பெருந்திருடன் புதிய அர்ஜென்’டைனோ’சர்
அர்ஜென்டைனா, ஜெர்மனி போன்ற சில நாடுகளில் டைனோசர் எலும்புகளைக் கண்டெடுத்துக் கொண்டிருக்கிறார்கள் ஆய்வாளர்கள். எட்டு கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ‘முருஸ்ராப்டர் பாரோ சேன்சிஸ்’ வகையைச் சேர்ந்த டைனோசரின் எலும்புகள் கண்டுபிடிக்கப் பட்டிருப்பதாக கடந்த ஜூலை 20ஆம் நாள் வெளிவந்த ப்ளாஸ் என்ற அறிவியல் ஏட்டின் கட்டுரை குறிப்பிடுகிறது. இது பெருந்திருடன் என்று பொருள்படும் மெகாராப்டர் என்ற வகையின் உட்பிரிவாகும்.
அர்ஜென்டைனாவின் படகோனியா பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன் இவ்வெலும்புகள் கண்டெடுக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. மூளைப் பெட்டக எலும்புகள் கிடைத்திருப்பது அரிதானது என்கிறார்கள் இந்த ஆய்வாளர்கள். 26 அடி நீளமிருந்திருக்கக் கூடிய வளர்ந்து கொண்டிருந்த டைனோசரின் எலும்புகளாம் இவை.
ஒரு பல் மட்டும் ஓர் அடிக்கு மேல பெருசாம். புலால் உண்ணும் வகையைச் சேர்ந்ததாச்சே, இருக்கத் தான் செய்யும். இவ்வின டைனோசர் எலும்புகள் சில ஆஸ்திரேலியாவிலும், ஜப்பானிலும் கூட கிடைத்துள்ளனவாம். இன்னும் பல ஆய்வுகள் அர்ஜென்டைனாவில் நடந்துக்கிட்டேயிருக்கு. அப்போ, அடுத்தடுத்தும் ஜுராசிக் பார்க் படம் தொடரும்னு சொல்லுங்க!
– மணியம்மை