நாடாளுமன்றத்தில் நுழைந்த பிஞ்சுகள்!
கடந்த ஆண்டு நடைபெற்ற பெரியார் 1000 போட்டியில் மாநில அளவில் முதலிடம் பெற்றவர்கள் புதுடெல்லி மாநகருக்கு சிறப்புச் சுற்றுலாவாக அழைத்துச் செல்லப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது. கோடைக்காலம், பள்ளி சேர்க்கை, காலாண்டுத் தேர்வுகள் என தள்ளிக் கொண்டே போகிறதே டெல்லி பயணம் என்று வெற்றியாளர்களுக்கு ஒரு கவலை. செப்டம்பர் இறுதியில் டெல்லிக்குத் தயாராகுங்கள் என்று வந்த அறிவிப்பில் களை கட்டியது இவர்களின் வீடும், ஊரும். சென்னைக்கு குடும்பத்தோடு வந்து வழியனுப்பிவைத்த உறவுகளை விட்டுவிட்டு முதல்முறையாக ஒரு நீண்ட பயணம் கிளம்பினர் பிஞ்சுகள். அனாலும் உற்சாகம் மனதில் கொட்டிக் கிடந்தது.
சேலம் ஆத்தூர் தென்னங்குடி பாளைய ஊராட்சி ஒன்றிய பள்ளி 8 ஆம் வகுப்பு மாணவன் செ. மனோ இந்தப்பயணத்தைப் பற்றி “இரண்டு இரவுகள், ஒரு பகல் என மொத்தம் 33 மணி நேரப் பயணம் சென்னையிலிருந்து புது டெல்லிக்கு! வழியெல்லாம் பல்வேறு செய்திகளையும், கடந்து செல்லும் மாநிலங்கள், ஊர்களின் சிறப்பையும் பகிர்ந்தபடி நடந்தது பயணம்.
பொது அறிவு விநாடி-வினா, கேள்வி-பதில் உரையாடல் என அறிவு கொளுத்தும் நிகழ்வுகளும் பயணத்தோடே நடந்தேறின. 27-ஆம் தேதி முழுவதும் பயணித்து 28-ஆம் தேதி காலையில் நிஜாமுதீன் நிலையத்தில் இறங்கிய எங்களை வரவேற்று அழைத்துச் செல்லவும் ஆள் வந்திருந்தார்கள்” என்று மகிழ்ந்தார்.
“இதுவரை பாடப்புத்தகத்தில் மட்டுமே நாங்கள் படித்திருந்த, தொலைக்காட்சிகளில் மட்டுமே பார்த்திருந்த இந்தியாவின் தலைநகருக்குள் முதல்முறையாக நுழைகிறோம் என்ற உணர்வால் பயணக் களைப்பே தெரியவில்லை. எங்களின் பயணத்திற்கென ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு குளுமை வாகனத்தில் தான் அடுத்த மூன்று நாட்கள் பயணமும். தொடர்வண்டி நிலையத்திலிருந்து ஜசோலாவில் உள்ள பெரியார் மய்யத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டோம்.
டெல்லியிலும் பெரியார் அறக்கட்டளைக்கு இத்தனை பெரிய மய்யம் அமைந்திருக்கும் என்பதை நாங்கள் எண்ணிப் பார்த்ததுகூட இல்லை. ஒவ்வொரு தளத்திற்கும், அறைக்கும் சூட்டப்பட்டிருந்த சமூகநீதித் தலைவர்களின் படங்களையும், அவர்தம் சிறப்பையும் தெரிந்துகொண்டோம்” என்று வியந்து கூறுகிறார் சேலம் செந்தாரப்பட்டி அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 11 ஆம் வகுப்பு பயிலும் எம். காயத்ரி.
விழுப்புரம் சின்னசேலத்திலுள்ள கச்சிராய-பாளையம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 11 ஆம் வகுப்பு பயிலும் இ. தாட்சாயிணி தொடர்ந்து விவரிக்கிறார். “டெல்லியில் முதல் நாள்… முகலாய மன்னர்களின் வரலாற்றைக் கற்றுக் கொடுத்தது.
இந்தியாவில் முகலாயர் ஆட்சியை நிறுவிய பாபரின் மகனும், டெல்லியை இழந்து பின் மீண்டும் போரிட்டு ஆட்சியைப் பிடித்த மன்னருமான ஹுமாயூனின் கல்லறைக்குச் சென்று இறங்கினோம். பாபர், ஹுமாயூன், அக்பர் என்றெல்லாம் பெயர்களை மட்டும் படித்த எங்களுக்கு அவர்கள் வாழ்ந்த,
அவர்களால் கட்டப்பட்ட கோட்டைகள், அரண்மனைகள், நினைவுச் சின்னங்கள் என்பனவற்றைப் பார்ப்பதும், அங்கே உலாவுவதும், வரலாற்றுக்குள் உலாவுவதான அலாதியான உணர்வை ஏற்படுத்தியது. ஒவ்வொரு கட்டடம் குறித்தும் ஏராளமான தகவல்களைத் தெரிந்துகொண்டபடி ஹுமாயூன் கல்லறையைப் பார்வையிட்டோம். பயணம் மிகவும் இனிமையாகவும், பயனுள்ளதாகவும் இருந்தது”.
அரக்கோணம் எஸ்.எம்.எஸ் விமல் மெட்ரிகுலேசன் மேல்நிலை பள்ளியில் 11 ஆம் வகுப்பு பயிலும் ஜெ. பைரோஸ் ஃபர்லின், “சிறப்பு அனுமதி பெற்று இந்திய நாடாளுமன்றத்துக்குள் நாங்கள் அழைத்துச் செல்லப்பட்டோம். வரவேற்பறையிலிருந்து நாடாளுமன்றத்தின் அமைப்பையும்,
சிறப்புகளையும் எடுத்துச் சொல்லி வழிநடத்திச் சென்றார் சிறப்பு வழிநடத்துனர். மக்களவை, மாநிலங்களவை, நாடாளுமன்ற கூட்டுக் கூட்டம் நடைபெறும் மய்ய மண்டபம் உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்துச் சென்று ஒவ்வொன்றின் சிறப்புகளும் எடுத்துரைக்கப்பட்டன.”
“இந்தியாவையே கட்டுப்படுத்தும் சட்டங்களும், நடைமுறைகளும் உருவாகும் நாடாளுமன்ற அமைப்பு, அது செயல்படும் விதம் ஆகியவற்றைக் குறித்த கேள்விகளைத் தொடுத்து விளக்கம் பெற்றோம். அங்க இருக்கிற காந்தி சிலைக்கு முன்னாடி தானே நம்ம எம்.பி.கள் எல்லாம் தர்ணா நடத்துவாங்க. அந்த இடத்தையும் பார்த்தோம்.” என்று நினைவு கொள்கிறார் அரியலூர் கோவிந்தபுரம் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் 11 ஆம் வகுப்பு பயிலும் த. பிச்சையம்மாள். அடடே!
“இந்திய நாடாளுமன்றத்துக்குள் போய்ப் பார்க்கப் போகிறோம் என்றதும், பெரிய மகிழ்ச்சி ஏற்பட்டுவிட்டது. பின்னே, எம்.பி. ஆகாமலே உள்ளே போகப் போறோம்ல…” என்று மகிழ்ந்தான் பட்டுக்கோட்டை சுக்கிரன்பட்டி பிருந்தாவன் மேல்நிலைப்பள்ளியில் 11 ஆம் வகுப்பு பயிலும் முனீஸ்வரன்.
“உள்ளே நுழையும் போதே பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காகன்னு சொல்லி, கேமரா, செல்போன் எதுவும் கொண்டுபோகக் கூடாதுன்னு சொல்லி வாங்கிவச்சுக்கிட்டாங்க… அதனால் தான் உள்ளே இருந்து போட்டோ எடுக்காம, உள்ளே போய் வந்த பிறகு வெளியில் நின்று புகைப்படம் எடுத்துக்கிட்டோம்” என்று சலித்துக் கொண்டான் வேலூர் காட்பாடியிலுள்ள அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11 ஆம் வகுப்பு பயிலும் குமார்.
அடுத்து, “புது தில்லியின் அடையாளங்களுள் ஒன்றான இந்தியா கேட் சென்றோம். பகல் வெளிச்சத்திலும், மாலை மங்கும் நேரம் ஒளி விளக்குகளால் மின்னிய நேரத்திலும் பார்த்து மகிழ்ந்தோம். ஒவ்வொரு ஆண்டும் குடியரசு நாளுக்கு டிவியில தான் பார்ப்போம்” என்று கூறி வியந்தனர் தஞ்சை மேரிமாதா பள்ளி மாணவி அபிநயாவும், சூளகிரி வேளாங்கண்ணி மெட்ரிக்பள்ளி மாணவி வி. சுரேகாவும்.
தாஜ்ஜ்ஜ்ஜ்!
தஞ்சாவூர் பனையக்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் 11 ஆம் வகுப்பு பயிலும் ரா. பிரவீன், ஆக்ரா பயணத்தை விவரிக்கிறார். “இரண்டாம் நாள் ஆக்ரா நோக்கி அதிகாலையி-லேயே கிளம்பினோம். டெல்லியிலிருந்து 250 கிமீ தொலைவில் உத்தரப் பிரதேசத்தில் அமைந்திருக்-கிறது ஆக்ரா. ஒரு காலத்தில் முகலாயர்களின் தலைநகரம். ஆக்ராவுக்குள் நுழையும் முன், நாங்கள் நுழைந்தது சிக்கந்தரா கோட்டைக்குள்!
இந்தியாவின் பெரும்பகுதியைக் கட்டி ஆண்ட பேரரசர் அக்பரின் கல்லறை அமைந்திருப்பது சிக்கந்தரா கோட்டையில் தான். சுற்றிலும் மதில் சுவர்கள், உயர்ந்து நிற்கும் வாயில்கள் இவற்றுடன் மான், மயில்களுடன் கூடிய காட்டுப் பகுதியையும் உள்ளடக்கியது இந்தக் கோட்டை. மொகலாய மன்னர்களின் கட்டடக் கலை நேர்த்தியையும், பொறியியல் அறிவையும் காட்டுவதாக இருந்தது. அக்கட்டடங்களின் சிறப்பை எடுத்து விளக்கினார் அங்கிருந்த வழிகாட்டி. அதே கோட்டையின் இன்னொரு பகுதியில் லோடி கல்லறை என்ற இடிந்த கட்டடமும் அமைந்திருக்கிறது. சிக்கந்தராவைத் தாண்டியதும் ஆக்ரா.“
“ஆக்ரா போகும் வழியிலேயே கட்டடங்-களுக்கும், மரங்களுக்கும் இடையில் அவ்வப்போது காட்சியளித்தது யமுனை நதிக்கரையில் உலகம் வியக்க அமைக்கப்பட்டிருக்கும் தாஜ்மஹால். அதைச் சுற்றியிருக்கும் பரந்த நிலப்பரப்பின் தெற்கு வாயில் வழி உள் நுழைந்து, பேட்டரி வாகனத்தின் உதவியுடன்,
தாஜ் மஹால் வளாகத்திற்குச் சென்றோம் ஒலி வழிகாட்டிக் கருவியின் உதவியுடன், தாஜ் மஹாலின் சிறப்புகளைத் தெரிந்துகொண்டே, விழிகள் விரிய தாஜ்மஹாலைக் கண்டு களித்தோம். எத்தனை வியப்பு! எத்தனை குதூகலம் – உள்ளுக்குள்! ஒளிப்படங்களாக எடுத்துத் தள்ளினோம். ஏராளமான தகவல்களைக் கேட்டுத் தெரிந்துகொண்டோம்.” என்கிறார் வேதாரண்யம் ஆயக்காரன்புலம் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 11 ஆம் வகுப்பு படிக்கும் வீ. அபர்ணா, வியப்பால் விழிகள் விரிய!
அய்… பிளைட்டு!
எல்லாம் முடிந்து கடைசி நாள் விமானத்தில் சென்னை திரும்புகிறோம். அன்னாந்து பார்த்ததுதான், அருகில் கூடப் போனதில்லை.
ஆனால் இன்று அதில் பயணம். நினைக்கவே குளிர்ச்சி. செப்டம்பர் 30 அன்று மாலை ஏர்இந்தியா விமானம் காத்திருந்தது பிஞ்சுகளுக்காக! “பிளைட் ஏறும் போது கையைக் காட்டிக்கிட்டே ஏறுவாரே மோடி, அது மாதிரிதான் நாமும் ஏறுவோமா” என்று கேட்டார்கள். அதெல்லாம் போஸ் கொடுக்கிறதுக்கு மட்டும்தான், இப்போ விமானநிலையக் கட்டடத்திலிருந்து நேரே விமானத்துக்குள்ள போற மாதிரி வசதி பண்ணிட்டாங்க” என்று விளக்கம் தர வேண்டியிருந்தது அவர்களுக்கு! மூன்றரை அணிநேரப் பயணத்தில் இந்தியாவையே ஆகாயத்தில் அளந்தபடி வந்திறங்கினர் சென்னைக்கு!
ஊடகங்களிடம் வியப்பு விலகாமல் உரையாடினர் பெரியார் 1000 வெற்றியாளர்கள். கிடைத்தற்கரிய இந்த வாய்ப்பைத் தங்களுக்கு வழங்கிய பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்துக்கும், பெரியார் பிஞ்சு இதழுக்கும் நன்றி மாரி பொழிந்தனர். தந்தை பெரியாரை நன்றியோடு நினைவு கூர்ந்தார்கள். பெரியாரைப் பிஞ்சுகள் வரைக்கும் கொண்டு சேர்த்துள்ள பெரியார் மணியம்மை பல்கலைக்கழக வேந்தர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு நன்றியை உரித்தாக்கினார்கள் பெற்றோரும், உற்றாரும்! காலத்துக்கும் மறக்காத நினைவுகளோடு, பெரியார் 1000 வெற்றியாளர்கள் ஊர் திரும்பினர்… பள்ளியும், நண்பர்களும் காத்திருக்கின்றனர் இவர்களின் வெற்றிப் பயணக் கதை கேட்க!