சும்மா மொக்க போடாதீங்க
கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைனோசர் இனத்தைப்பற்றி நமக்குத் தெரியும். அந்த இனம் இயற்கைப் பேரழிவுகளால் முற்றிலுமாக அழிந்துபோனதும் நாம் அறிந்ததுதான். அதன்பிறகு மனித இனமும் ஏராளமான சுனாமிகளையும், புயல்களையும், பூகம்பங்களையும் எதிர்கொண்டு அழிந்து போயிருக்கிறது.
இதன் காரணமாக, மனித இனம் தோன்றியதிலிருந்து அவர்கள் தங்கள் இடத்தைவிட்டு இடம், நாட்டைவிட்டு நாடு, கண்டம்விட்டு கண்டம் என்று தனது தேவைகளுக்காகவும், பாதுகாப்புக்காகவும் இனக்குழுக்களோடு நகர்ந்து (Migration) கொண்டேயிருந்திருக்கின்றனர். ஆனால், அறிவியல் இயற்கைப் பேரிடரை எதிர்கொள்வதற்கு முடியாமல் போனாலும், அதிலிருந்து தற்காத்துக் கொள்வதற்கு வழிவகைகளை கொடுத்துள்ளதுதான்.
இருந்தாலும் அந்த சூழல் இன்னமும் மாறவில்லைதான். இப்பொழுது இயற்கை பேரிடர்களோடு மனிதர்களால் ஏற்படுத்தப்பட்ட செயற்கைப் பேரழிவுகளும், ஒருவேளை இன்னொரு பூமியில் மனிதன் (வேற்றுகிரக) இருந்தால், அவனை சந்திக்கலாமே என்ற ஆவலும் சேர்ந்து அவனது முயற்சி பூமி விட்டு பூமிக்கு செல்வதற்கும் தயாராக இருக்கிறது!
சுலபமா சொல்லிட்டீங்க! நாம் வாழுகிற பூமியைப்-போல இன்னொரு பூமியைக் கண்டு-பிடிப்பது அவ்வளவு சுலபமா அப்பிடிங்கறீங்களா? அதுவும் சரிதான். இந்தப் பேரண்டம் என்பது நமது கற்பனைக்கு மட்டுமல்ல, விஞ்ஞானிகளின் கற்பனைக்கும் எட்டாததுதான்! அதில் நமது சூரிய குடும்பத்தைப்போல எத்தனையோ சூரிய குடும்பங்கள் இருக்கின்றன. இதைப்போல பலகுடும்பங்களை உள்ளடக்கியதுதான் பால்வெளி மண்டலம். பால்வெளி மண்டலங்களேகூட பலப்பல இருக்கின்றன.
இப்படி கற்பனைக்கே எட்டாத இந்தப் பிரபஞ்சத்தில் நமது பூமியைப் போன்ற இன்னொரு பூமியை எப்படித் தேடுவது? ஆனால், மனிதன் நினைத்தால் முடியும்! அறிவினால் ஆகாததுண்டோ! அப்படித்தானே? சரி, ஏன் பூமியைப்போலத் தேடுகிறோம். அப்படி என்ன சிறப்பு அதற்கு? இதைப்போல மற்றொன்றை தேடும் அளவுக்கு அதற்கு அப்படியென்ன தகுதி இருக்கிறது?
நமது குடும்பத்து கோள்களின் தலைவனான சூரியனிடமிருந்து மூன்றாவது இடத்திலிருக்கும் அதாவது நாம் வசிக்கும் பூமி, சூரியனிலிருந்து சுமார் 9 கோடியே 14 லட்சம் மைல் தொலை.விலுள்ளது. இதில் தண்ணீரும், ஆக்சிஜனும், மிதமான (சரியான) வெப்பமும் உள்ளது. இதுதான் உயிர்கள் வாழ்வதற்கான தகுதியைக் கொடுக்கிறது! இதுதான் பூமிக்கு இருக்கும் சிறப்புத் தகுதி! சரி, இந்தத்தகுதியை எப்படிக் கண்டுபிடிப்பது? இப்போ, சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் உள்ள கோள்களான புதன், வெள்ளி இரண்டுமே சூரியனுக்கு மிக அருகில் உள்ளது.
இதன் காரணமாக வெப்பம் மிகுந்துள்ளது. ஆகவே, அங்கே உயிர்கள் வாழமுடியாது. கருகிவிடும். அதேபோல, பூமிக்கு அடுத்தடுத்து உள்ள செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் ஆகிய கோள்கள் சூரியனிடமிருந்து மிகமிக தொலைவிலுள்ளதால், அந்த கிரகங்களில் அதிக குளிராக இருக்கும். அதாவது வெப்பநிலை உறைபனி நிலையிலிருக்கும்.
இதன் காரணமாக அங்கும் உயிர்கள் வாழ முடியாது. இப்படி அதிக வெப்பமும் இல்லாமல், அதிக குளிரும் இல்லாமல், மிதமான தட்பவெப்ப நிலையுள்ள பூமிக்கு மட்டுமே உயிர்கள் வாழ்வதற்கான தகுதி இருக்கு! சரி, பூமின்னா எப்படியிருக்கும் என்று தெரிஞ்சுகிட்டாச்சு! அதைக் கண்டுபிடிக்கிறது எப்படி? விண்வெளியில் ஒவ்வொரு நாடும் அவரவர் திறனுக்கேற்ப சக்தி வாய்ந்த தொலைநோக்கிகள் மூலம் விண்வெளியைக் கண்காணிக்கின்றன. அவை ஒளிப்படங்களையும், தகவல்களையும் அனுப்பி வைத்துக் கொண்டேயிருக்கின்றன.
இதிலிருந்து நாம இன்னொன்னையும் புரிஞ்சுக்க வேண்டியது என்னன்னா ஒரு சூரிய குடும்பத்திலே பூமி மாதிரி ஒரு கோள்தான் இருக்க முடியும்! ஓ… அப்போ, இதேபோல இன்னொரு சூரிய குடும்பத்திலே இதேபோல மிதமான தட்பவெப்ப நிலை கிடைக்கிற தூரத்தில் இருக்கிற கோளைக் கண்டுபிடிச்சா அதுதான் இன்னொரு பூமியா? அடடே… அசத்திட்டீங்க போங்க! அதேதான்! இப்படி பல்வேறு தொலைநோக்கிகள் விண்வெளியைக் கண்காணித்துக்கொண்டிருந்தாலும்,
கெப்ளர் தொலை நோக்கிதான் ஒன்றுக்கும் மேற்பட்ட பூமிகளை கண்டுபிடித்திருக்கிறது! அவை இதன் பெயரிலேயே ‘கெப்ளர் 22பி’, ‘கெப்ளர் 186எப்’ என்று பெயரிடப்பட்டுள்ளன. அந்த வரிசையில் இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுதான் ‘கெப்ளர் 425பி’. இது நீண்ட ஆய்வுக்குப்பின் 2016இல் ஜூன் மாதத்தில்தான் அறிவிக்கப்பட்டது. இந்த பூமி தனது சூரியனை சுற்றுவதற்கு 385 நாட்களை எடுத்துக் கொள்கிறது. இது நமது பூமியின் அளவைவிட 50% நிறை (எடை) அதிகம்.
இதுக்கு மேலே டெக்னிக்கலா வேண்டாம். நமக்கு விசயம் புரிஞ்சுபோச்சு. சரி, அறிவியல் அறிஞர்கள் தங்களோட மூளையைக் கசக்கிப்பிழிந்து பயன்படுத்தி, ஏறக்குறைய பூமி மாதிரியே சில பூமிகளை கண்டு பிடிச்சுட்டாங்க! எதிர்காலத்தில் மனிதன் இதில் ஏதாவது ஒரு பூமியில் குடியேறும் வாய்¢ப்பு வரலாம். அப்போ முதன்முதலாக அந்த பூமியில் கால் வைக்கிறவங்க முதலில் என்ன செய்வாங்க தெரியுமா?
“புதிய வானம்! புதிய பூமி! எங்கும் புத்தொளி வீசுகிறது! அங்கு ஜாதியில்லை! மதபேதமில்லை! எங்கும் சமத்துவம் தெரிகிறது… ஓஹோ… ஓஹோ… ஓ…” அப்பிடின்னு பாடுவாங்க! வேறென்ன? சிலர் ஆனந்தம் தாங்காமல் குட்டிக்கரணம் போட்டாலும் போடுவாங்க! அதுக்கு நான் பொறுப்பில்லை.