டம்டம் மற்றும் டமாடமா
டம்டம் மற்றும் டமாடமா இருவரும் நண்பர்கள். பள்ளித் தோழர்கள். இரண்டுமே முயல்குட்டிகள். டம்டம் கருப்பு நிறத்திலும் டமாடமா வெள்ளை நிறத்திலும் இருக்கும். பெருங்காட்டில் முயலூர் என்ற சிற்றூரில் இருவரும் வசித்து வந்தனர். பெயரில் உள்ளது போலவே முயலூரில் முயல்கள் மட்டுமே இருந்தன. அவர்களுக்கு என்று வீடுகள், பள்ளி, கடைகள் என்று இருந்தன. முயலூர் ஆரம்பப் பள்ளியின் தேர்வுகள் இன்றுடன் முடிவிற்கு வந்துவிட்டன. பூங்காவில் விளையாடி முடித்துவிட்டு ‘நாளைக்கு விடுமுறை ஆரம்பிக்கின்றதே என்ன செய்யலாம் டமாடமா?’ எனக் கேட்டது டம்டம்.
கொஞ்ச நேர யோசனைக்குப் பிறகு ‘யாருக்கும் தெரியாமல் கரடியூருக்குப் போகலாமா?’ என்றது டமாடமா. இருவருக்கும் அந்த யோசனை பிடித்து இருந்தது. அதன்படியே மறுநாள் விடியற்காலை கரடியூர் சென்று அன்று மாலையே திரும்பலாம் என முடிவு செய்தன. நண்பர்களுடன் பக்கத்துத் தெருவில் விளையாடுகிறோம் என வீட்டில் சொல்லிவிட்டு, இரண்டு கேரட்டுகளைப் பையில் போட்டுக்கொண்டு டம்டம்மும் டமாடமாவும் கிளம்பின.
தங்கள் பெற்றோர்கள் கரடியூரை பற்றிப் எப்பொழுதோ பேசியபோது கேட்டு இருக்கின்றனர். வடக்குப் பக்கம் இருக்கின்றது. இரண்டு கிலோமீட்டர் தூரம் இருக்கின்றது. இந்தச் செய்திகள் மட்டும் தான் கரடியூரைப் பற்றித் தெரியும். பார்த்துக் கொள்வோம் வா என அழைத்துச் சென்றது டமாடமா. முதலில் வேகமாக ஓடின. களைத்ததால் சிறிது நேரம் மர நிழலில் ஓய்வு எடுத்தன. அவை பாதித் தூரம் கடந்து விட்டன. பிறகுதான் வழியில் ஒரு ஆறு இருக்கின்ற விவரம் தெரியவந்தது. ‘ஆ… என்ன செய்ய நண்பனே, நம் சின்ன உருவத்தால் ஆற்றைக் கடக்க முடியாதே.. என்ன செய்யலாம்? திரும்பிடலாமா?’ என்றது டம்டம்.
‘வருந்தாதே.. ஏதேனும் வழி இருக்கும்.. பொறு’ எனத் தைரியம் கொடுத்தது டமாடமா. பசித்ததால் இரண்டும் பாதிப் பாதி கேரட்டினை சாப்பிட்டன.
அந்த நேரம் பார்த்து புள்ளிமான் அந்தப் பக்கம் வந்தது. டமாடமா அதன் அருகே சென்று, ‘மான் அண்ணா, நாங்கள் முயலூரில் இருந்து வருகின்றோம். கரடியூருக்குப் போக வேண்டும், இந்த ஆற்றை எப்படிக் கடப்பது? எங்களுக்கு உதவ முடியுமா?’ என்றது.
‘தம்பி, அதோ அந்த மரத்தை கடந்ததும் ஆறு சிறியதாக ஓடும். அங்கே மரப்பாலம் ஒன்று இருக்கின்றது. அதன் மீது ஏறி ஆற்றை எளிதாகக் கடக்கலாம்’ என்று சொல்லியபடியே வேறு திசையில் ஓடியது புள்ளிமான்.
‘நன்றி அண்ணா’ எனச் சொல்லும் முன்னரே மான் காணவில்லை. மான் சொன்ன திசையில் சென்று, மரப் பாலத்தைக் கொண்டு எளிதாக ஆற்றைக் கடந்தனர். கொஞ்ச தூரத்திலேயே.
‘கரடியூர் உங்களை அன்புடன் வரவேற்கிறது’ என்ற பலகை வரவேற்றது. முயலூரில் இதே போல எழுதி வைக்க வேண்டும் என டம்டம் சொல்லிக் கொண்டது. செய்திடலாம் எனத் தலையசைத்தது டமாடமா.
முயலூரில் முயல்கள் மட்டும் வசிப்பது போலக் கரடியூரில் கரடிகள் மட்டும் வசிக்கின்றன. ஊரை அடைந்ததும் பதுங்கியபடியே நகர்ந்தன இரண்டு நண்பர்களும். ‘பள்ளி’ என எழுதிய இடத்தில் வசதியாக மறைந்து கொண்டன. கரடியூரில் இன்னும் பள்ளிக்கு விடுமுறை ஆரம்பிக்கவில்லை. பள்ளியின் மணி ஓசை கேட்டது. குட்டிக்கரடிகள் வேகவேகமாகப் பள்ளி வகுப்பு நோக்கி விரைந்தன. அனைத்து கரடிகளின் கழுத்திலும் ஒரே மாதிரியான பை தொங்கியது. யானையார் தான் வகுப்பு ஆசிரியர். யானையூரில் இருந்து தினமும் நடந்து வந்து பாடம் எடுக்கின்றார்.
கரடிகள் பள்ளிக்கு வந்து அரட்டை அடித்து, அவரவர் இருக்கையில் அமர்ந்தன. ஒரு கரடி கரும் பலகையைத் துடைத்தது, ஆசிரியர் வந்ததும் எல்லாக் கரடியும் எழுந்து நின்று வணக்கம் வைத்தன. இச் செயல்கள் அனைத்தையும் ஓரமாய் நின்றபடி கவனித்தன டம்டம்மும் டமாடமாவும். பார்க்கவே புதுமாதிரியாகவும் இனிமையாகவும் இருந்தது. வகுப்புகளுக்கு கூரை மட்டும் இருந்தது. கரும்பலகை மிக நீளமாக இருந்தது. வகுப்பு அறையும் அரைவட்ட வடிவத்தில் தான் இருந்தது.
பள்ளிக்கு மிகவும் தாமதமாக ஆடி அசைந்து வந்தது ஒரு கரடி. வியர்த்துக் கொட்டியது. ஆசிரியரான யானையார் ‘’தினமும் ஏன் தாமதமாக வருகின்றாய், ஒவ்வொரு நாளும் புது புதுக் காரணம் சொல்வாயே; இன்றென்ன காரணம்?’ என்றது. தினமும் இந்தக் கரடி பள்ளிக்கு தாமதமாக வருகின்றது. காலை எழுந்துகொள்வதே தாமதம்தான்.
காலையில் சீக்கிரம் எழுந்தால்தானே எல்லா வேலையையும் முடித்துவிட்டு விரைவாக பள்ளிக்குப் போக முடியும். தாமதமாக வருவதற்கான நிறைய பொய்களை ஏற்கனவே சொல்லிவிட்டது. பேந்த பேந்த முழித்த அந்தக் கரடி எதேச்சையாக இரண்டு முயல்கள் பதுங்கி இருப்பதைக் கவனித்து விட்டது.
உடனே ‘ஆசிரியரே, அதோ அந்த இரண்டு முயல்கள் தான் என்னிடம் வம்பளந்து நான் தாமதமாக வரக் காரணமாயின. அவர்களுக்கு ஆளுக்கு மூன்று கேரட் வேண்டுமாம், என்னை வழி மறித்து பள்ளிக்கு வரவே விடவில்லை. ரொம்பப் பயந்துவிட்டேன்’ என்றது, பொய் சொல்லியும் திசை திருப்பியும்.
எல்லோர் பார்வையும் டம்டம் டமாடமா மீது விழுந்தது. டம்டம் பயந்துவிட்டது, யானையார் மற்றும் கரடிகள் கண்ணில் மாட்டிக்கொண்டு விட்டோமே என்றுதான். டமாடமா பயப்படவில்லை..’ வணக்கம் ஆசிரியரே, என் பெயர் டமாடமா, இது என் நண்பன் டம்டம்…’ என ஆரம்பித்து அங்கு வந்து சேர்ந்த கதையினை விவரித்தது.
முன்பின் பார்த்திராத முயல்கள் வம்பளந்தது, கேரட் கேட்டது எனப் பொய் சொன்ன கரடியை யானையார் கண்டித்தது. இனி இப்படி நிகழாமல் தினமும் சீக்கிரம் வகுப்பிற்கு வரச்சொன்னார் ஆசிரியர். டம்டம் மற்றும் டமாடமா பக்கம் திரும்பி, ‘முயல்களே, இப்படிப் பெரியவர்களிடம் சொல்லிக்கொள்ளாமல் வெளியே வருவது தப்பு. காடு ஆபத்துகள் நிறைந்தது. சரியா?’ எனப் பக்குவமாகச் சொன்னார் யானையார். ஆசிரியர் ஆச்சே.
அன்றைய தினம் மட்டும் யானையின் வகுப்பில் அமர அனுமதி கேட்டது டமாடமா. அதற்கு யானையாரை ரொம்பவே பிடித்துவிட்டது. யானையாரும் சம்மதம் தந்தது. மதிய இடைவேளையின் போது கரடிகள் தங்கள் சாப்பாட்டில் கொஞ்சம் கொஞ்சம் முயல்களுக்குக் கொடுத்தன. அவை வித்தியாசமான உணவாகவும், புதுவித அனுபவமாகவும் இருந்தது. ஆனந்தமாகச் சாப்பிட்டன டம்டம்மும் டமாடமாவும். பிறகு மாலை அனைவரிடமும் விடைபெற்று முயலூருக்கு அதே பாலம் வழியாக வீடு திரும்பின. விடுமுறை முழுக்கக் கரடியூரை பற்றியும் யானையாரைப் பற்றியும் ரகசியமாகப் பேசிக்கொண்டன _ டம்டமும் டமாடமாவும்.