மின்சாரம் எதனால் ஆனது? 7
சூரிய மின் உற்பத்தி எவ்வாறு செய்யப்படுகிறது என சென்ற கட்டுரையில் சற்று விரிவாகப் பார்த்தோம். இப்போது, நடைமுறையில் எவ்வாறு பெரிய அளவில் சூரிய ஒளி மின் நிலையங்களும், வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கான சூரிய மின் அமைப்புகளும் செயல்படுகின்றன எனப் பார்ப்போம்.
அணு மின் நிலையங்கள், அனல் மின்நிலையங்கள், நீர்மின் நிலையங்கள், காற்றாலை மின் நிலையங்கள் போன்றே சூரியமின் நிலையங்களும் உலகெங்கிலும் அமைக்கப்பட்டு மின்உற்பத்தி நடைபெற்று வருகின்றன. உலகிலேயே பெரிய சூரிய மின் உற்பத்தி நிலையமானது சீனாவிலுள்ள லாங்ஜியான்க்சியா அணையில் (Longyangxia Dam) இருக்கிறது.
2015ஆம் ஆண்டிலிருந்து, இதன்மூலம் 850 மெகாவாட் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. இந்தியாவில் குஜராத் மாநிலத்திலுள்ள சரண்கா சூரியமின் பூங்காவில், 500 மெகா வாட் மின் உற்பத்தி செய்யும் வகையில் சூரியமின் நிலையம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதுவரை 345 மெகாவாட் மின்உற்பத்தி செய்யும் அளவிற்கு பணி முடிவடைந்து மின்உற்பத்தியும் துவங்கியுள்ளது.
இந்த சூரிய மின் நிலையங்களில், பெரிய பெரிய சோலார் பேனல்கள், சூரிய ஒளியை முழுவதும் கிரகித்துக் கொள்ளும்வண்ணம், 450 சாய்வான கோணத்தில் பொருத்தப்பட்டிருக்கும். இந்த சோலார் பேனல்களின் மேற்பரப்பில், நாம் சென்ற கட்டுரையில் பார்த்தபடி வரிசையாக பல சூரிய மின்கலன்கள் பொருத்தப்பட்டிருக்கும். இந்த சூரியமின்கலன்கள் அனைத்தும் ஒன்றாக இணைக்கப்பட்டு, அதிலிருந்து கிடைக்கும் எலக்ட்ரான்களின் ஆற்றலானது, ஒரு பொதுவான கடத்துப் பாதை வழியே செல்லுமாறு அவை இணைக்கப்பட்டிருக்கும்.
இவ்வாறு கடத்தப்பட்டு வரும் எலக்ட்ரான்கள் மூலம் கிடைக்கும் மின்னாற்றலானது Direct Current ஆகும். ஆனால், மற்ற முறைகளான அனல், அணு, நீர், காற்றாலை மின்னாற்றல் அனைத்தும் Alternate Current ஆகும். ஆம்… ஓடிக்கொண்டிருக்கும் எலக்ட்ரான்கள் தன்னகத்தே கொண்டிருக்கும் ஆற்றலானது இரு வகைப்படும். ஏன் இந்த இரு வகை என்றும், இந்த இரண்டு வகைகளுக்கும் உள்ள பண்பு வேறுபாடுகளைப் பற்றியும் அடுத்த கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
சூரியமின் உற்பத்தி நிலையங்களின் மூலம் பெறப்படும் மின்னாற்றலை Alternate Current-ஆக மாற்றினால்தான் அதனை மின் விநியோக அமைப்பிற்கு அனுப்ப முடியும். Direct Current-அய் Alternate Current-ஆக மாற்றுவதற்கு Inverter (தலைகீழ் மாற்றி) என்ற மின்சாதனம் பயன்படுகிறது. இதனை பற்றியும் அடுத்த கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளிலும்கூட இதே முறையில்தான், வரிசையாக சோலார் பேனல்களை பொருத்தி, அதிலிருந்து கிடைக்கும் மின்னாற்றலை, Inverter மூலம் Alternate Current-ஆக மாற்றி, அதன் பின்னர் அதனை தங்களது உபயோகத்திற்குப் பயன்படுத்துகின்றனர். நம் வீடுகளில் பொருத்தும் சோலார் பேனல்கள் மூலம் உற்பத்தியாகும் மின்னாற்றலை நாம் சேமித்து உபயோகிப்பது என்பது சற்றுக் கடினமான செயல் மட்டுமில்லாமல்,
பெருமளவில் ஆற்றல் வீண்போகக்கூடிய ஒரு அபாயம் இருப்பதனால், பொதுவாக உற்பத்தியாகும் மின்னாற்றலை, அப்படியே அரசு விநியோக பாதைக்கு செல்லும்படி அவை வடிவமைக்கப்-பட்டிருக்கும். நாம் எவ்வளவு மின்னாற்றலை உற்பத்தி செய்து அரசு விநியோக பாதைக்கு அனுப்புகிறோமோ அந்த அளவிற்கு நமது வீட்டிலுள்ள மின்சாரம் அளக்கும் மீட்டரானது பின்புறமாக சுற்றும். ஆகவே, நாம் அரசுக்கு செலுத்த வேண்டிய மின் கட்டணமானது நமக்கு மிச்சமாகும்.
சூரிய ஒளி அளவில்லாமல் நமக்குக் கிடைப்பதால், அதைப் பயன்படுத்தி மின்னாற்றலை உற்பத்தி செய்வது என்பது மிகச் சுலபமாக தெரிந்தாலும், இதிலும் சில சிக்கல் இருக்கத்தான் செய்கின்றன. சூரியஒளியானது எலக்ட்ரானை விரட்டுவதன்மூலம் கிடைக்கும் விசையின் அளவானது, டர்பைன்களை காந்தப்புலத்தில் சுழற்றுவதன் மூலம் விரட்டப்படும் எலக்ட்ரானின் விசையின் அளவோடு ஒப்பிட்டால் மிகக் குறைவான அளவாகும். மேலும், சூரியமின் நிலையங்களில் ஒரு நாளைக்கு 12 மணிநேரம் மட்டுமே மின்உற்பத்தி நடைபெறும். ஆனால், மற்ற மின்உற்பத்தி முறைகளில் 24 மணிநேரமும் உற்பத்தியானது நடைபெற்றுக் கொண்டேயிருக்கும்.
இதுபோன்று சில கட்டுப்பாடுகள் இருந்தாலும், மற்ற மின் உற்பத்தி முறைகளைவிட சூரிய மின் உற்பத்தி முறையானது சுற்றுச்சூழலுக்கு மிகவும் உகந்ததாகும். அனல் மற்றும் அணுமின் நிலையங்களில் சுற்றுச் சூழலுக்கு தீங்கான பல நச்சு வாயுக்கள் வெளியேற்றப்படுவதோடு, விபத்து நடக்கும் அபாயமும் அதிக அளவில் இருக்கும். ஆனால், சூரியஒளி மின் உற்பத்தி முறையானது சுத்தமான முறை மட்டுமல்லாது மிகவும் பாதுகாப்பானதும்கூட. ஆனால், இம்முறையில் இருக்கும் ஒரே தீங்கான விசயமானது. சோலார் பேனல்களை உருவாக்கப் பயன்படுத்தப்படும் காட்மியம் சல்ப¬டு, மெர்குரி போன்ற சில தனிமங்களாகும்.
இவை சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது மட்டுமல்லாது மனிதர்களுக்கும் அபாயமான தனிமங்களாகும். ஆகவே, பழுதடைந்த சோலார் பேனல்களை பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்த வேண்டியது அத்தியாவசியமான செயலாகும்.