கொண்டிருக்கும் எலக்ட்ரான்களை எவ்வாறு நாம் ஆக்கப்பூர்வ மான வழிக்கு பயன்படுத்திக் கொள்வது? மிக எளிமையான மின் சாதனமான மின் விளக்கினை எடுத்துக் கொள்வோம். மின் விளக்கினுள், இரு மின்முனை இருக்கும், அந்த மின் முனைகளை ஒரு அதிமின்தடை கொண்ட மின்கடத்தி இணைத்திருக்கும்.
அவ்வாறு வைக்கப்பட்டிருக்கும் இந்த அதிமின்தடை கொண்ட கடத்தி வழியே மின்னூட்டம் கொண்ட எலக்ட்ரான்களை கடத்தும் போது, ஓடிக்கொண்டிருக்கும் எலக்ட்ரான்களிடமிருந்து ஒரு குறிப்பிட்ட அளவு ஆற்றலை மின்தடையானது இழக்கச் செய்யும். இழக்கப்படும் அந்த ஆற்றலானது ஒளியாற்றலாக மாற்றப்பட்டு வெளியேற்றப்படும். இவ்வாறு மின்விளக்கினை நாம் ஒளியூட்டும் மின்சாதனமாக பயன்படுத்திக் கொள்ளலாம்.
இதேபோன்று தான், ஓடிக் கொண்டிருக்கும் எலக்ட்ரான்களிடமிருக்கும் ஆற்றலை நாம் பல்வேறு பயனுள்ள ஆற்றல்களாக மாற்றி பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். இவ்வாறு மின்னாற்றலை பயனுள்ள ஆற்றல்களாக மாற்றுவதற்காகத்தான் நாம் பல்வேறு மின்சாதனங்களை உருவாக்கியுள்ளோம்.
இவ்வாறு மின்னூட்டம் பெற்ற எலக்ட்ரான்களால் செய்யப்படும் ஆக்கப்பூர்வமான வேலையானது ‘திறன்’ என்று அழைக்கப்படுகிறது. இந்த திறனை, ‘Watt’ என்ற அலகால் நாம் அளவிடுகிறோம். நீங்கள் ஏதேனும் ஒரு புதிய மின்சாதனத்தை வாங்கினால், அதில் அந்த மின்சாதனத்தின் திறனானது ‘W’ குறிக்கப்பட் டிருப்பதைக் காணலாம். இந்த ‘வாட்’அய் நாம் அளக்க பயன்படும் தொடர்பானது, W=VA.
இந்தத் தொடர்பானது, நம் அன்றாட வாழ்வில் மிக முக்கியமான ஒரு புதிரை தீர்க்க உதவுகிறது. நாம் நம் வீடுகளில் பல தருணங்களில், சில மின்சாதனங்களைப் பயன்படுத்தும் போது, இதை இந்த மின்முனையில் பயன்படுத்தலாமா என்ற கேள்விக்குறி நமக்குள் எழும். மேற்குறிப்பிட்டுள்ள அந்த மின் தொடர்பினை பயன்படுத்தினால், இதை எளிதாக தீர்க்கலாம்.
நம் வீடுகளில், அரசு வழங்கும் மின்சாரமானது, 220V மின்னழுத்தத்தைக் கொண்டிருக்கும். நம் வீடுகளில் இரு விதமான மின்முனைகளை (Plug Points) நாம் பார்த்திருப்போம். சாதாரண மின்சாதனங்களை பயன்படுத்த ஒருவித மின்முனை, சற்று அதிக வாட் மின் சாதனங்களான குளிர்சாதனப் பெட்டி, கிரைண்டர், மின்சலவை பெட்டி போன்ற சாதனங்களை பயன்படுத்த சற்று பெரிய வடிவம் கொண்ட மின்முனை. சற்று உற்று நோக்கினால், சாதாரண மின்முனை 6A என்றும், சற்று பெரிய மின்முனையில் 16A என்றும் குறிக்கப்பட்டிருக்கும். ஆகவே, மேற் கொண்ட தொடர்பினை பயன்படுத்தினால், W=VA.,
6A, 220V கொண்ட plug point-இல், W=6X220; W=1320. ஆகவே, 6கி மின்முனையில், 1300W அளவிலான மின்சாதனங்களை பயன்படுத்தலாம். அதேபோல் 16A, 220V கொண்ட plug point-இல், W=16X220; W=3520. ஆகவே, 16A மின்முனையில், 3500W அளவி லான மின்சாதனங்களை பயன்படுத்தலாம்.
எனவே, அடுத்தமுறை எந்த மின்சாதனத்தை எந்த மின்முனையில் பயன்படுத்துவது என்ற சந்தேகம் எழும் போது, மேற்குறிப்பிட்டுள்ள தொடர்பினை பயன்படுத்தி நீங்களே எளிதாக அறிந்து கொள்ளலாம்.