வண்ணா
-விழியன்
ஓவியம்: ப்ரவீன் துளசி
யானிகா பள்ளியில் இருந்து வீட்டிற்கு நடந்து கொண்டிருந்தாள். அவள் யோசனை எல்லாம் வகுப்பில் ஆசிரியை கூறியதைச் சுற்றியபடியே இருந்தது. “திங்கட்கிழமை வரும்போது எல்லோரும் உங்க மிஸீsமீநீt ஙிஷீஜ் தயார் செய்து வர வேண்டும். ஒரு மேஜைக்கு ஒரு பெட்டி போதும்” என்று சொல்லி இருந்தார்கள். இவர்கள் வகுப்பு மேஜையில் யானிகா, திவ்யா, ராகவி ஆகியோர் அமர்ந்து இருந்தனர். ஒவ்வொருவரும் சில பூச்சிபிடித்து வரவேண்டும் என பிரித்துக்-கொண்டனர்.
யானிகாவிற்கு வந்தது பட்டாம்பூச்சி. பட்டாம்பூச்சிக்கு எங்கு போவது? அம்மா_அப்பா கிட்ட பிடிச்சி தர சொல்லலாமா? இன்னும் இரண்டு நாள்தான் இருக்கு. முதலில் அம்மா கிட்ட கேட்கலாம் என நினைத்து வீட்டிற்கு விரைந்தாள்..
“அம்மா.. அம்மா…”
“அம்மா இங்க சமையலறையில் இருக்கேன். ட்ரஸ் கழற்றி வெச்சிட்டு, முகம் கழுவிட்டு வா பாக்கலாம்”..
எல்லாம் முடித்து சமையலறைக்கு சென்றாள். இரண்டு தோசை அம்மா கொடுத்தாள். ஒன்றை மட்டும் சாப்பிட்டுவிட்டு.. “அம்மா பட்டாம்பூச்சி எங்கம்மா கிடைக்கும்?” என்று பள்ளியில். தான் செய்யவேண்டிய வேலையை அம்மாவிடம் கூறினாள். நிறைய பட்டாம்பூச்சிகள் பாட்டி வீட்டின் தோட்டத்தில் இருக்கும். மறுநாள் சுப்பு மாமாவை அங்கே கூட்டிக்கொண்டு போகச் சொல்வதாக உறுதிகொடுத்தார் அம்மா. தோட்டத்தில் ஏராளமான பூச்சிகள் இருக்கும், கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் எனவும் எச்சரித்தார். பட்டாம்பூச்சி கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை வந்த பிறகே வீதியில் சென்று நண்பர்களுடன் விளையாட ஆரம்பித்தாள்.
மறுநாள் சுப்பு மாமா, யானிகாவை வண்டியில் பாட்டி வீட்டிற்கு அழைத்துச் சென்றார். “யானிகா குட்டி இப்பதான் பாட்டி ஞாபகம் வந்ததா?” எனச் சொல்லி கட்டியணைத்தாள் பாட்டி.
“பாட்டி என்னை தோட்டத்துக்குக் கூட்டிட்டு போங்களேன்..” என்றாள் யானிகா.
“வாடா கண்ணா..” எனக் கையை பிடித்து அழைத்துச் சென்றாள் பாட்டி.
தோட்டத்தில் நிறைய மலர்கள் இருந்தன. வெவ்வேறு வண்ணத்திலும் இருந்தன. செடிகளும் இருந்தன. பாட்டி மெதுவாக அழைத்துச் சென்றாள். “பார்த்து வா யானிகா”.
‘இதுவரை இந்த தோட்டத்திற்கு ஏன் என்னை அழைத்துவரவில்லை’ என்று பாட்டியை கோபித்துக்கொண்டாள்.
மஞ்சள், நீலம், சிகப்பு என அனைத்து வண்ணங்களும் கலந்த ஒரு பட்டாம்பூச்சியை சுப்பு மாமா பிடித்தார். ஒரு உறையில் (சிஷீஸ்மீக்ஷீ) போட்டுக்கொடுத்தார். தோட்டத்தைவிட்டு வரவே மனமில்லை யானிகாவிற்கு. ‘அடுத்த வாரம் காலையிலயே வந்து விடுறேன் பாட்டி’ எனக் கூறினாள். சுப்பு மாமா எங்கோ போகவேண்டும் என்பதால் அவசரமாக வீட்டில் விட்டுவிட்டார்.
இரவு அப்பாவிடம் காட்டிய போது பட்டாம்பூச்சி இறந்து இருந்தது. ‘அழகாக இருக்கு’ என்று அப்பா கூறினார். யானிகாவிற்கு மனசே சரியில்லை. பட்டாம்பூச்சியைப் பார்க்க ஆசையாக இருந்தது, ஆனால் அது உயிர் போன நிலையில் இருப்பதை அவளால் தாங்கமுடியவில்லை. படுக்கைக்குச் சென்றாள் யானிகா…
“யானிகா.. யானிகா…”
யாரது தன்னை இந்த நேரத்தில் அழைப்பது என விழித்துப் பார்த்தாள். சுற்றிலும் யாரும் காணவில்லை. “யாரது..?” பயந்தாள்… “பயப்பட வேண்டாம் யானிகா.. நான்தான் பட்டாம்பூச்சி, இங்க மேஜைமேல பாரு…”
மேஜை மேல், பட்டாம்பூச்சி படபடத்துக் கொண்டிருந்தது.
“ஏய்.. நீ தான் இறந்துவிட்டாயே; எப்படி உயிர் வந்தது…?”
“என்னை ஏன்பா கவருக்குள்ள போட்ட? பாவம் இல்லையா நான்..”
“ஆமாம் எனக்கே கஷ்டமாதான் இருந்துச்சு பா”
நண்பர்கள் போல இருவரும் பேசிக்கொண்டனர். பட்டாம்பூச்சி தான் பிறந்த கதை, வளர்ந்தபோது எப்படி உருமாறியது எல்லாவற்றையும் யானிகாவிடம் சொல்லியது..
“சரி நீ தூங்கு யானிகா.. காலையில லேட்டா எழுந்தா அம்மா திட்டுவாங்க இல்ல…”
“சரி பட்டாம்பூச்சி.. ஆமா உன் பேரு என்ன?”
“வண்ணா”
‘எனக்கு தூக்கமே வரல வண்ணா’.
‘சரி நான் உனக்கு கதை சொல்றேன். அதைக் கேட்டுகிட்டே தூங்கு. ஒரு பெரிய தோட்டத்தில ஒரு குளம் இருந்துச்சாம். அதுல நிறைய பட்டாம்பூச்சிகள் இருந்துச்சாம். அந்த பட்டாம்பூச்சிய தொட்டாலே அந்த நிறம் நம்ம கையில் ஒட்டிக்கிற மாதிரி அழகா இருக்குமாம். அங்க ஒரு நாள்…’ யானிகா தூங்கிவிட்டாள்.
காலையில் எழுந்தபோது யானிகாவிற்கு நடந்தது கனவா இல்லை நினைவா எனத் தெரியவில்லை.. உறையை தேடிப் பார்த்தபோது பட்டாம்பூச்சி இறந்த நிலையிலேதான் இருந்தது.. ‘அந்த குளத்துக்கு என்ன கூட்டிகிட்டு போங்கம்மா. வண்ணா சொன்ன அந்த குளம்மா” அழத் துவங்கினாள் யானிகா.