ஒலிம்பிக் நேற்று…இன்று…நாளை
உலகிற்குத் தத்துவங்கள் வழங்கிய கிரீஸ் நாடுதான் ஒலிம்பிக்கின் பிறப்பிடம். இந்நாட்டை கிரேக்கம் என்றும் அழைப்பர். இது அய்ரோப்பா கண்டத்தில் உள்ள சிறு நாடு.
கிரேக்க நாட்டின் தெற்குப் பகுதியில் உள்ள ஒலிம்பிய என்ற இடத்தில், கி.மு.776ஆம் ஆண்டு முதல் ஒருநாள் ஒலிம்பிக் போட்டி நடத்தப்பட்டது.
அதன்பின் ஒருநாள் போட்டி பலநாள்கள் நடத்தப்படும் போட்டியாக மாற்றப்பட்டதுடன், 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் போட்டியாகவும் மாற்றப்பட்டது.
ஒலிம்பிக்கின் தந்தை
கோபர்டின் என்பவர் ஒலிம்பிக்கின் தந்தை என்று அழைக்கப்படுகிறார். கி.பி.1896இல் கிரீஸ் நாட்டின் தலைநகரான ஏதென்ஸ் 13 நாடுகளைச் சேர்ந்த 300 வீரர்களை அழைத்து, ஜிம்னாஸ்டிக்ஸ், சைக்கிள் பந்தயம், வாள் சண்டை, பளு தூக்குதல், நீச்சல், மாரத்தான், துப்பாக்கிச் சுடுதல், தடகளப் போட்டிகள் ஆகியவற்றை நடத்தினர். இதுவே, தற்போதைய ஒலிம்பிக் போட்டிகளின் முன்னோடி. அதனால் இது முதல் ஒலிம்பிக் போட்டி எனப்பட்டது. இதை நடத்திய கோபர்டின் துப்பாக்கிச் சுடும் போட்டியில் சாம்பியன்.
இதன்பின் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை இப்போட்டி நடத்தப்படுகிறது. அதன்படி இரண்டாவது ஒலிம்பிக் போட்டி, 1900இல் பாரீஸில் நடத்தப்பட்டது.
இரண்டாவது ஒலிம்பிக் போட்டியில்தான் பெண்களும் பங்குபெற வாய்ப்பளிக்கப்பட்டது.
போரினால் போட்டி நின்றது
1916இல் பெர்லினில் நடைபெற வேண்டிய ஒலிம்பிக் போட்டி முதல் உலகப் போரின் காரணமாக நிறுத்தப்பட்டது.
1940இல் ஜப்பானிலும், 1944இல் இங்கிலாந்திலும் நடைபெற வேண்டிய ஒலிம்பிக் போட்டிகள் இரண்டாம் உலகப் போரினால் நிறுத்தப்பட்டன.
ஒலிம்பிக் பதக்கங்கள்
1904ஆம் ஆண்டுதான் முதன்முறையாக ஒலிம்பிக் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்குப் பதக்கங்கள் வழங்கி பாராட்டப்படுவது தொடங்கப்பட்டது.
ஒலிம்பிக் சுடர்
இச்சுடர் ஏற்றும் நிகழ்வு ஒவ்வொரு முறையும் கிரீஸ் நாட்டிலேயே நடைபெறுகிறது. இச்சுடர் சூரிய ஒளியினாலேயே பற்றவைக்கப்படுகிறது. சூரிய ஒளிக் கற்றைகளை குவியச் செய்வதன்மூலம் நெருப்பு உண்டாக்கப்படுகிறது. (உருப்பெருக்கி ஆடியை சூரிய ஒளியில் காட்டி, அதன் கீழ்புறம் பஞ்சை வைத்து, சூரிய ஒளி ஒரு கடுகளவு இருக்கும்படி சிறிது நேரம் காட்டினால் தீ பிடித்துக் கொள்ளும். பிஞ்சுகள் இதைச் செய்து பார்க்கலாம்.)
ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும்போது உலக சமாதானத்தை உணர்த்தும் வகையில் வெண்புறாக்கள் பறக்கவிடப்படும்.
ஏற்றப்படும் ஒலிம்பிக் சுடர் அஞ்சல் ஓட்டம் மூலம் (ரிலே ரேஸ்) ஒரு பந்தத்திலிருந்து இன்னொரு பந்தத்திற்கு ஏற்றப்பட்டு, அத்தீப்பந்தம் போட்டி நடக்கும் நாட்டிற்கு ஆயிரக்கணக்கான மைல் தூரம் கடந்து கொண்டுசெல்லப்பட்டு, அங்குள்ள அதற்கான மேடையில் உள்ள பந்தத்தில் ஏற்றப்படும். இந்தச் சுடரை அஞ்சல் ஓட்டம் மூலம் கொண்டுவரும் பணியில் ஆயிரக்கணக்கான வீரர்கள் பங்கு கொள்வர். இவ்வாறு ஏற்றப்படும் சுடர் போட்டிகள் முடியும்வரை அணையாமல் பாதுகாக்கப்படும்.
எலக்ட்ரானிக் போட்டி முடிவுகள்
1912இல் ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்கோமில் நடந்த ஒலிம்பிக்கில்தான் எலக்ட்ரானிக் முறையில் போட்டி முடிவுகள் அறிவிக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டு வழக்கத்தில் வந்தது. இங்கு நடந்த போட்டியில் 5 கண்டங்களைச் சேர்ந்த வீரர்களும் கலந்து கொண்டனர்.
ஒலிம்பிக் கொடி
1920ஆம் ஆண்டு பெல்ஜியத்தில் ஆண்ட்வெர்ப் நகரில் நடந்த ஒலிம்பிக்கில்தான், 5 கண்டங்களைக் குறிக்கும் வகையில் 5 வளையங்களைக் கொண்ட ஒலிம்பிக் கொடி அறிமுகப்படுத்தப்பட்டது.
ரியோ ஒலிம்பிக்
31ஆவது ஒலிம்பிக் போட்டி பிரேசில் நாட்டில் ரியோடிஜெனிரோ நகரில் ஆகஸ்ட் 5ஆம் தேதி தொடங்கப்பட்டது. இது ‘ரியோ ஒலிம்பிக் 2016’’ என்று அழைக்கப்படுகிறது. கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை (17 நாட்கள்) இது நடைபெற்றது.
இப்போட்டியில் 207 நாடுகளிலிருந்து 11,544 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இந்தியாவின் சார்பில் 103 வீரர்கள் 57 நிகழ்வுகளில் போட்டியிட்டனர்.
306 வகையான போட்டிகள் 37 பிரிவுகளில் நடத்தப்பட்டன. 17—வது முறையாக அமெரிக்கா 121 பதக்கங்களை பெற்று முதலிடத்துள்ளது. பிரிட்டன் 67 பதக்கங்களை வென்று இரண்டாம் இடத்தையும், 70 பதக்கங்களை வென்று சீனா மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது.
இந்தியா பெற்ற பதக்கங்கள்
இந்தியா 2 பதக்கங்களை பெற்று 67-வது இடத்தைப் பிடித்துள்ளது. பேட்மிண்டனில் பி.வி.சிந்து வெள்ளி பதக்கமும், மல்லியுத்தப் போட்டியில் சாக்க்ஷி மாலிக் வென்கல பதக்கமும் வென்றார்கள். பதக்கம் வெல்லவில்லையென்றாலும் அதற்கானமுதல் நம்பிக்கையைத் தந்தவர் ஜிம்னாஸ்டிக் வீராங்கனையான தீபா கர்மாகர் ஆவார்.
அடுத்த ஒலிம்பிக் போட்டி
2020ஆம் ஆண்டு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.