உலகம் சுற்றி-2
டிஸ்னியின் ‘நாளைய உலகம்’ என்பது நம் அனைவரையும் குழந்தைகளாக்கும் அற்புதமாகும்.
அங்கு கூட்டம் எப்போதும் நிறைந்து வழியும். ஆனால் மோதல்கள் எதுவும் இன்றி அனைவரும் வரிசையில் நின்று, அனுபவிக்கும் மகிழ்ச்சியான உலகம். சில நேரம் இரண்டு மணியளவில் காத்திருக்க வேண்டியிருக்கும். முக்கியமானவற்றிற்கு முன் பதிவு செய்துவிட்டால் வரிசை இல்லாமல் செல்லலாம். அனைவரும் மிகவும் விரும்புவது “விண்வெளி மலை” எனும் விண்வெளிப் பயணம். நாம் அனைவரும் விண்வெளி வீரர்களாக விண்ணில் சென்று வருவோம்!
முதலில் பயணத்தைப் பற்றி நன்கு விளக்கிச் சொல்லி நம்மைத் தயார் செய்வார்கள். பின் ஒவ்வொருவராக மூன்று பேர் அமரும் விண் ஊர்தியில் அமர்வோம். கீழே விழாதபடி நன்கு பாதுகாப்பாக அமர்ந்திருப்போம். மிகப் பெரிய வெள்ளை மலைக் கட்டிடத்தின் உள்ளே விரைந்து மிகவும் மேலேயும் திடீரென்றுக் கீழேயும்,
எதிர் பார்க்காமல் விரைவாகவும் திரும்பும் ஊர்தியில் அமர்ந்திருப்போர் போடும் கூச்சல் காதைப் பிளக்கும். ஆங்காங்கே எரிமலைக் கற்கள் தாக்க வரும். விண்மீன்கள், நிலா அருகே தெரியும். வான்வெளியில் விரைவாகப் பறப்போம். ஒரே இருட்டாக இருக்கும். அச்சமா, மகிழ்ச்சியா? இரண்டும் கலந்த இன்பமா? 40 ஆண்டுகளாக அனைவரையும் குழந்தைகளாக்கி மகிழ்விக்கும் இந்தச் சில மணித்துளிப் பயணம் மறக்க முடியா நினைவாய் கீழே இறங்குவோம்.
எங்கள் பேத்தி இரண்டாம் முறையும் சென்று மகிழ்ந்தார். 30 ஆண்டுகட்கு முன்னர் என் அம்மாகூடத் துணிவாகச் சென்று மகிழ்ந்தார்கள்.
1965இல் உலகக் கண்காட்சி நடந்தபோது வால்ட் டிஸ்னி “வாழ்வில் முன்னேற்றம்” என்ற ஒரு காட்சியை அமைத்திருந்தார். நாம் ஒரு பெரிய அறையில் வரிசையாக அமர்ந்திருப்போம். எதிரே மேடையிலே பழைய அடுப்பறையிலே ஒரு குடும்பம், விறகும் புகையும் இல்லாமல் கரி அடுப்பைப் பற்றி மகிழ்ந்து பேசிக் கொண்டிருப்பார்கள். ஆம்! அந்த பொம்மை மனிதர்கள் பேசுவார்கள்.
அடுத்து நாம் அமர்ந்திருக்கும் அறை அப்படியே அடுத்த மேடைக்கு நகரும். அங்கே மின் விசிறியும், குளிர்பதனியும் பற்றிப் பெருமையாகப் பேசுவார்கள். அடுத்தடுத்த மேடைகளில் அவர்கள் கொஞ்சம் வயதாகி மற்ற மின் சாதனங்கள், துணிதுவைக்கும், காயவைக்கும் அற்புதங்கள், வானொலி, தொலைக்காட்சி, கணினி பற்றிப் பேசி மகிழ்வார்கள். எப்படி அறிவியல், வாழ்வை முன்னேற்றி வசதிகளைப் படைத்துள்ளது என்பதை அற்புதமாகப் பேசும் மனிதப் பொம்மைகளை வைத்து விளக்கியிருப்பார்.
அடுத்து எதிர் காலத்தில் மக்கள் பயணத்திற்காகவென்று நகரும் ஊர்திகள் பயணம். எப்படியெல்லாம் இந்த ஊர்தி விரைவாகவும், வசதியாகவும் மக்களைப் பல இடங்களுக்குக் கொண்டு செல்லும் என்பதை அந்த ஊர்தியில் அமர்ந்தவாரே நாளைய உலகம் முழுதும் காண்பித்து இறக்கி விடுவார்கள்.
மக்கள் மிகுந்து காணப்படும் ஒரு காட்சியாக விண்ணில் பறக்கும் இடம், ஒரு எளிய குடை இராட்டிணந்தான்! ஆனால், அதில் பல்வேறு ராக்கெட் போன்ற இருக்கைகள், அவை அமைக்கப்பட்டுள்ள விதம் விண்ணில் பறப்பதுபோன்று இருப்பதால் அங்கு அவ்வளவு கூட்டம்!
சிறியோரும் பெரியோரும் அலைமோதும் மற்றோர் இடம், கார் ஓட்டுமிடம். மிக விரைவாக கார் ஓடும் பந்தயம் போல் அமைந்துள்ள அந்த இடத்தில் நாம் அனைவரும் பந்தயக் கார் வீரர்களாகி மகிழ்வோம்.
இடையிடையே வர்த்தக உணவுக் கூடங்கள், அவ்வளவு கூட்டத்தையும் எளிதாகச் சமாளிக்க விண்வெளி அய்ஸ்கிரீம், விதவிதமான உணவுகள், விலை உயர்ந்த விளையாட்டுப் பொருள்கள் உள்ளிட்டவை கிடைக்கும். டிஸ்னி நிறுவனத்தின் முக்கிய நோக்கம் பெரும் வணிகம், பெரும் வருமானம் என்பதே தெரியாமல் மக்களை மகிழ்ச்சியுடன் வாங்க வைத்துவிடும் வணிக அற்புதம்!
இன்னும் சிரிப்பு உலகம் என்று வந்தவர்களைப் பங்கேற்க வைத்து இயந்திரங்கள் பேசிச் சிரிக்க வைக்கும்.
கணினி விளையாட்டின் உச்சமான பல லேசர் அற்புதங்களால் எரிகணைகள், எரி கற்களை சுட்டு வீழ்த்தும் விண்வெளி போர் வீரர்களாகச் சிறிய பயணத்தில் நாம் பெரிய சாதனை புரிந்துகொள்ள வாய்ப்பை வழங்கும் வீடியோ ஆர்கேட் அனைவரையும் கணினி வீரர்களாக்கி விடும்.
அந்த ‘நாளைய உலகம்’ முழுவதும் வேறு எங்குமில்லாத வண்ணக் கலவைகளால் அமைந்து மனிதனின் கற்பனை எவ்வளவு மகிழ்ச்சி தர முடியும் என்ற எல்லையைத் தொட்டிருக்கும்.
மற்ற உலகங்களையும் பார்க்க வேண்டுமல்லவா?
பிரியா விடை பெற்றுச் செல்வோம். செல்வங்களே வாருங்கள்.
தொடரும்…