மின்சாரம் எதனால் ஆனது? 8
மின்சாரம் என்பது ஒரு விசைதான் என்றும், அந்த மின்விசை, நடைமுறையில் எவ்வாறு உற்பத்தி செய்யப்படுகிறது என்றும் சென்ற சில கட்டுரைகளில் பார்த்தோம்.
மேலும், அணு, அனல், காற்றாலை, நீர்மின் நிலையங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்விசையானது. Alternating Current (AC)
என்றும், சூரியஒளி, வேதியியல் பகுப்பு மூலம் பெறப்படும் மின்விசையானது Direct Current (DC) என்றும் பார்த்தோம். இக்கட்டுரையில், இதை பற்றி இன்னும் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
Direct Current எனப்படும் நேர்பாதை மின்னோட்டத்தில், விரட்டப்பட்டு ஓடும் எலக்ட்ரான்கள், ஒரே பாதையில் ஒரே திசையில் செல்லும். எடுத்துக்காட்டாக, சூரிய மின் கலங்களில், சூரிய ஒளி மூலம் வெளியேற்றப்படும் எலக்ட்ரான்கள், ஒரே திசையில் நேராக பயணித்து செல்லும்.
Alternating Current (AC) எனும் மாற்றுப்பாதை மின் விசையானது, பெயருக்கேற்றாற் போல, தன் திசையை மாற்றி மாற்றி பயணிக்கும் தன்மை கொண்டது. எடுத்துக்காட்டாக, அனல், அணு, காற்றாலை, நீர்மின் நிலையங்களில், டர்பைன்கள் சுழலுவதால் விரட்டப்படும் எலக்ட்ரான்கள், ஒரு திசையில் நேராக பயணிக்காமல், ஒரு நொடிக்கு பலமுறை தன் திசையை மாற்றிக்கொள்ளும் பண்பினை உடையது.
இந்த மாற்றுப்பாதை மின்விசை ஏன் இவ்வாறு தான் பயணிக்கும் திசையை நொடிக்கு பலமுறை மாற்றிக்கொண்டே இருக்கிறது என்ற கேள்வி இப்போது உங்களுக்கு தோன்றலாம். இதற்கான பதில், இந்த மின்விசையினை உற்பத்தி செய்யும் டர்பைன்களில்தான் இருக்கிறது.
பெரிய பெரிய டர்பைன்களில் காந்தங்களை பொருத்தி, அந்த டர்பைன்களை சுழற்றுவதன் மூலம், ‘சுழலும் காந்தப்புலத்தை’ எலக்ட்ரான்கள் நிறைந்த செப்புக் கம்பிச் சுருள்களுக்கு (Coils) இடையே உருவாக்கி, இந்த மாற்றுப்பாதை மின்விசையானது உற்பத்தி செய்யப்படுகிறது என்பதை தெளிவாக சென்ற கட்டுரைகளில் பார்த்தோம். காந்தங்களுக்கு இரு துருவங்கள் இருக்கும் என்பதும், இந்த இரு துருவங்களும் எதிர் எதிர் திசை பண்பினை பெற்றிருக்கும் என்பதும் அனைவரும் அறிந்ததே.
ஆகவே, காந்தத்தின் ஒரு துருவம், எலக்ட்ரான்களை ஒரு திசையிலும் இன்னொரு துருவம் எலக்ட்ரான்களை அதற்கு எதிர் திசையிலும் விரட்டும். எனவே, இவ்வாறு சுழலும் காந்தத்தால் விரட்டப்படும் மின்விசையானது, ஒரே திசைப் பண்பை பெற்றிருக்காமல், திசைப் பண்பினை மாறி மாறி பெற்றிருக்கும்.
இது விளங்கிக்கொள்ள சற்றுக் கடினமாக இருந்தாலும், மேலுள்ள படத்தைப் பார்த்தால், ஓரளவு தெளிவாகும். டர்பைன்கள் மூலம் காந்தபுலம் சுழலும்போது, வடதுருவம் வலது புறத்திலும், தென் துருவம் இடது புறத்திலும் இருக்கும்போது, எலக்ட்ரான்களானது வலது திசையை நோக்கி விரட்டப்படும். அதேபோல, வடதுருவம் இடது புறத்திலும், தென்துருவம் வலது புறத்திலும் இருக்கும். எலக்ட்ரான்களானது, இடது திசையை நோக்கி விரட்டப்படும்.
எனவே, அனல், அணு, காற்றாலை, நீர்மின் நிலையங்களில் உற்பத்தி செய்யப்படும் மின் விசையானது, ஏன் Alternating Current- ஆக இருக்கிறது என்று இப்போது ஓரளவு தெளிவாகிறதல்லவா? மின் உற்பத்தி நிலையங்களில், வேகமாகச் சுழலும் காந்த புலத்தால் விரட்டப்பட்டு உருவாகும் இந்த மாற்று திசை மின்விசையானது, நொடிக்கு 50 முறை தன் திசையை மாற்றிக்கொள்ளும் தன்மையினை உடையது. ஒரு சல்லடையை வேகமாக சலிப்பது போல, எலக்ட்ரான்கள் எதிர் எதிர் திசைகளில் நொடிக்கு 50 முறை மாறி மாறி பயணிக்கும்.
மின்விசையினைபற்றி அறிந்துகொள்ள வேண்டிய மிக முக்கியமான அடிப்படை தகவல்களான இந்த இரண்டு வகை மின்விசைகளைப் பற்றி இன்னும் சற்று தெளிவாகவும் விரிவாகவும் அடுத்தக் கட்டுரையில் பார்க்கலாம்.