பிரபஞ்ச ரகசியம் 36
வியாழன் கோள் நமது சூரியக் குடும்பத்தில் மிகப்பெரிய கோள் ஆகும், அதாவது நமது பூமியை இதன் அருகில் வைத்தால் ஒரு கால்பந்தின் அருகில் டென்னிஸ் பந்தை வைத்தது போன்று இருக்கும். இந்த வியாழன் மிகப்பெரிய வாயுக்கோளமாகும். எதிர்காலத்தில் சூரியனின் எரிபொருளான ஹீலியம் தீர்ந்து போய் சூரியன் குளிர்ந்த சிறிய வாயுக்கோளாமாகிவிடும் போது அதன் ஈர்ப்பு விசையும் காணாமல் போய்விடும், அப்போது சிறிய கோள்களும் சூரியனில் இருந்து தப்பித்த நிலவு போன்ற சிறிய துணைக்கோள்களும் வியாழனை மையமாகக் கொண்டு சுற்றும் காலம் வரும்.
ஒருவேளை சூரியனின் ஈர்ப்பு இல்லாத நிலையில் அதீத அழுத்தம் காரணமாக வியாழனில் உள்ள ஹைட்ரஜன் தனக்குள் அணுப்பிளவை ஏற்படுத்தி புதிதாக நமது சூரியனைப் போன்ற ஒரு சிறிய சூரியனாக வியாழன் கோள் மாறும் அறிவியல் அற்புதம் நிகழலாம், ஆனால் இவை எல்லாம் நடக்க இன்னும் 500 முதல் 700 கோடி ஆண்டுகள் ஆகும்.
இவ்வளவு அறிவியல் அற்புதங்களை தன்னுள் அடக்கிக்கொண்டு இருக்கும் வியாழனை விண்வெளி ஆய்வாளர்கள் நீண்ட காலமாக ஆய்வு செய்துவருகின்றனர். வானில் தெரியும் விண்மீன்களை காண கலிலியோ கண்டுபிடித்த மிகச்சிறிய தொலைநோக்கி வியாழனின் நான்கு பெரிய துணைக்கோள்களை கண்டுபிடிக்க உதவியது. அதன்பிறகு தொலைநோக்கிகளின் தொலைநோக்கு தூரம் விரிவடைய வழிவகை செய்தது.
சனிக்கோளின் வளையங்களை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட விண்வெளி ஆய்வு ஓடம் காசினி 2001 -ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வியாழன் கோளுக்கு மிகவும் அருகில் சென்றது, அப்போது காசினியின் புகைப்படக் கருவி வியாழனின் கோடிக்கணக்கான ஆண்டுகளாக சுழன்றுகொண்டு இருக்கும் மிகப்பெரிய சூறாவளியை படம்பிடித்து அனுப்பியது. இந்தச் சுறாவளியின் அளவு நமது பூமியைவிட சற்று பெரியதாகும். இது வியாழனின் மேற்புரம் மஞ்சள் நிற சோப்புக் குமிழ் போல் சுற்றிக்கொண்டே இருக்கிறது.
மேலும் பல புதிய கோணத்தில் வியாழன் கோளை படம் பிடித்து அனுப்பியது. இதன் படங்களை ஆராய்ந்த அமெரிக்க ஆய்வு நிறுவனமான நாசா வியாழன் கோளை மட்டும் தனியாக ஆய்வு செய்ய 2011ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி ஜூனோ (யிuஸீஷீ) என்ற விண்வெளி ஆய்வு ஓடத்தை வியாழன் கோள் நோக்கி அனுப்பியது.
ஜூனோ விண்கலம் ஏவப்பட்டதன் முக்கிய நோக்கம் வியாழன் கோளின் அடத்தில் மிகுந்த வளிமண்டலத்தில் நுழைந்து ஆராய்வது, அதன் ஈர்ப்பு சக்தி மற்றும் காந்த புலங்களை ஆய்வு செய்வது போன்றவையாகும். வியாழன் போன்ற வாயு நிரம்பிய கோளின் உள் அமைப்புகளை ஆய்வு செய்வதென்பது எளிதான பணியல்ல.
அதனால் உயர்ரக ஒளிப்படக் கருவிகளும், தானியங்கி சிறிய ரக செயற்கைகோள்களும் அதில் பொருத்தப்பட்டுள்ளன. இந்த ரோபோடிக் செயற்கைகோள் முதன் முறையாக வியாழனுடைய துருவங்களின் படங்களை படம் பிடித்துள்ளது. ஜூனோ விண்கலம் சூரியமண்டலத்தில் நீண்ட 5 வருட பயணத்திற்குபின் 2016-ஆம் ஆண்டு ஜூலை 4-ஆம் தேதி வியாழனைச் சுற்றிவர தேவையான சுற்றுப்பாதையில் நுழைந்து அதனைச் சுற்றிவரும்.
2018-ஆம் ஆண்டு வரை வியாழனின் வளிமண்டலத்தை ஆய்வு செய்து அதிலிருந்து வரும் கடினமான கதிர்வீச்சை தாங்கிக் கொண்டு சூரிய குடும்பத்தின் மிகப்பெரிய கோளான வியாழனைப் பற்றிய அடிப்படையான கேள்விகளுக்கு விடைசொல்ல தன் அறிவியல் தேடலை துவங்கும். ஜூனோ என்பது கிரேக்க கதைகளில் வரும் பெண் கடவுள் பெயராகும்.
இந்த பெண்கடவுள் ஜூபிடரின் மனைவியாம், இவர் உலகில் உள்ள அனைத்து மக்களின் உள்ளங்களையும் ஊடுருவி அவர்களின் உள்ளத்தில் உள்ளவற்றை உணரும் திறன் கொண்டவராம், ஆகையால் தான் வியாழனை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட ஆய்வு ஓடத்திற்கு ஜூனோ என்று பெயர் சூட்டியுள்ளனர். நமது சூரியக் குடும்பத்தில் செவ்வாய்க் கோளுக்கு அப்பால் சிறிய பெரிய மிகப்பெரிய விண்கற்களால் பின்னப்பட்ட பட்டை ஒன்று உள்ளது, இந்தப் பட்டைக்குள் நமது எவரெஸ்ட் அளவு கொண்ட பெரிய விண்வெளிக் கற்கள் முதல் சிறிய கார் அளவினானாலான விண்கற்கள் வரை சுற்றிக்கொண்டு இருக்கின்றன.
இதை ஆங்கிலத்தில் ஆஸ்டிராய்ட் பெல்ட்(Asteroid Belt) என்றும் தமிழில் விண்கல் பட்டை என்றும் கூறுவார்கள். இந்தப் பட்டைக்கு அப்பால் உள்ள கோள்கள் அனைத்தும் வாயுக்கோளங்களாகும். அவைதான் வியாழன், சனி, யுரேனஸ் மற்றும் நெப்டியூன் போன்றவை, இவற்றை ஜூவியன் கோள்கள் என்று அழைப்பார்கள். அந்தப் பட்டைக்கு உட்புறமாக இருப்பது நாம் வாழும் பூமி, செவ்வாய், புதன் மற்றும் வெள்ளி போன்ற கோள்கள் ஆகும். இவற்றுள் வியாழன் மிகப்பெரியது.
வியாழன் சூரியனிலிருந்து 40 கோடி மைல் தொலைவில் உள்ள கோளாகும். வியாழன் சூரியனை ஒருமுறை சுற்றிவர ஆகும் காலம் 12 ஆண்டுகள். புவியினைப் போன்று 318 மடங்கு நிறையினைக் கொண்டது. வியாழன் நமது நிலவைப் போன்ற பெரிய 8 துணைக்கோள்கள் மற்றும் சிறிய துணைக்கோள்கள் என மொத்தம் 64 துணைக்கோள்களை கொண்டுள்ளது.
இன்னும் 12 துணைக்கோள்கள் கண்டறியப்பட்டுள்ளன. இவை பெயர் சூட்டப்படாதவைகளாக உள்ளன. விரிவான ஆய்வை அடுத்து விரைவில் இதற்கான பெயர்கள் சூட்டப்படும். நமது சூரிய குடும்பத்தைப் போல் வியாழன் குடும்பமும் உள்ளது. வியாழன் மிகப்பெரிய கோள். ஆகவே இரவு நேரங்களில் மிகச் சிறிய தொலை நோக்கிகளின் உதவியால் கூட எளிதாகக் காணமுடியும். மேலும் அதன் மேற்பரப்பினைச் சுற்றி வாயு மேகங்களின் பட்டைகளைக் காண முடியும். நன்கு கவனிக்கும் போது அதன் நான்கு நிலவுகளைக் காணமுடியும்.
வியாழன் கோள் ஹைட்ரஜன், ஹீலியம் போன்ற மிக லேசான வாயுக்களால் நிரம்பியுள்ளது. வியாழன் கோள் ஏறக்குறைய சூரியன் மற்றும் வானில் தெரியும் நட்சத்திரங்களையொத்த வேதியியல் கலவையினைக் (Chemical Composition) கொண்டது. 86.1 சதவீத வியாழனின் வளிமண்டலம் ஹைட்ரஜனாலும் 13.8 சதவீதம் ஹீலியத்தாலும் ஆக மொத்தம் 99.9 சதவீத வளிமண்டலம் இவ்விரு வாயுக்களாலும் நிரப்பப்பட்டுள்ளது. வியாழன் திடமான பொருட்களால் ஆன ஒரு கோள் அல்ல. எனவே இக்கோளிற்கு மேற்பரப்பு என்பதொன்றில்லை.
கோளினுள் ஆழமாக செல்லச் செல்ல வாயுக்கள் மிக மிக அடர்த்தியானதாக மாறிக்கொண்டே சென்று இறுதியில் திரவ நிலையில் காணப்படும். வியாழனின் கணக்கிடப்பட்ட அடர்த்தியானது மொத்த அளவின் சராசரி அடர்த்தியேயாகும். எனவே இதன் மையப்பகுதி கனமான தனிமங்களால் ஆக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகமும் எழாமலில்லை. ஆனால் அதனைப்பற்றிய தகவல்கள் மிகக் குறைவாகவே தெரியவந்துள்ளதால் அதன் இறுதி வடிவம் எதிர்காலத்தில் வெளிப்படும் என எதிர்பார்க்கலாம்.