சும்மா மொக்க போடாதீங்க
“ஏங்க… உங்களத்தான், அட! எங்க பார்க்கறீங்க!’’
“யாரு… என்னையா கூப்பிட்டீங்க?’’
“ஆமாங்க!’’
“எதுக்கு கூப்பிட்டீங்க?’’
“சும்மா… வணக்கம் சொல்லத்தாங்க.’’
“வணக்கமா? அப்பிடின்னா?’’
“நமஸ்காரமுன்னு செத்துப்போன மொழியான சமஸ்கிருதத்திலே சொல்லிட்டிருந்தோமே, அதுக்குப் பதிலாத்தான் தமிழிலே வணக்கமுன்னு சொன்னேன்.’’
என்ன ஆச்சரியமா இருக்கா? இந்தக் காலத்தி-லேகூட இப்படியெல்லாம் பேசுவாங்-களா? அப்பிடின்னு நினைக்காதீங்க! இது சுமார் நூறாண்டுகளுக்கு முன்னாலே, தமிழ் மொழியிலே இருந்த பண்பாட்டு படை-யெடுப்பை முறியடிக்க, அறிமுகமே இல்லாதவர்களிடம் கூட பெரியார் தொண்டர்கள் தானாகச் சென்று, ‘வணக்கம்! வணக்கம்!’ என்று சொல்லிச் சொல்லி,
நாளடைவில் அவர்களையும் சொல்ல வைத்து, இன்று நமஸ்காரம் என்ற சொல்லையே தமிழ் மொழியில் முற்றாகவே இல்லாமல் செய்து விட்டனர். அந்தக் காலத்தில் இந்த மாதிரி பேசறவங்களைப் பார்த்து கண்டிப்பா கேலி, கிண்டல் செஞ்சிருப்பாங்க. ஆனால், அவங்க கவலையேபடாம தந்தை பெரியார் சொன்னதை செஞ்சே தீருவோம்னு, திரும்பத் திரும்ப இதே வேலையாத் திரிஞ்சாங்க. நம்ம தமிழ் மொழி செம்மொழியா உயர்ந்து நிற்க இதுவும்கூட ஒரு காரணம்தான்.
அதனால நானும் வணக்கத்தோட தொடங்குறேன்…
சரி, இப்போ தமிழ்நாட்டுலே நாம வணக்கமுன்னு சொல்றோம். உத்திரப்பிரதேசத்திலே என்ன சொல்வாங்க? அவங்க ‘ராம்’, ‘ராம்’னு சொல்வாங்க. இதுவே ஆந்திராவுல இருக்கிற புட்டபர்த்தியிலே வணக்கத்துக்கு பதிலா, ‘சாய்ராம்’, ‘சாய்ராம்’ன்னு சொல்வாங்க.
ஆமா, உத்திரப்பிரதேசத்திலே ஹிந்திதான் பேசறாங்க. அப்போ, ‘ராம் ராம்’னா, ஹிந்தியிலயும், ‘சாய்ராம்’னா தெலுங்குலையும் வணக்கம்னு பொருளா? என்ன? யப்பா… பெரியார் பிஞ்சுங்க ரொம்ப ஸ்மார்ட்ப்பா… அப்படியெல்லாம் இல்லை. ராம் அப்பிடின்னா, இந்தியத் துணைக் கண்டத்திலிருக்கிற எல்லா மாநில இலக்கியங்களிலும் ஊடுருவிய பண்பாட்டுப் படையெடுப்புக்கு துணைநின்ன தசரத ‘ராம’னோட பேரு! அப்புறம் புட்டபர்த்தியில் மட்டும்தான் ‘சாய்ராம்’ இதுவும் ஹிந்து மதச்சாமியார் சாய்பாபாவைக் குறிப்பிட்டுதான் அப்படிச் சொல்றாங்க. இரண்டுமே அந்தந்த மொழி பேசுரவங்களுக்குப் பொதுவானதில்லை. ஒரு மதம் சார்ந்தது.
அதெல்லாம் இருக்கட்டும்… இந்தியத் துணைக்கண்டத்திலதான் வணக்கமே கோளாறு புடிச்சுக் கிடக்குது. வெளிநாடுகளிலே எப்படி? இங்கிலாந்தில Good Morning, How do you do அப்பிடிம்பாங்க. ‘காலை வணக்கம்! உங்க உடல் எப்படியிருக்கு?’ இதான் அதோட பொருள்! இதான் எங்களுக்குத் தெரியுமே அப்பிடிங்கறீங்களா?
சரி… எகிப்து நாட்டிலே ‘நீங்கள் எவ்வளவு வியர்வை விடுகிறீர்கள்?’ அப்பிடின்னு சொல்வாங்களாம்! இதென்னடா கூத்தாயிருக்கு அப்பிடிங்கறீங்களா? உழைப்பும் உற்பத்தியும்தான் உலகத்துக்கே பொதுவானது. ஆனால், ராம்ராம், சாய்ராம் இந்த இரண்டுக்கும் உங்க உழைப்பும் எப்படின்னு கேட்கிறது எவ்வளவோ தேவலை தெரியுமா?
உழைத்து வாழவேண்டும்! பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே! அப்பிடின்னு சொல்றதத்தான் ‘நீங்க எவ்வளவு வியர்வை விடுகிறீர்கள்’ அப்பிடின்னு கேட்கறாங்க போலிருக்கு!
இந்த இரண்டையும் விடுங்க. சீனாவிலே எப்படி? அட! உலகத்திலேயே மக்கள் தொகையில் முதலாவதாக இருப்பதாக சொன்னாலும், சீனாவுக்குப் பெருமை அதுவொரு கம்யூனிச நாடுங்கறதுலதான். ம்… அவங்க என்ன சொல்றாங்கன்னு கண்டிப்பா பார்க்க வேண்டியதுதான். “உங்க வயிறு எப்படி இருக்கு!’’
“நல்லாதான் இருக்கு! ஏன் இப்படி திடீர்னு சம்பந்தமில்லாம கேட்கறீங்க? “அட! இப்படித்தாங்க சீனாவுல வணக்கம்னு சொல்றதுக்குப் பதிலா சொல்றாங்க!’’
“என்ன?!’’
“சரி சரி, மொக்கை போடறதுக்கே ‘வணக்கம்!’ போட்டுர்றேன்! “உங்க உடம்பை எப்படி தூக்கிட்டு நடக்கறீங்க?’’
“என்ன…. நான் குண்டா இருக்கேன்னு என்னை நக்கல் பண்றீங்களா?’’ உங்களை… உங்களை…’’
அடிக்காதீங்க! அடிக்காதீங்க! அது பிரெஞ்சுல நம்ம நல்லாயிருக்கீங்களான்னு விசாரிக்கிற மாதிரி இப்படி விசாரிப்-பாங்களாம்..