ரகசியம்.. உஷ்ஷ்
“காட்டின் மன்னர் வருகின்றார்! பராக்… பராக்… பராக்…” என அறிவிப்பு வந்தது. அரண்மனை மாடிப்படியில் இருந்து அந்த காட்டின் மன்னர் நடந்து வந்தார். அவர் தனக்குத்தானே சிரித்தபடி இறங்கினார்.
அரசவையில் முதல் வரிசையில் இருந்த சிங்கம் “என்ன மன்னா, அப்படி என்ன நடந்தது? எங்களுக்கும் சொல்லுங்களேன்” என்றது.
சிங்கத்தை மட்டும் தனியே அழைத்து, “நான் ஒரு ரகசியம் சொல்வேன். ஆனால் அதனை நீ ஒருவரிடம் மட்டுமே சொல்லலாம். அதை மீறிச் சொன்னால் உனக்கு ஆபத்து நிகழலாம்” என்றது மன்னர்.
‘ஓ! மன்னர் யார் என்று தெரியும் இல்லையா?’ ஓர் எறும்பு! கடந்த தேர்தலில் வெற்றி பெற்று மன்னராகத் தேர்ந்தேடுக்கப்பட்ட எறும்பு.
“மன்னா! முதலில் ரகசியத்தை சொல்லுங்க” என்றது சிங்கம். “காதைக் காட்டுங்க” என ஒரு மேஜை மீது ஏறி காதில் ரகசியத்தைச் சொன்னது. குலுங்கிக் குலுங்கிச் சிரித்தது சிங்கம். அதனால் சிரிப்பினை அடக்கவே முடியவில்லை. “நிஜமாகவா? நிஜமாகவா?” என்று விழுந்து விழுந்து சிரித்தது.
அரண்மனையில் உள்ள தனி அறையில் சிரித்த சிரிப்பு அரண்மனை முழுக்க கேட்டது. யார் கேட்டாலும் அது ரகசியத்தைச் சொல்லவில்லை. அந்த ரகசியத்தை ஒரே ஒருவருக்குத் தான் சொல்ல முடியும் என்பது கூட யாருக்கும் தெரியாது.
மறுநாள் காலை தன் மகிழுந்தில் நாட்டு வழியாக வேறு காட்டிற்குச் சென்று கொண்டிருந்தது. திடீரென வண்டி நின்றுவிட்டது. ‘திக்குத் தெரியாத நாட்டில் என்ன செய்வது? மெக்கானிக்கடை எங்கு இருக்கின்றதோ தெரியவில்லையே’ என்று கவலைப்பட்டது சிங்கம். ‘சர்ர்ர்ர்’ என்று ஒரு புல்லட்டில் மான் அங்கே கடந்தது. சோகமாக நிற்கும் சிங்கத்தைப் பார்த்து வண்டியை நிறுத்தியது.
“என்ன பிரச்சினை?” என்று கேட்டதும் விஷயத்தைச் சொன்னது சிங்கம்.
“தெரியல”.
மான், காரின் முன்பகுதியை திறந்து, சில நிமிடங்களில் சரி செய்தது. நல்லவேளை அதுவரையில் மனிதர்கள் யாரும் அந்தப்பக்கம் வரவில்லை. தன் நன்றியின் வெளிப்பாடாக மானிடம், “உனக்கு ஒரு ரகசியம் சொல்லப் போகின்றேன், அதனை நீ ஒருவரிடம் மட்டுமே சொல்லலாம்” என்று சொல்லி ரகசியத்தைச் சொன்னது.
மான் ரகசியத்தைக் கேட்டதும் ‘தத்தக்கா… புத்தக்கா’ என சிரித்தது. ‘ஊஊ’ என சத்தமிட்டது. மானால் சிரிப்பை அடக்கவே முடியவில்லை.
தடுமாறித் தடுமாறி புல்லட்டை ஒருமாதிரி ஓட்டிக்கொண்டு ஊர் சேர்ந்தது. அதனை நினைத்து நினைத்து இரவு உறங்காமல் சிரித்துக்கொண்டே இருந்தது. பக்கத்து அப்பார்ட்மெண்டில் வசித்த ஒட்டகச்சிவிங்கி மறுநாள் காலையிலேயே மானின் வீட்டிற்கு வந்தது. வெளியே இருக்கும் பூங்காவில் அமர்ந்து கொண்டது. ஒட்டகச்சிவிங்கி உள்ளே நுழையும் அளவிற்கு மானுடைய வீட்டு நுழைவாயில் இல்லை.
“என்ன மான் நண்பரே, இரவெல்லாம் சிரிப்புச் சத்தம் கேட்டது. என்ன விசேஷம்? எனக்கும் சொல்லக்கூடாதா?” என்றது ஒட்டகச்சிவிங்கி.
மானுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. ‘ஒரே ஒருத்தரிடம் மட்டும் தான் ரகசியம் சொல்லலாம்’ என்றது சிங்கம். ‘சொல்லிடலாமா? சரி… சொல்லிடலாம்’ என்ற முடிவிற்கு வந்தது.
மன்னர் எறும்பு சிங்கத்திடம் சொன்னதையும், சிங்கம் மானிடம் சொன்ன கதையையும் முதல் மாடிக்கு ஏறி, ஒட்டகச்சிவிங்கியின் காதில் சொன்னது. “ஒருத்தர் கிட்ட மட்டும்தான் சொல்லணும்” என்று முடிப்பதற்குள் ஒட்டகச்சிவிங்கி சிரிக்க ஆரம்பித்தது.
தலையை ஆட்டி ஆட்டி சிரித்ததில் ‘சுளுக்கு’ பிடித்துக்கொண்டது. அன்றைய தினம் ஞாயிற்றுகிழமை. எந்த மருத்துவரும் இருக்க மாட்டார்கள். எல்லா நாளும் மருத்துவம் பார்க்கும் ஒரே மருத்துவர் ஆலமரக் குருவி மட்டுமே. நல்லவேளையாக குருவி நல்ல உயரத்தில் மருத்துவமனையை வைத்து இருந்தது. சுளுக்கினைக் காட்டியது. பறந்து பறந்து ஒட்டகச்சிவிங்கியின் கழுத்திற்கு கட்டு போட்டது. “ஏன் நண்பரே அப்படி என்ன செய்தீர்கள், கழுத்து சுளுக்கும் அளவிற்கு?” என்று கேட்டது குருவி.
வலி சரியானது. உதவிய குருவியிடம் “யாரிடமும் சொல்லாதீங்க” என்று ரகசியத்தைச் சொன்னது ஒட்டகச்சிவிங்கி. குருவி வேறு மாதிரி சிரித்தது. மற்றவர்களைப்போல விழுந்து விழுந்து சிரிக்கவில்லை!
“ஆமாம். உங்களுக்கு யார் இந்த ரகசியத்தை சொன்னது?”
“புல்லட் மான்”
“அவருக்கு?”
“காரில் வந்த சிங்கம்”
“அவருக்கு?”
“நம்ம நாட்டு மன்னன் எறும்பு”
“அவருக்கு?”
“தெரியலையே”
“முந்தாநாள் ஒரு காலில் அடிபட்டுவிட்டது என்று மருத்துவம் பார்க்க வந்த மன்னன் எறும்புக்கு நான் தான் இந்த ரகசியத்தையே சொன்னேன்” என்றது குருவி.
“அட!” என்று சொல்லிவிட்டு நன்றியையும் தெரிவித்தது ஒட்டகச்சிவிங்கி.
ஆமாம், நீங்கள் இப்ப யாரிடம் அந்த ரகசியத்தைக் கேட்டு தெரிந்துகொள்வீர்கள்? அச்சோ. குருவியும் ஏற்கனவே ஒருத்தர்கிட்ட சொல்லிடுச்சே?