குழந்தைகள் நாடகம்
-மு.கலைவாணன்
கதா பாத்திரங்கள்
அம்மா _ வள்ளி, தங்கம் _ சிறுமி,
தாத்தா, நோய்க்கிருமி
தேவையான பொருள்கள்:
சின்ன குச்சி, நாற்காலி, பாடப் புத்தகம்,
தடி, சாம்பிராணி புகை
காட்சி 1
இடம்: சாலை
பங்கேற்போர் :
அம்மா வள்ளி, தங்கம், தாத்தா
(அம்மா வள்ளி கையில் சிறிய குச்சியுடன் மகள் தங்கத்தை அடித்தபடி…)
அம்மா : சொன்ன பேச்சைக் கேக்குறியா, சோறு போட்டா திங்கிறியா…?
(தங்கம் அங்கும் இங்கும் ஓடியபடி)
தங்கம் : அம்மா… அம்மா! அடிக்காதம்மா வலிக்குதும்மா.
(அழுகிறாள்…)
அம்மா : வலிக்கிறதுக்குத் தாண்டி அடிக்கிறேன்… அழாதே வாயை மூடு…
தங்கம் : அம்மா! நீ அடிக்கிறதுனாலேதான் நான் அழறேன்!
(அழுகிறாள்…)
அம்மா : சொன்ன பேச்சைக் கேட்டுக்கிட்டு சோத்தை போட்டா தின்னுக்கிட்டு சும்மா இருண்ணா கேக்குறியா?
தங்கம் : சொன்ன பேச்சைக் கேக்குறேம்மா… ஆனா… அந்தக் கொழம்பும் பொறியலும் வேணாம்மா!
அம்மா : உன் உடம்புக்கு நல்லது; தின்னுவேன்னு சமைச்சு வச்சா வேணான்னு சொல்றியே… இரு… இரு… உன்னை பூச்சாண்டி கிட்டே புடிச்சுக் குடுக்குறேன்…
தங்கம் : பூச்சாண்டி வந்தாலும் சரி, பூதம் வந்தாலும் சரி… நான் அந்தக் கொழம்பு, பொறியலை சாப்பிட மாட்டேன்… எனக்கு அது வேணாம்…
அம்மா : அதோ ஒரு தாத்தா வர்றாரு அவருக்கிட்டே புடிச்சுக் குடுக்குறேன்…
(தாத்தா போகிறார்…)
அம்மா : தாத்தா இந்தப் புள்ளையை புடிச்சுக்கிட்டுப் போங்க…
தாத்தா : எதுக்காகம்மா… புள்ளையை புடிச்சுக்கிட்டுப் போகச் சொல்றிங்க! நான் வரும் போதே பாத்துக்கிட்டுதான் வந்தேன்… குழந்தையை எதுக்காக அடிக்கிறீங்க…
அம்மா : ம்… ஒண்ணே ஒண்ணு! கண்ணே கண்ணுண்ணு செல்லங் குடுத்து வளத்தா… ரொம்பதான் கொஞ்சுது குழந்தை…
தாத்தா : குழந்தைன்னா அப்படிதாம்மா இருக்கும்… நீங்க, நானு எல்லாருமே குழந்தையா இருக்கும்போது இப்படித்தான் இருந்திருப்போம்… பாப்பா இங்கே வாப்பா…
தங்கம் : என்ன தாத்தா?
தாத்தா : உங்க பேரு என்னம்மா?
தங்கம் : என் பேரு தங்கம்!
தாத்தா : தங்கம், உன்னை எதுக்காக அம்மா திட்டுறாங்க?
தங்கம் : திட்டலே தாத்தா அடிக்கிறாங்க…
அம்மா : இதெல்லாம் நல்லா பேசு…
தங்கம் : அம்மா ஆக்கி வச்சதை நான் சாப்பிட மாட்டேன்னு சொன்னேன். அதுக்காக என்னை அடிச்சு பூச்சாண்டிக்கிட்டே புடிச்சுக் குடுப்பேன்னு சொல்றாங்க… தாத்தா…
தாத்தா : ஏம்மா… அப்படி செய்யிறிங்க…
அம்மா : இது செய்யிற தொல்லைக்கு பூச்சாண்டிக்கிட்டே புடிச்சுக் குடுக்காம புள்ளையை கொஞ்சவா முடியும்…?
தாத்தா : கொஞ்ச வேணாம்… கொஞ்சம் பொறுமையா இருங்கம்மா…! தங்கம், அம்மா என்ன சமைச்சு வச்சிருக்காங்க…?
தங்கம் : சோறு, முருங்கைக்கா சாம்பாரு, வெண்டைக்கா பொறியல்…
தாத்தா : அடடா… சொல்லும்போதே நாக்கில எச்சி ஊறுதே… முருங்கைக்காய் நார் சத்துள்ள உணவு… அதுல கால்சியம் இருக்கு… அது எலும்பு வளர்ச்சிக்கு நல்லது… பொட்டாசியம் இருக்கு… அது இதயத்துக்கு நல்லது… புரதச்சத்து இருக்கு அது தசைகளையும், நரம்பையும் பலப்படுத்தும்.
வெண்டைக்காய் பசியத் தூண்டிவிடும்… தசை வளர்ச்சிக்கும் ரத்த விருத்திக்கும் உதவும்… மூளை வளர்ச்சிக்கு உதவுறதுனால குழந்தைகளுக்கு ஏத்த உணவு…
தங்கம் : அய்யய்யே… முருங்கைக்காய் மென்னு மென்னு துப்பனும்… வெண்டைக்கா கொழ கொழன்னு இருக்கும். எனக்குப் புடிக்காது….
தாத்தா : உனக்கு வேறே என்னதான் புடிக்கும்…
அம்மா : அவளுக்கு நல்லது எதுவும் புடிக்காது… அவளுக்கு சோறு ஊட்டுறதுக்குள்ள எனக்குத்தான் பைத்தியம் புடிக்கும்…
தங்கம் : அம்மா!… தாத்தா! உனக்கு புடிச்சதை கேக்கலே எனக்கு புடிச்சதை கேக்குறாரு…
தாத்தா : (சிரித்தபடி) நீ சொல்லுப்பா… உனக்கு என்ன புடிக்கும்…
தங்கம் : சாக்லெட்டு, மிட்டாயி, அய்ஸ்கிரீம்மு இதெல்லாந்தான் புடிக்கும்…
தாத்தா : இதை மட்டுமே சாப்பிட்டா… சளி புடிக்கும்… வயித்துலெ பூச்சி புடிக்கும்… அப்பறம் எப்படி சாப்பாடு புடிக்கும்…
அம்மா : அதைத்தான் நானும் சொல்றேன்… கேக்க மாட்டேங்குறா… சாப்பாடு வேணாம்… சாக்லெட்டு, மிட்டாயி, அய்ஸ்கிரீம்தான் வேணும்ணு அடம் புடிக்கிறா…
தாத்தா : தங்கம்! நான் சொல்றதை கொஞ்சம் கவனமா கேட்டு கடைப்புடிக்கிறியா? காரு, ஸ்கூட்டர் இதெல்லாம் ரோட்டுல ஓடுதே எப்படி ஓடுது.
தங்கம் : டயர்ல ஒடுது…
தாத்தா : டயர் மட்டும் போதுமா?
தங்கம் : அப்பறம் எப்படி ஓடுது? (யோசித்து விட்டு) ஆங்… டிரைவர் ஓட்டுறதுனாலே ஓடுது!
தாத்தா : அது இல்லே… எதனாலே ஓடுது…
தங்கம் : ம்… பெட்ரோல் போடுறதுனாலே ஓடுது…
தாத்தா : அதுக்கு பேருதான் எரிபொருள்ன்னு சொல்றது. அந்த எரிபொருள் இல்லேன்னா காரு, ஸ்கூட்டர், மோட்டார் போன்ற வண்டிங்க ஓடாது. அதுபோலத்தான் நம்ம உடம்புங்கிற வண்டி இயங்க உணவுங்கிற எரிபொருள் தேவை. பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருள் கலப்படமானதா இருந்தா என்னாகும்?
தங்கம் : வண்டி ரிப்பேராகி நின்னு போயிடும்… எங்க மாமாவோட மோட்டார் பைக்கு கூட ஒரு தடவை அப்படி நின்னு போச்சி தாத்தா!
அம்மா : இதெல்லாம் நல்லா ஞாபகம் வச்சிருப்பா…
தாத்தா : எரிபொருள் நல்லதா இல்லேன்னா அந்த வண்டி ரிப்பேர் ஆயிடும்…
மனித உடம்புக்கு உணவுங்கிற எரிபொருள் சரியா இல்லேன்னா… உடம்பு கெட்டுப் போறது மட்டுமில்லே நோய் கிருமிகள் வந்து உடம்புல குடியேறி ஆளையே பலவீனமாக்கிடும்… அதனாலே சத்தான காய்கறிகள், கீரை வகைகள், இறைச்சி, மீன், முட்டை, பால் இதையெல்லாம் உன்ன மாதிரி வளர்ர குழந்தைங்க கட்டாயம் சாப்பிடணும்…..
இல்லேன்னா நோய் கிருமி வந்து புடிச்சுக்கும்… அப்பறம் உடம்பு சோர்ந்து போயிடும்… ஆட முடியாது… பாட முடியாது… விளையாட முடியாது… படிக்க முடியாது…
தங்கம் : சரிங்க தாத்தா நீங்க சொன்ன மாதிரியே சத்தான உணவ சாப்பிடுறேன்…
தாத்தா : இப்பதான் பேருக்கேத்த தங்கம்… கூட்டிக்கிட்டு போயி சாப்பாடு குடுங்கம்மா…
அம்மா : நல்ல நேரத்திலே வந்திங்க… ரொம்ப நன்றிங்கய்யா…
தாத்தா : குழந்தைகளுக்கு புரியிற மாதிரி சொன்னா புரிஞ்சுக்குவாங்க… நான் வரேம்மா… தங்கம் டாட்டா!…
தங்கம் : தாத்தா புறப்பட்டீங்களா?
தாத்தா : ஆமம்மா… தாத்தா இப்ப போட்டா…
தங்கம் : போயிட்டு வாங்க டாட்டா…
காட்சி 2
இடம்: படுக்கை அறை
பங்கேற்போர் :
தங்கம், நோய்க்கிருமி, அம்மா வள்ளி
(தங்கம் நாற்காலியில் உடகார்ந்து புத்தகம் படித்துக்கொண்டே தூங்கித் தூங்கி விழுகிறாள்…)
தாத்தா குரல் : சத்தான உணவை சாப்பிடணும்… இல்லேண்ணா நோய்க்கிருமி வந்து புடிச்சுக்கும்…
(திரும்பத் திரும்ப எதிரொலிக்கிறது… புகைக்கு நடுவில் பயங்கர அலறல் சத்தத்துடன் நோய்கிருமி வருகிறது)
நோய்கிருமி : ஹ… ஹ… ஹா… நான் தான் நோய்கிருமி. உன்ன விடமாட்டேன்…
(தங்கத்தைச் சுற்றிச் சுற்றி வருகிறது… தங்கம் விழித்துக் கொண்டு)
தங்கம் : ஏய்! நோய்க்கிருமி… நீ வருவேன்னு தெரிஞ்சுதான் நான் இப்ப சத்தான உணவை சாப்பிடத் தொடங்கிட்டேன்…
நோய்கிருமி : ஹ… ஹ… ஹ… ஊட்ட உணவு சாப்பிடாத உன்னை நான் உடனே புடிச்சுக்குவேன்… நோய் நொடியிலே சிக்கவச்சு நொந்து போக வச்சுடுவேன்… ஓடி ஆடி விளையாடாதபடி ஓடுங்கிப்போக வச்சுடுவேன் எங்கிட்டே இருந்து தப்பவே முடியாது ஹ… ஹ… ஹா…
(தங்கத்தை நெருங்குகிறது…)
தங்கம் : ஏய் நோய்க்கிருமி நான்தான் ஊட்ட உணவ ஒழுங்கா சாப்பிடுறேன்னு சொன்னேனே அப்பறம் ஏன் கிட்டவர்றே…
நோய்கிருமி : கடையிலே விக்கிற கண்ட கண்ட டானிக்கு மருந்தெல்லாம் வாங்கி சாப்பிடுறியே…
தங்கம் : அய்ய… அது இல்லே… சத்தான காய்கறி, கீரை, மீன், முட்டைன்னு உடம்புக்கு பலம் சேக்கிற உணவை சாப்பிடுறேன். உன்னாலே என்னை நெருங்கவே முடியாது…
நோய்கிருமி : நெருங்குனா?
தங்கம் : நொருங்கிடுவே நோய்க்கிருமியான உன்னை எதிர்க்கிற சக்தி என் உடம்புலே இருக்கு…
நோய்கிருமி : அப்படியா அதையும் பாத்துடுவோம்! ஹ… ஹ… ஹா…
(என தங்கத்தை நெருங்குகிறது நோய்கிருமி… தங்கம் ஒரு தடியை எடுத்து நோய்கிருமியை அடித்து விரட்டுகிறாள்.)
தங்கம் : இனிமே எங்கிட்ட வருவியா… வருவியா…
நோய்கிருமி : அய்யய்யோ! ஆளை விடு… இனிமே நான் வரவே மாட்டேன்…
(நோய்கிருமி அலறி ஓடுகிறது… தங்கம் கனவு கலைந்து எழுந்து)
தங்கம் : அம்மா! அம்மா…
அம்மா : என்ன தங்கம்! என்ன ஆச்சு! நல்லா தூங்கிட்டுத்தானே இருந்தே…
தங்கம் : ஆமாம்மா! தூக்கத்திலே கனவு கண்டேனா… அதுலே பெரிய நோய்க்கிருமி வந்துது…
அம்மா : அப்பறம்…
தங்கம் : அது என்ன புடிக்க வந்துதா… நான் சத்தான உணவெல்லாம் சாப்பிடுறேன்… என்னை உன்னாலே நெருங்கவே முடியாதுன்னு… சொன்னேன்… அப்பவும் அது விடாம எங்கிட்ட வந்துதா… நான் அதை அடிச்சு விரட்டிட்டேன்… அது ஓடியே போச்சு…
அம்மா : தாத்தா! சொன்னதைக் கேட்டு நீ சத்தான காய்கறி பழம் கீரை, பாலு, முட்டைன்னு சாப்பிட்டதாலதான் நோய்க்கிருமியை எதிர்க்கிற ஆற்றல் வந்தது புரியுதா!
தங்கம் : ஆமாம்மா!
அம்மா : வா! வா! நாம போயி அந்த தாத்தாவப் பாத்து நன்றி சொல்லிட்டு வருவோம்…
காட்சி 3
இடம்: மரத்தடி
பங்கேற்போர் :
அம்மா வள்ளி, தங்கம், தாத்தா
தாத்தா : அடடே வாம்மா தங்கம் எங்கே இவ்வளவு தூரம்…
அம்மா : உங்களப் பாக்கதான் வந்தோம்…
தாத்தா : என்ன? தங்கம் மறுபடி சாப்பிட மாட்டேங்குறாளா?
அம்மா : இப்பல்லாம் தங்கம் நல்லா சாப்பிடுறா… அவளும் அடம் புடிக்கிறதில்லே… நானும் அடிக்கிறதில்லே…
தாத்தா : குழந்தைகளை அடிக்கவோ… மிரட்டவோ கூடாது… அவங்களுக்கு புரியிற மாதிரி சொல்ல பெரியவங்க நாமதான் கத்துக்கணும்…
அம்மா : அது உண்மைதாங்க… நான்தான் தெரியாம செஞ்சுட்டேன்.
தங்கம் : தாத்தா! நேத்து ராத்திரி என்னை புடிக்க நோய்கிருமி வந்தது…
தாத்தா : நோய்கிருமியா? எங்க வந்தது? எப்படி வந்தது?
தங்கம் : ஹ… ஹ… ஹா…ன்னு சத்தம் போட்டுக்கிட்டு எங்கனவுல வந்தது.
தாத்தா : சரி… நீ என்ன செய்தே!
தங்கம் : நான் அதுக்கிட்டே மாட்டவே இல்லை….
தாத்தா : ஏன்?
தங்கம் : நான்தான் நீங்க சொன்ன மாதிரி சத்தான காய்கறிகளை சாப்பிடுறேனே… அப்பறம் எப்படி மாட்டுவேன்… நோய்க்கிருமிய ஓட ஓட விரட்டி அடிச்சுட்டேன்…
தாத்தா : பாத்தியா! குழந்தைகளாகிய நீங்க… ஊட்டச் சத்துள்ள உணவுகளை சாப்பிட்டா நோயை எதிர்க்கிற ஆற்றல் கட்டாயம் வரும்… உடல் ஆரோக்கியமா இருக்கும்… படிப்பில நல்லபடியா கவனம் செலுத்த முடியும்…
தங்கம் : ஆமா தாத்தா! எனக்குத் தெரிஞ்ச இந்த உண்மை என்ன மாதிரி உள்ள எல்லா குழந்தைகளுக்கும் தெரியணும் தாத்தா.
தாத்தா : இன்னொரு உண்மையும் தெரிஞ்சுக்கத் தங்கம்…
தங்கம் : அது என்ன தாத்தா, கடைகள்ல பிளாஸ்டிக் பைகள்ல அடைச்சு விக்கிற திண்பண்டங்களை குழந்தைங்க கட்டாயம் சாப்பிடக்கூடாது… .பெத்தவங்களும் குழந்தைகளுக்கு அதை வாங்கி கொடுக்கக்கூடாது.
அம்மா : ஏங்க…?
தாத்தா : அது தரமானதும் இல்லை… உடம்புக்கு தகுதியானதும் இல்லை… அதனால குழந்தைகளுக்கு கெடுதல் தான் உண்டாகும்.
தங்கம் : இதை என் நண்பர்களுக்கும் எடுத்து சொல்லணும் தாத்தா.
தாத்தா : சொல்லுவோம்! வா போவோம்! உண்ணுவோம் உண்ணுவோம்
தங்கம் : ஊட்ட உணவு உண்ணுவோம்…
தாத்தா : எண்ணுவோம்… எண்ணுவோம்
தங்கம் : உடல் நலம் காக்க எண்ணுவோம்…