சும்மா மொக்க போடாதீங்க
உங்களைப் போல சின்…ன வயசப்போ, கனவுல ஒவ்வொரு காலையும் எடுத்து வச்சா அப்…படியே மிதக்கிற மாதிரி; ஸ்பிரிங்குல காலை வச்சா அது நோ…காம தூக்கிவிடும் பாருங்க! சும்மா இலவம் பஞ்சுபோல நம்ம உடம்பே இலே…சாகி மெ…ல்ல பறந்திருப்போம்! காற்று போ…ல மாறியிருப்போம்! அந்த சுகத்தை எப்பவாவது அனுபவிச்-சிருக்கீங்களா? இல்லையா? அட என்னங்க நீங்க! சரி, இதுவரைக்கும் வரலேன்னா பரவாயில்லை விட்டுத்தள்ளுங்க. ஆனாலும், கற்பனை பண்ணியாவது அதை அனுபவிச்சிடனுங்க! விட்டுறக்கூடாது. எப்படிங்கறீங்களா?
“அளந்து பேசு… இல்லன்னா என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது?’’- எங்கேயோ கேட்ட குரல் மாதிரி இருக்கா? அதென்ன அளந்து பேசுவது? படிப்படியா குறைப்பேன்னுகூட யாரோ சொன்னாங்களே! அவங்க சொன்னதில் இருக்கிற ‘படி’ கூட ஒரு அளவுதான். ஆனால், அவங்க சொன்ன ‘படி’க்கு கொஞ்சம் கொஞ்சமா அப்பிடின்னுதான் பொருள்! நான் சொல்ற ‘படி’ , ‘மரக்கா’, அப்பிடிங்கிறதெல்லாம் அளவுகள்!
இதெல்லாம் இப்போ நடைமுறையிலேயே இல்லை. அதுக்காக பள்ளிக்கூடத்திலே ‘படி’ன்னு சொல்றதும் அப்படித்தானான்னு கேட்காதீங்க. அது வேற! இது வேற! சரி ஏதோ ஒன்னு! எல்லாத்தையும் அளக்கமுடியும்! அவ்வளவுதான் விசயம். அதாவது, திடப்பொருள்களை அளப்பதற்கு கிலோகிராம்! திரவப்பொருள்களை அளப்பதற்கு கிலோ லிட்டர்! அப்பிடின்னு எல்லா…த்துக்கும் ஒவ்வொரு அளவுகள் இருக்குதுங்க.
சரி, எல்லா திடப்பொருள்களையும் கிலோ கிராம் மூலம் அளக்கமுடியுமா? ஏன் முடியாது? அப்படித்தானே இப்போ அளந்துகிட்டு இருக்கோம்? அப்பிடின்னு வீராப்பா பேசறவங்க, “எங்கே மேற்குத்தொடர்ச்சி மலையை கிலோகிராமுல அளந்து சொல்லுங்க பார்க்கலாம்?” என்று கேட்டா, என்ன பண்றது? மலைச்சுப்போகாமல், “எங்ககிட்டயேவா? மலை என்னங்க பெரி…ய்ய மலை! அதைவிட பெரி….ய்ய இந்த பூமியையே அளக்கலாமுன்னு சொல்லுங்க!’’ ஆமாங்க!
அதுக்கும்கூட அளவெல்லாம் கண்டுபுடிச்சு வச்சிட்டாங்க! யே… அப்பா! யாரு அந்த கில்லாடிங்கறீங்களா? வேற யாரு? நம்ம நியூட்டன்தாங்க! அதாவது, ஈர்ப்பு விசையை வைச்சுதான் பூமி மாதிரி கோள்களின் எடையை அளந்து சொல்றாங்க! அதுக்கு பேருகூட ‘நியூட்டன் அளவு’தான்! அந்த அளவுலே அளந்து பார்த்தா பூமி, நியூட்டன் 10 அப்பிடிங்கற அளவுலே இருக்காம்!
சரி, நிறையின்னு சொல்லும்போது உருவத்தைப் பார்த்தும் சொல்லிட முடியாது. ஏன்னா? சூரியக் குடும்பத்தில் வியாழன்தான் பெரி…ய கோள்! அப்பிடின்னா வியாழனோட நிறையும் அதாவது எடையும் அதேமாதிரி பெருசா இருக்கும்தானே நினைக்கறீங்க? அதாங்க இல்லே! ஏன்னா? வியாழன் ஒரு வாயுக்கோள்! அதனால பூமி மாதிரி அடர்த்தி அதில இல்லை. ஆகவே, அதோட நிறை குறைவுதான். இப்படி ஒவ்வொன்றுக்கும் மாறுபாடு, வேறுபாடு உண்டுங்க.
நாம சொல்ல வந்தது என்னன்னா? அந்தந்த கோள்களோட ஈர்ப்பு சக்தி குறையவும் செய்யாது. கூடவும் செய்யாது. ஏன்? அப்படி ஈர்ப்பு விசை குறையணுமுன்னா பூமி சின்னதாகனும். அதாவது எடை குறையணும்! ஈர்ப்பு விசை கூடணுமுன்னா, பூமியோட எடை அதிகமாகனும்! அதாவது பூமி பெருசாகனும்! இது சாத்தியமா? அதையும்தான் பார்த்திடலாமே!
ஏதாவது ஒரு பெரிய விண்கல் வந்து பூமியிலே விழுந்தா, அந்தக் கல்லோட எடையளவுக்கு பூமியின் எடை அதிகமாக வாய்ப்பிருக்கிறது. அதேபோல ஒரு விண்கல் மோதி பூமியோட ஒருபகுதியே சிதறிப்போச்சுன்னா, எவ்வளவு சிதறிப்போகுதோ அந்தளவுக்கு எடை குறையலாம். சரிதானே? சரி எடை அதிகமானா என்னாகும்? அதிகமான எடையளவுக்கு ஈர்ப்பு சக்தியும் அதிகரிக்கும். ஓ…! அதேபோல குறைஞ்சாலும் ஈர்ப்பு சக்தியும் அதே அளவு குறையும்.
இப்போ பூமியிலிருக்கிற ஈர்ப்பு சக்தி உயிர்களுக்கான சரியான அளவில் இருப்பதால்தான், நாம் நடக்கிறோம். இல்லேன்னா என்னாகும்? எடை அதிகமானா? ஈர்ப்பு சக்தி அதிகமாகி நம்ம கால் பூமியோடவே ஒட்டிக்கும். இன்னும் அதிகமானா? ஏங்க? ஏங்க? அதெல்லாம் நமக்கெதுக்குங்க? அது நம்ம டாபிக்கே கிடையாதுங்க! சரி சொல்லித்தான் ஆகனுங்கறீங்களா? சரி… பூமியோட எடை இன்னும் அதிகமானா நாம பூமிக்குள்ளயே புதைஞ்சே போயிடுவோம்!
பார்த்தீங்களா, பார்த்தீங்களா இதனாலதான் சொல்ல மாட்டேன்னு சொன்னேன். சரி, எடை குறைஞ்சா? ஆங்… அப்படி வாங்க வழிக்கு! பூமியோட எடை குறைஞ்சுதன்னா எப்படி இருக்கும் தெரியுமா? அவங்கவங்க கண்ணை மூடி கனவு காணுங்க! கனவுல அப்படியே உங்க ஒவ்வொரு காலையும் எடுத்து வைங்க… அப்…படியே மிதக்கிற மாதிரி; ஸ்பிரிங்குல காலை வச்சா அது நோ…காம தூக்கிவிடுற மாதிரி! சும்மா இலவம் பஞ்சுபோல உங்க உடம்பே இலே…சாகி, காற்று மா…திரி மெ…ல்ல பறக்கறீங்க… அட! அட! காண கண்ணு ஆயிரம் வேணுங்க! போதும், போதும் கனவு முடிஞ்சுது வெளியில வாங்க!
சரி, இப்போ சந்தோசம்தானே? இனிமேல் விண்கல்லோ, ஸ்கைலாப் மாதிரி சேட்டிலைட்டோ பூமி மேல விழுந்து மனிதகுலமே அழியப்போகுது அது இதுன்னு சொல்லி பயமுறுத்தினா பயப்படுவீங்களா?
‘’பயமா? எங்களுக்கா? ச்சே! ச்சே! பயமுறுத்தறவங்களையே சும்…மா மொக்…க பண்ணிறமாட்டோம்!’’.