கற்க கசப்பற!
“கற்க கசடற!’’ என்பதைப் பிஞ்சுகள் பலரும் அறிந்திருப்பீர்கள். “கண்டதைக் கற்றால் பண்டிதன் ஆவான்!’’ என்ற பழமொழிக்கு இது எதிரானது! என்று எண்ணத் தோன்றும்.
இதை மேலோட்டமாகப் பார்த்தால் முரண்பட்டுத் தோன்றும். ஆனால், அது சொல்லப்பட்ட நோக்கறிந்து நோக்கினால் அதன் உண்மைப் பொருளை உணரலாம்.
“ஏற்பது இகழ்ச்சி!’’ அதாவது பிறரிடம் பிச்சை பெறுவது கேவலம் என்று முதலில் சொன்னவர்கள், “அய்யம் இட்டுஉண்!’’ என்று மற்றவருக்கு கொடுத்து உண் என்ற அடுத்துக் கூறினர். இதுவும் மேலோட்டமாகப் பார்த்தால் முரண்பாடாகத் தோன்றும். ஆனால், அதன் உட்பொருள், பிறரிடம் கையேந்தி நிற்பது கேவலம் என்றது, தன்னுழைப்பில் முயற்சியில் வாழவேண்டும் என்ற உணர்வை ஊட்டுவதற்காகச் சொல்லப்பட்டது. அடுத்தவர்க்குக் கொடுத்து உண் என்றது இல்லாது கேட்போருக்கு அல்லது இல்லாது வாடுவோர்க்கு கொடுத்து உண்ண வேண்டும் என்ற மனித-நேயத்தை உணர்த்துவதற்காகச் சொல்லப்பட்டது.
அவ்வாறே, “கற்க கசடற!’’ என்று சொன்னது நல்லவற்றை, தவறின்றி கற்க வேண்டும் என்பதற்காக. கண்டதைக் கற்றால் பண்டிதன் ஆவான் என்பது பலவற்றைப் படித்தால் பல்துறை அறிவு பெறலாம் என்பதற்கு. கண்டதைப் படித்தால் என்றதும், ‘ஒழுக்கக் கேடானவற்றையெல்லாம்’ என்று பொருள் அல்ல என்பதைப் பிஞ்சுகள் புரிந்துகொள்ள வேண்டும்.
கற்க கசடற! என்பது எவ்வளவு கட்டாயமோ அவ்வளவு கட்டாயம், கற்ற நல்லவற்றின்படி வாழ்தல்.
இதையே வள்ளுவர்,
“கற்க கசடற கற்றவை கற்றபின்
நிற்க அதற்குத் தக’’ என்றார்.
கசடறக் கற்றலும், அதன்வழி நிற்றலும் எவ்வளவு முக்கியமோ அதைவிட முக்கியம் கசப்பற கற்றல். கற்றல் என்பது விரும்பிச் செய்யப்பட வேண்டும். கல்வியை கசப்பு மருந்தாகக் கொண்டு கட்டாயத்தில் செய்யப்படுமாயின் அக்கல்வியால் கற்றவர்க்கு எப்பயனும் ஏற்படாது. இதைப் பிஞ்சுகள் ஆழமாக மனதில் கொள்ளவேண்டும்.
அதனால்தான் புரட்சிக்கவிஞர் கல்வியை மலைவாழை என்றார். மலைவாழைப் பழத்தைப் போல் இனிமையானது கல்வி. அதனை வாயாற உண்ண வேண்டும் _ ஏராளமாய் கற்க வேண்டும் என்றார்.
பிஞ்சுகள் தொலைக்காட்சியில் கார்ட்டூன் படம் பார்க்கிறார்கள். அப்போது எவ்வளவு விருப்பம், ஆர்வம், மகிழ்ச்சி காட்டுகிறார்கள். அதே ஆர்வமும், விருப்பமும், மகிழ்ச்சியும் கல்வி கற்கும்போதும் வேண்டும்.
கல்வியும், உணவும் விரும்பி கொள்ளப்பட வேண்டும். அப்போதுதான் கற்கின்றவர்களுக்கும், உண்கின்றவர்களுக்கும் பயன் கிடைக்கும்.
உணவு உடல் வளர்ச்சிக்கு, கல்வி அறிவு வளர்ச்சிக்கு. மனித வளர்ச்சியென்பது உடல் வளர்ச்சியும், அறிவு வளர்ச்சியும் ஒருசேர வளர்வதையே குறிக்கும்.
உடல் மட்டும் வளர்ந்து அறிவு வளராமல் இருந்தாலோ; அறிவு வளர்ந்து உடல் வளராமல் இருந்தாலோ அது கேடேயாகும். எனவே, இரண்டையும் ஒருசேர வளர்த்துக்கொள்ள வேண்டும்.
முதலில் கற்றலை விரும்பி மகிழ்ச்சிக்குரியதாய் கொள்ள வேண்டும். அதைக் கசப்பாக எண்ணக்கூடாது.
அதேபோல் பலதுறைப் பாடங்களைப் படிக்கும்போது எதையும் முன்கூட்டியே நாம் வெறுக்கவோ கசப்பாக நினைக்கவோ கூடாது. அப்படி எண்ணினால் அப்பாடம் கடைசிவரை வெறுப்புக்குரியதாக, தங்களுக்கு வராத பாடமாக ஆகிவிடும். நாம் காட்டுகின்ற ஆர்வத்தைப் பொறுத்தே ஒரு பாடம் எளிமையாகவோ, கடினமாகவோ, கசப்பாகவோ மாறும்.
படிப்பதை விரும்பி செய்தால், அன்றைய பாடங்களை அன்றைக்கே படித்துப் புரிந்துகொண்டால், படிப்பு கசப்பாக மாறாது.
படிப்பு விருப்பத்திற்குரியதாய் மாறவேண்டும் என்றால், தெரிந்து கொள்வதற்காகப் படிக்க வேண்டும். அது என்ன? இது என்ன? அது ஏன்? இது ஏன்? அது எப்படி? இது எப்படி? என்று தெரிந்துகொள்ள ஆர்வத்தை ஏற்படுத்திக் கொண்டோம் என்றால், கல்வி கசக்காது, விருப்பத்திற்குரியதாக மாறும்.
விரும்பிக் கற்றால் சுமை தெரியாது. மன உளைச்சல், இறுக்கம் ஏற்படாது. மாறாக, தேர்வுக்காக, மதிப்பெண்ணுக்காக, பெற்றோருக்காக, ஆசிரியருக்காக என்று நிர்பந்தத்திற்கு, நெருக்கடிக்குப் படித்தால் கல்வி கடினமாகும், கசப்பாகும், வெறுப்பாகும்.
அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலே, கல்வியை விரும்பி கற்க வழிசெய்யும். கற்றதை ஏன்? எப்படி? என்று கேள்விகேட்டு சிந்தித்துப் பார்க்க முயன்றால் கல்வியில் ஆர்வம் தானே வரும். இந்த சிந்திக்கும் ஆர்வம் பின்னாளில் புதியன கண்டுபிடிக்க, சாதிக்க பெரிதும் உதவும்.
எனவே, கல்வியை ஆர்வத்தோடு கற்க முற்பட்டால் கல்வி சுமையாகாமல் சுவையாக அமையும். எனவே கற்போம் கசப்பின்றி!