குழந்தைகள் நாடகம்
கதா பாத்திரங்கள்:
மணி, அம்மா அலமேலு,
மாமா, முத்து, டாக்டர்.
தேவையான பொருள்கள்:
டாக்டர் உடை, ஸ்டெதஸ் கோப்,
கட்டில் (அ) பெஞ்ச், தலையணை, போர்வை
காட்சி : 1
இடம் : மணி வீடு
மணி : அம்மா… அம்மா…
அம்மா : என்னடா மணி… என்னா…?
மணி : அம்மா பசிக்குதும்மா… நான் சாப்பிட்டுட்டு என் பிரண்டுங்களோட விளையாடப் போகணும்மா…
அம்மா : இட்லி தயாராயிடுச்சு சட்னி அரைக்கத்தான் தேங்கா இல்ல. நீ சைக்கிள் எடுத்துக்கிட்டு மார்க்கெட்டுக்குப் போயி ஒரு தேங்கா வாங்கிக்கிட்டு வந்துடுறியா…
மணி : ம்மா… ரொம்ப பசிக்குதுமா…
அம்மா : நீ போயி தேங்கா வாங்கிட்டு வந்தாத்தான் சட்னி அரைக்க முடியும்… சாப்பிட முடியும்…
மணி : சரி போறேன்… அம்மா…. சைக்கிள்ல பின்னாடி வீல்ல காத்து குறைவா இருக்கு… அடிச்சுக்கிட்டுப் போறேன்…
அம்மா : சீக்கிரமா போயிட்டு வா…
மணி : அய்யா சைக்கிள் எடுத்தா சல்லுன்னு போயிட்டு வந்துடுவேன்…
அம்மா : அந்த அலமாரியில காசு வச்சு இருக்கேன்… எடுத்துக்கிட்டு பத்திரமா போயிட்டு… சீக்கிரமா வா…
மணி : சரிம்மா…
(மணி வேகமாக ஓடுகிறான்)
காட்சி : 2
இடம் : சாலை
பங்கேற்போர் : முத்து, மாமா, மாணிக்கம்
(மாமா வந்து கொண்டிருக்கிறார். எதிரே முத்து ஓடி வருகிறான்…)
மாமா : முத்து! முத்து! எங்க இவ்வளவு அவசரமா ஓடுறே…?
முத்து : மாமா!… நம்ம கடைசி வீட்டு மணி சைக்கிள் ஓட்டிக்கிட்டு போகும்போது எதிர வந்த ஸ்கூட்டர்ல மோதி கீழ விழுந்து அடிபட்டுட்டான்…
மாமா : அய்யய்யோ… இப்ப மணி எங்க இருக்கான்? எப்படி இருக்கான்…
முத்து : தலையிலயும், கையிலயும் அடி பட்டுடுச்சு… அக்கம் பக்கத்தில உள்ளவங்க எல்லாரும் மணிய கூட்டிக்கிட்டு ஆஸ்பத்திரிக்கு போயிருக்காங்க…
மாமா : எந்த ஆஸ்பத்திரிக்கு…
முத்து : பெரிய ஆஸ்பத்திரிக்குத்தான்…
மாமா : நீ போயி அவங்க அப்பா அம்மாக்கிட்ட தகவல் சொல்லிட்டு ஆஸ்பத்திரிக்கு வந்துடு… நான் உடனே ஆஸ்பத்திரிக்கு போறேன்…
முத்து : சரிங்க மாமா…
காட்சி : 3
இடம் : மருத்துவமனை
பங்கேற்போர் : மணி, டாக்டர், மாமா, அம்மா அலமேலு
(தலையில் கட்டுடன் கட்டிலில் மணி படுத்து இருக்கிறான். டாக்டர் பரிசோதித்துக் கொண்டு இருக்கிறார். மாமா உள்ளே நுழைகிறார்.)
மாமா : வணக்கம் டாக்டர்…
டாக்டர் : வணக்கம் வாங்க! நீங்க இந்தப் பையனுக்கு உறவா…
மாமா : உறவில்ல… எங்கத் தெரு பையன்… அதான் பாக்க வந்தேன்… எப்படி இருக்கு மணிக்கு…
டாக்டர் : தலையிலயும், கையிலயும்தான் லேசா அடிபட்டு இருக்கு… பயப்படுற மாதிரி ஒன்னும் இல்ல… ஊசி போட்டு இருக்கேன்…
மாமா : ரொம்ப நன்றிங்க டாக்டர்… பையனைப் பார்க்கலாமா?
டாக்டர் : பாருங்க…
(டாக்டர் போகிறார்… மாமா மணியின் அருகில் சென்று…)
மாமா : மணி… மணி…
மணி : ம்… யாரு…? வாங்க மாமா… அம்மா வரல…?
மாமா : உங்க அம்மாவ கூட்டிக்கிட்டு வர முத்து போயிருக்கான்… இப்ப வந்துடுவாங்க…
(அம்மா அலமேலு அழுதபடி உள்ளே வந்து)
அம்மா : மணி… அய்யா… உனக்கு என்னப்பா ஆச்சு… படுபாவி எவனோ ஸ்கூட்டர்காரன்… என் புள்ளைய இடிச்சுப்புட்டு நிக்காம போயிட்டானாமே… அவன் நல்லா இருப்பானா…
மாமா : அலமேலு அக்கா! கொஞ்சம் அமைதியா இருங்க… இது ஆஸ்பத்திரி இங்கே சத்தம் போடக்கூடாது… மத்த நோயாளிகளுக்கு சிரம்மா இருக்குமில்ல… கொஞ்சம் மெதுவா பேசுங்க…
அம்மா : என்னாத்த நான் மெதுவா பேசுரது… தேங்கா வாங்கப்போன புள்ளக்கு இப்படி ஆயிடுச்சே…
மாமா : அலமேலு அக்கா… அடிப்பட்டு படுத்து இருக்கிறவனே அமைதியா இருக்கான்… நீங்க ஏன் சத்தம் போடுறிங்க…
மணி : (சோகமாக) அம்மா… அம்மா…
அம்மா : என்னாப்பா மணி…
மணி : அம்மா… நீங்க அவசரமா தேங்கா வேணும்னு கேட்டதால வேகவேகமா சைக்கிளை ஓட்டிக் கிட்டுப் போயி, சிக்னல்ல சிவப்பு விளக்கு எரியிறதை கவனிக்காம திரும்பிட்டேன்… அதனால எதிர்ல வந்த ஸ்கூட்டர் மேலே இடிட்டு விழுந்துட்டேன்… இதுதாம்மா நடந்தது….
அம்மா : சின்னப்புள்ள நீ எப்படி வந்தா என்ன… ஸ்கூட்டர்ல வந்த பெரிய மனுசன்… பாத்துப் போகக்கூடாது. அவனுக்கு கண்ணு முகத்துல இருந்துச்சா… முதுகுல இருந்துச்சா…
மாமா : எல்லாம் இருக்க வேண்டிய இடத்துலதான் இருக்கும்… சாலையில வாகனம் ஓட்டுறவங்க… நடந்து போறவங்க… குறிப்பா இந்த மாதிரி குழந்தைகள்… நம்மளை மாதிரி பெரியவங்க… எல்லாருமே கவனமா போகணும்… வரணும். அதுலயும் முக்கியமா சாலை விதிகளை மதிச்சு நடக்கணும்…
அம்மா : இந்த சின்னப்பிள்ளைக்குக் கூடவா விதி வெண்டக்கா எல்லாம்…
மாமா : சின்னப்புள்ளன்னா… அவனும் ஒரு உயிர்தான்… எல்லாரும் கடை புடிக்கிறதுக்குப் பேறுதான் விதி… அதை மீறுனா யாரா இருந்தாலும் தப்புதான்…
அம்மா : புள்ளைய தேங்கா வாங்க அனுப்பிட்டு… ஆஸ்பத்திரியில வந்து பாக்குறனே… இது என் தலை விதி…
மாமா : இல்லாத தலை விதியை நல்லா தெரிஞ்சு வச்சு இருக்கோம்… சாலை விதிகளைத்தான் சரியா தெரிஞ்சுக்க மாட்டேங்குறோம்.
அம்மா : இப்படி நடக்குன்னு யாருக்குத் தெரியும்…
மாமா : இப்படி நடக்காம இருக்கணும்னா எல்லாரும் கவனமா இருக்கனும்… சரி சரி… எனக்கு வேலைக்கு நேரமாச்சு. நாளைக்கு நீ வீட்டுக்கு வந்ததும்… உன்ன வந்து பாக்குறேன்… மணி… வரட்டுமா…
மணி : சரிங்க மாமா…
காட்சி : 4
இடம் : மரத்தடி
பங்கேற்போர் : மாமா, முத்து, மணி
(மாமா வந்து கொண்டே)
மாமா : வாப்பா முத்து! மணிக்கு ஒடம்பு எப்படி இருக்கு….
மணி : எனக்கு ஒடம்பு நல்லாயிடுச்சு மாமா…
மாமா : அடடே வா மணி…. கை வலி எல்லாம் எப்படி இருக்கு
மணி : சரியா போயிடுச்சுங்க மாமா!
முத்து : சின்னக் காயமா இருந்ததுனால மணி தப்பிச்சான்… இதுவே கொஞ்சம் பெருங்காயமா இருந்திருந்தா…
மாமா : ஊருக்கே வாசம் அடிக்கிற மாதிரி சாம்பார்ல போட்டு இருப்பாங்க அவங்க அம்மா அலமேலு…
(எல்லோரும் சிரிக்கின்றனர்…)
மணி : அது சரிங்க மாமா… ஆஸ்பத்திரிக்கு வந்தபோது சாலை விதின்னு சொன்னிங்களே அது என்ன மாமா?
மாமா : அது… உன்ன மாதிரி குழந்தை முதல் என்னை மாதிரி பெரியவங்க வரை அதாவது சாலையை பயன்படுத்துற எல்லாரும் தெரிஞ்சு வச்சுக்க வேண்டிய ஒண்ணு…
மணி : அப்படியா…
முத்து : அதாவது சிவப்பு விளக்கு எரிஞ்சா நிக்கணும்… ஆரஞ்சு விளக்கு எரிஞ்சா தயாராகணும், பச்சை விளக்கு எரிஞ்சா போகணும் அதானே மாமா
மாமா : அதேதான்,… நடந்து போறவங்க நடக்கிறதுக்குன்னு உள்ள பாதையில போகணும்… வாகன ஒட்டிகள் அவங்க அவங்க வாகனம் எந்த பாதையில போகணும்னு போட்டிருக்கோ… அந்த பாதையில போகனும்…
மணி : அதாவது பஸ்சு, லாரி தனியா, காரு வேணு தனியா, ஸ்கூட்டர் மோட்டார் பைக்கு தனியான்னு மெயின்ரோடுலெ கோடு போட்டு பிரிச்சிருக்காங்களே அதைச் சொல்றீங்களா?…
மாமா : ஆமா! ஆமா! அதேதான் அதேபோல பாதையைக் கடக்க… சாலையில கோடு போட்டு இருப்பாங்க. அதுல தான் கடந்து போகணும்… இல்லேன்னா சுரங்க நடை பாதையிருந்தா அதுல இறங்கி பாதைய கடக்கணும்… அதுதான் சரி…
முத்து : நீங்க சொல்றது நகரத்துக்கு சரி… கிராமத்துல?
மாமா : கிராமங்கள்ல இந்த மாதிரிப் பாதையக் கடக்க, வாகன்ங்கள் தனித்தனியாப் போக கோடெல்லாம் போட்டு இருக்க மாட்டாங்க… அந்தமாதிரி இடத்துலெ பொது மக்கள்தான் கவனமா இரண்டு பக்கமும் வண்டிகள் வருதான்னு பாத்துட்டு பாதையைக் கடக்க வேண்டும்.
மணி : சரியா சொன்னிங்க மாமா…
மாமா : அதே மாதிரி இரயில் போற பாதைகள்லெ ஆளில்லாத லெவல் கிராங்சிங்ன்னு சொல்லப்படுற இடங்கள்லெ எல்லாருமே கவனமா நின்னு நிதானமா இரயில் வருதான்னு பாத்துட்டு, இரயில் வாராத்போது மட்டுமே தண்டவாலங்களை கடக்க வேண்டும்.
முத்து : இப்ப நீங்க சொன்ன இந்த விதியை கடபிடிக்கலேன்னா என்ன ஆகும்…?
மாமா : உடம்பு புண்ணாகும்… உயிருக்கு ஆபத்து ஏற்படும்…
மணி : மாமா…. சிக்னல்ல சிவப்பு விளக்கு எரியும்போது கவனிக்காம போயிட்டேன் அது தப்பு தான மாமா… ஆனா சில பேரு செல்போன் பேசிக்கிட்டே வண்டி ஓட்டுறாங்களே அது…
மாமா : விபத்து நடக்குது… இரு சக்கர வாகனத்துல போறவங்க… வலது பக்கம், இடது பக்கம் திரும்பும்போது…
மணி : அதாவது லெப்டுல ரைட்டுல திரும்பும்போதுதானே…
மாமா : ஆமாமா! அப்படி திரும்பும்போது வண்டி ஓட்டுறவங்கதான் கை நீட்டி சமிக்கை காட்டணும்.
மணி : சிக்னல் காட்டணுங்கிறிங்க…
மாமா : ஆமாமா!! இரண்டு சக்கர வாகனத்தில பின்னாலெ உக்காந்திருக்கிறவங்க எதுவும் செய்யாமெ அமைதியா வரணும்…. வண்டி பின்னால உக்காரும் பெண்கள் தங்களோட உடையை கவனிக்கணும். புடவை, துப்பட்டா, தாவணி இதையெல்லாம் இழுத்து சரியா உடுத்திக்கிட்டு, கால் கையெல்லாம் சக்கரத்திலெ படாத மாதிரி உக்காரணும்… ரோட்டுலே போகும்போது சாலை விதிகளை படமா போட்டு நிறைய போர்டு வச்சிருப்பாங்க… அதைப் பாத்து நடந்துக்கணும்…
மணி : அம்புக்குறியெல்லாம் போட்டிருக்குமே அதுவா மாமா…
மாமா : ஆமா மணி!
முத்து : எங்க பள்ளிக்கூடத்துப் பக்கத்திலே கூட, ரெண்டு பிள்ளைங்க புத்தகப் பையை மாட்டிக்கிட்டு நடந்து போற மாதிரி படம் போட்டிருக்குது அது எதுக்கு மாமா!
மாமா : இங்கே பள்ளிக்கூடம் இருக்கு… குழந்தைங்க வருவாங்க… கவனமா வண்டி ஓட்டிக்கிட்டு போங்கன்னு வண்டி ஓட்டுரவங்களுக்கு நினைவு படுத்தத்தான்…
மணி : அதை எழுதிப்போடாம படமா ஏம் போட்டிருக்காங்க மாமா…
மாமா : அதுக்கும் காரணமிருக்கு…
முத்து : அது என்ன காரணம்?
மாமா : அந்த போர்டுலே இங்கே பள்ளிக்கூடம் இருக்கு… கவனமா போங்க அப்படின்னு தமிழ்லெயோ… ஆங்கிலத்திலேயோ எழுதிப்போட்டா… இந்த ரெண்டு மொழியும் தெரியாத ஒருத்தர் வந்தா எப்படிப் படிப்பாரு…
மணி : ஆமா… படிக்க முடியாது!
மாமா : அது மட்டுமில்லே… வண்டி போற வேகத்திலே பெரிய வார்த்தைகளை படிக்கிறது சிரமம். படம் போட்டா சுலபமா புரிஞ்சுக்கலாமில்லியா?…
மணி : இப்ப நாங்களும் புரிஞ்சுக்கிட்டோம் மாமா…
முத்து : மாமா! ஹாரன் மாதிரி படம் போட்டு அது மேலே பெருக்கல் குறி மாதிரி போட்டிருக்காங்களே அது எதுக்கு மாமா?
மாமா : சொல்றேன்! அந்த மாதிரி ஹாரன் படம் போட்டு அதுமேலே பெருக்கல் குறி போட்டிருந்தா என்ன அர்த்தம் யோசிச்சுப்பாரு…
மணி : அது பெருக்கல் குறி இல்லே மாமா… தப்புன்னு அர்த்தம்…
மாமா : பெருக்கல் குறி மாதிரி இருந்தா செய்யக் கூடாதுன்னு பொருள்… ஹாரன் அடிக்கக்கூடாதுன்னு அர்த்தம்… சரி அந்த போர்டை நீ எங்கே பாத்தே?…
மணி : அதை எங்க பள்ளிக்கூடம் பக்கத்திலே பார்த்தேன் மாமா!
முத்து : மணியை ஆஸ்பத்திரிக்கு கூட்டிக்கிட்டு போனபோது ஆஸ்பத்திரி பக்கத்திலே கூட அதேமாதிரி போர்டை நான் பார்த்தேன் மாமா!
மாமா : மருத்துவமனை, பள்ளிக்கூடம் இங்கேயெல்லாம் ஏன் இந்த போர்டை வைக்கிறாங்க தெரியுமா?…
மணி : ஏன் மாமா…
மாமா : மருத்துவனையிலே நோயாளிகள் ஓய்வாயிருக்கும்போதும், பள்ளிக்கூடத்திலே உங்களை மாதிரி குழந்தைகள் படிக்கிற போதும் இந்த ஹாரன் சத்தம் இடைஞ்சலா இருக்குமில்லியா… அதனாலதான் இந்த மாதிரி இடங்களிலே ஹாரன் அடிக்கக்கூடாதுன்னு போர்டு வைக்கிறாங்க…
மணி : இவ்வளவு தகவல் இதுல இருக்குன்னு இப்பதான் தெரிஞ்சுக்கிட்டேன்… இனிமே நான் சாலை விதிகளை கவனிச்சு நடந்துக்குவேன் மாமா…
மாமா : நீங்க மட்டுமில்லே… உங்களை மாதிரி குழந்தைகள் எல்லாருமே சாலை விதிகளை தெரிஞ்சு நடக்கணும்.
முத்து : நாங்க தெரிஞ்சுக்கிட்ட இந்த தகவலை எல்லாருக்கும் எடுத்து சொல்லுவோம் மாமா!
மாமா : சாலை விதியை மதிச்சு நடக்கணும். இல்லாட்டிப்போனா சங்கடத்தில மாட்டி தவிக்கணும்னு எல்லாருக்கும் சொல்லுங்க!
மணி, முத்து : சரிங்க மாமா!
மணி : மதிப்போம்! மதிப்போம்!
முத்து : சாலை விதியை மதிப்போம்!
முத்து : விபத்துக்களைத் தவிர்ப்போம்!
(என்று முழக்கமிட்டபடி போகின்றனர்.)