பேசாதன பேசினால்…
இலக்கியாவும், இனியனும் அக்கா தம்பி. அவர்கள் இருவரையும் வெளிநாட்டிலிருந்து வந்த மாமா கடைக்குக் கூட்டிச் சென்றார்.
இலக்கியாவும், இனியனும் தங்களுக்கு தேவையான விளையாட்டுப் பொருள்களை யெல்லாம் மாமாவிடம் கேட்டு வாங்கிக் கொண்டனர்.
கடுமையான வெயில் நேரம் என்பதால் ஒரு கடையில் குளிர்பானம் குடிக்க நின்றார் மாமா. “இலக்கியா… இனியன்… உங்களுக்கு என்ன குளிர்பானம் வேணும்?” என்று கேட்டார்.
இலக்கியா சற்றும் தயங்காமல் “பாட்டிலில் விற்கும் குளிர்பானம் வேண்டாம்!” என்றாள். இனியன் தனக்கு “சில்லென்று இருக்கும் எந்த குளிர்பானமாக இருந்தாலும் சரி” என்றான்.
மாமாவும், இனியனும் ஆளுக்கு ஒரு குளிர்பானத்தை உறிஞ்சிக் குடித்தபடி இருந்தனர். அந்த குளிர்பானக் கடைக்கு அருகிலேயே சாலை ஓரத்தில் இளநீர் கடை ஒன்று இருந்தது. அதையே பார்த்துக் கொண்டிருந்தாள் இலக்கியா.
அந்த இளநீரைப் பார்த்ததும் தன் அப்பா இளநீர் பற்றி சொன்ன செய்திகள் நினைவுக்கு வந்தன.
குவியலாக இருந்த இளநீர் காய்களிலிருந்து ஒரு இளநீர் மட்டும் திடீரென கண், வாய், மூக்கு இவற்றோடு இனியனை நோக்கி உருண்டு வந்து பேசத் தொடங்கியது.
“தம்பி! இது உனக்கே நல்லாயிருக்கா… இந்த நாட்டுலேயே இயற்கையா கிடைக்கிற என்னை விட்டுட்டு இரசாயனப் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படுற வெளிநாட்டு குளிர்பானத்தைக் குடிக்கிறியே… இதனாலே உடம்புக்கு எவ்வளவு கெடுதல் தெரியுமா?” என்றது இளநீர்.
இனியன் கோபத்தோடு… “இந்த குளிர்பானம் போல உன்னாலே அழகா இருக்க முடியலேங்கிற வெறுப்புல தானே பேசுறே” என்றான்.
“இல்ல தம்பி! உன்மேல உள்ள பொறுப்புலே பேசுறேன்…’’
“வளைந்து நெளிந்த பிளாஸ்டிக் பாட்டிலில் வண்ணக் கலவை, இதுதான் அழகுன்னு நினைச்சியா… அதான் இல்லே… அந்த அழகுலதான் ஆபத்து அதிகம் இருக்கு. பிளாஸ்டிக் பாட்டில், அதுக்குள்ள இருக்கிற இரசாயனக் கலவை இந்த ரெண்டுமே உடம்புக்கு கெடுதல்.
ஆனா! இயற்கையா வளர்ந்த எனக்குள்ள இருக்கிற உயிர் சத்து நிறைஞ்ச இளநீர் உடம்புக்கு ரொம்ப ரொம்ப நல்லது. கலப்படம் செய்ய முடியாதது. இளநீர் தாய்ப்பாலுக்கு இணையான புரதச் சத்தும், கரிமப் பொருளும் கொண்டது. உடல் வெப்பத்தை சீராகப் பராமரிக்கக் கூடியது. உன்னை மாதிரி குழந்தைகளின் அஜீரணத்தை சரி செய்யும். உடம்புல உள்ள உள் உறுப்புகளை சீரா செயல்பட வைக்கும்.
ரத்தத்திலே உள்ள பிளாஸ்மாவுக்கு மாற்றுப் பொருளா செயல்படும். உடம்பில் உள்ள உப்புப் பற்றாக்குறையை சரி செய்யும். சிறுநீர் சீராப் பிரிவதற்கு உதவும். எங்கிட்ட நிறைய அளவு பொட்டாசியம் இருப்பதால் நான் கூடுதல் இரத்த அழுத்தம் மற்றும் வாதத்துக்கு நல்ல மருந்து. பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற கனிமங்கள் என்னிடம் அதிகம் இருப்பதால் சிறுநீரகத்தில் கற்கள் வருவதைத் தடுக்குறேன்.
இரத்தத்தைச் சுத்தப்படுத்தி, தேவையற்ற அசுத்த நீர்களைப் போக்கி இரத்தச் சோகை ஏற்படாம பாதுகாக்கிறேன். எலும்புகளுக்கும், உடல் உறுப்புகளுக்கும் வலுகொடுத்து உடல் வளர்ச்சி சீரா இருக்க உதவுறேன்.
மூளைக்குப் புத்துணர்வும், நரம்புகளுக்கு வலுவும் ஏற்படுத்துறேன். நினைவாற்றலைத் தூண்டுறேன். டைபாய்டு, மஞ்சள் காமாலை நோய் தாக்கியவங்க இளநீர் குடிச்சா உடம்பு சீக்கிரம் குணமாகும். உங்களை மாதிரி சின்னப் புள்ளைகளுக்கு மட்டுமில்லாமெ வயசானவங்களுக்கும், நோயாளிகளுக்கும் இயற்கை தந்த சிறந்த டானிக்தான் நான்.
மேலும்… இளநீரான நான் உடலுக்குத் தேவையான காம்ப்ளெக்ஸ் வைட்டமின்களான ரிபோஃப்ளோவின், நியாசசின், தையமின், பைரிடாக்சைன் மற்றும் ஃபோலெட் இதையெல்லாம் இயற்கையாகவே தர்றேன். ஆனா நீ குடிக்கிற இந்த பெப்சி, கோக்கு கொக்கக்கோலான்னு இருக்கிற எல்லாமே தாகத்தை தணிக்கிறதுக்கு பதிலா அதிகமாக்கும். உடம்புக்குள்ள போகிற அந்த இரசாயனக் கலவை உடம்பைக் கெடுத்திடும். உன் வளர்ச்சியை தடுத்திடும்.
நீ குடிக்கிற இந்த குளிர்பானத்தைத் தயாரிக்க குறைஞ்ச செலவுதான் ஆகுது. ஆனா… இதுக்கு செய்யப்படுற விளம்பரத்துக்கும் சேத்துதான் நீங்க பணம் குடுக்குறீங்க. அந்தப் பணம் வெளிநாட்டுக் கம்பெனிக்குப் போய்ச் சேருது.
என்னை விலை குடுத்து வாங்குனா, அந்த பணம் உள்ளூருலே என்னை விளையவச்ச விவசாயிக்குப் போய்ச் சேரும். என்னை குடிச்சிட்டு தூக்கிப்போட்டா… கொஞ்ச நாள்ளே மக்கி மண்ணுலெ உரமாயிடுவேன். இல்லே காஞ்சி போயி நாறாகி, கயிறாகி மறுபடியும் மனுஷனுக்கே பயன்படுவேன். உன்னைக் கெடுக்கிற இந்த குளிர்பான பிளாஸ்டிக்கை தூக்கிப் போட்டா… மண்ணையும் கெடுத்து மலடா ஆக்கிடும்.
இளநீரான என் உள்ளே இருக்கிற வழுக்கை இருக்கே அது குளுக்கோசுக்கு இணையானது. அதை சாப்பிட்டா உடனேயே ஆற்றல் அதிகமாகும். களைப்பு காணாமல் போயிடும். வயித்துல உள்ள குடல் புழுவை வெளியேத்தி வயித்தையும் சுத்தப்படுத்தும்.
இவ்வளவு நல்ல பொருளை விட்டுட்டு கெட்டதை குடிக்கிறியே அதை நினைச்சுத்தான் நான் வருத்தப்படுறேன்.’’
“இளநீர் நல்லதுன்னு சொல்லு ஒத்துக்குறேன். இது கெட்டதுன்னு யார் சொன்னா…” என்றான் இனியன். “பல ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து சொன்ன செய்தியைத்தான் உனக்கு இப்ப சொன்னேன்! என்னைச் சாப்பிடலைன்னாலும் பரவாயில்லே… இனிமே இதுமாதிரி குளிர்பானங்களை தயவு செய்து குடிச்சு உடம்பை கெடுத்துக்காதே! நான் வர்றேன்’’ என்று சொல்லி மறைந்தது இளநீர்.
“என்ன இலக்கியா! ஏன் இளநீர் கடையையே முறைச்சு பாத்துக்கிட்டிருக்கே?” என்றபடி இலக்கியாவைத் தட்டினார் மாமா.
கற்பனையிலிருந்து இலக்கியா சுய நினைவுக்கு வந்தாள். “மாமா போன வாரம் அப்பா குளிர்பானம் கேட்டதுக்கு அது வேண்டான்னு சொல்லி இளநீர் வாங்கித் தந்தாங்க. அப்ப இளநீரின் சிறப்பையும், குளிர்பானத்தின் கெடுதலையும் எடுத்துச் சொன்னாங்க! அது நினைவுக்கு வந்தது. அதை… அந்த இளநீரே தம்பிக்கிட்ட சொன்னா எப்படி இருக்கும்னு நினைச்சுப் பாத்தேன்’’ என்றாள்.
“அப்படி என்ன சொன்னாங்க…” என்றார் மாமா.. இளநீர் பேசியதை மீண்டும் தம்பி இனியனுக்கும் மாமாவுக்கும் சொன்னாள் இலக்கியா. மனம் வருந்திய மாமா சொன்னார். “இலக்கியா, நீ சொன்ன பிறகுதான் எனக்கே இந்த விவரமெல்லாம் தெரிஞ்சுது.
இனி எப்பவும் உடம்புக்கு கெடுதல் செய்யும் குளிர்பானத்தை விட்டுட்டு நாட்டுக்கும் நம்ம உடம்புக்கும் நன்மை தரக்கூடிய இளநீரைத்தான் குடிப்பேன்! இனியா இனி நீயும் இளநீர்தான் குடிக்கணும்” என்றார். இனியனும் இலக்கியா சொன்ன நல்ல கருத்தை ஏற்றுக் கொண்டான். பிஞ்சுகளே நீங்க…?