அசைவ உணவு அறிவைக் கெடுக்குமா?
உணவுக்கும் அறிவுக்கும் தொடர்பு உண்டு என்றாலும், ‘சைவ உணவு அறிவுக் கூர்மைக்கு உதவும், அசைவ உணவு அறிவைக் கெடுக்கும்’ என்ற கருத்து முற்றிலும் தவறானது என்பதைப் பிஞ்சுகள் நெஞ்சில் நிறுத்திக் கொள்ள வேண்டும்.
அதேபோல் ‘சைவம் சாப்பிடுகிறவர்கள் உயர்ந்தவர்கள். அசைவம் சாப்பிடுகிறவர்கள் கீழானவர்கள்’ என்ற கருத்தும் தப்பானது. அதிலும் ‘மாடு, பன்றி சாப்பிட்டால் இன்னும் கீழானவர்கள்’ என்பதும் மிகமிகத் தப்பான கருத்து.
உடலுக்குத் தேவையான பல்வேறு சத்துக்களை உள்ளடக்கிய சரிவிகித உணவுகளை உண்டால், அது உடலின் ஆற்றல், நலம், வளம், வலு, அறிவு இவற்றை மேம்படுத்தும்; நல்ல நிலையில் வைக்கும் என்பது அறிவியல் சார்ந்த உண்மை.
அதாவது காய்கறி, கீரை, பருப்பு, இறைச்சி, மீன், முட்டை, பழங்கள், தானியங்களை மாற்றி மாற்றி தேவையான அளவு கலந்து உண்பதன் மூலம் மேற்கண்ட நலங்களைப் பெறமுடியும் என்பதே அதன் பொருள்.
மாறாக, சைவம், அசைவம் என்று பிரித்துப் பேசுவது ஆதிக்க ஜாதியினர் செய்கின்ற பண்பாட்டுச் சீர்குலைப்பு ஆகும்.
நாங்கள் சைவம். நாங்கள் உயர்ந்தவர்கள் என்று கூறும் ஆரியர்கள் பசுமாடு, ஆடு என்று பலவற்றையும் யாகத்தில் பலியிட்டு வயிறு புடைக்க சாப்பிட்டவர்கள்தான். புத்தர் தோன்றி ‘உயிர்பலி கூடாது’ என்று போதித்து, அக் கொள்கை மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்றதால், ஆரியர்கள் ‘நாங்கள் அசைவம் சாப்பிட மாட்டோம்’ என்று தங்கள் உணவுப் பழக்கத்தை மாற்றிக் கொண்டார்கள் என்பதே வரலாற்று உண்மை.
அறிவும் அசைவமும்: அசைவ உணவு உண்டால் அறிவுக் கூர்மை கெடும் என்பது அப்பட்டமான பொய். அசைவம் உண்பர்கள்தான் அதிக அளவில் அறிவில் சிறந்து விளங்குகின்றனர்.
இன்று உலகில் பயன்-படுத்தப்படும் அனைத்து அறிவியல் கருவிகளையும் கண்டுபிடித்த அயல்நாட்டினர் எல்லோரும் அசைவ உணவு உண்டவர்கள்தான். சைவ உணவு சாப்பிட்டவர்களைவிட அசைவம் சாப்பிடுபவர்கள்தான் இன்று கல்வியில் சிறந்து விளங்குகின்றனர். முதல் மதிப்பெண் பெறுகின்ற பெரும்பாலான மாணவர்கள் அசைவ உணவு உண்பவர்கள்தான்.
கல்வியோடு, உடல்திறப் போட்டிகளில் சிறந்து விளங்கும் சாதனையாளர்கள் பெரும்பாலும் அசைவ உணவு உண்பர்கள்தான்.
சிற்பம், ஓவியம், நாட்டியம், நடிப்பு, இசை என்று கலைகளில் வல்லுநர்களாய் விளங்குகின்ற பலரும் அசைவம் உண்பவர்கள்தான்.
எனவே, ‘அசைவம் அறிவைக் கெடுக்கும், அசைவம் சாப்பிடுபவர்கள் தாழ்ந்தவர்கள்’ என்ற தப்பான கருத்துக்களைப் புறந்தள்ளி, சைவம், அசைவம் இரண்டிலும் உள்ள உடலுக்கு உகந்தவற்றைத் தேர்வு செய்து உண்டு நலத்தோடும், வளத்தோடும், வலுவோடும், அறிவோடும் வாழ்ந்து சாதிக்க வேண்டும்.
பாக்கெட் உணவுகள், குளிர்பானங்கள், பொறித்த உணவுகள், பரோட்டா, பிராய்லர் கோழி போன்றவற்றைத் தவிர்த்துவிட வேண்டும். இவை உடலுக்குக் கேடானவை.