யாரென்று தெரிகிறதா?
துப்புரவுத் தொழிலாளியின் மகன் உருவாக்கிய பால்பாயிண்ட் பேனாதான் இன்று உலகம் முழுவதும் பயன்படுகிறது.
இன்று 99விழுக்காடு மக்கள் பயன்படுத்தும் பால்பாயிண்ட் பேனாவை உருவாக்கிய ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த லாஸ்லோ பீரோவின் தந்தை புடாபெஸ்ட் நகரில் சாலைகளை தூய்மைப்படுத்தும் பணியைச் செய்து வந்தார். இவருக்கு இரண்டு மகன்கள் மூத்தவர் (Laszlo Biro) லாஸ்லோ பீரோ, இளையவர் கிரோகி பீரோ. இருவருமே ஆரம்பக் கல்விக்குப் பிறகு புடாபெஸ்ட் நகரில் சாலைகளில் செய்திதாள்களை விற்கும் சிறுவர்களாக தங்களது வாழ்க்கையைத் துவக்கினர்.
லாஸ்லோ பைரோ தன்னுடைய 20-ஆம் வயதில் நாளிதழ் அலுவலகம் ஒன்றில் தூய்மைப் பணியாளராகச் சேர்ந்தார். தன்னுடைய வேலை நேரம் போக மற்ற நேரங்களில் அந்த அலுவலகத்தில் இருக்கும் எழுதுபொருட்களை பழுதுபார்க்கும் வேலையும் செய்ய ஆரம்பித்தார். அப்போது மை ஊற்றி எழுதும் எழுத்துகள் காகிதத்தில் ஊறிவிடும், ஆனால் அச்சில் வார்க்கும் எழுத்துக்கள் பத்திரிகையில் தெளிவாக இருப்பதைக் கண்டு அச்சில் வார்க்கும் மையை பேனாவில் ஊற்றி எழுதிப்பார்த்தார். அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது,
இவரது சகோதரர் கிரோகி பீரோ புடாபெஸ்டில் உள்ள வேதியல் பேராசிரியரிடம் உதவியாளராக பணியாற்றிவந்தார். இதனால் இவர் தன்னுடைய சகோதரனிடம் தன்னுடைய முயற்சி பற்றி கூறி உதவி கேட்டார். இருவரும் இணைந்து நீண்ட ஆய்விற்குப்பிறகு எளிதில் காய்ந்து போகாத மையை உருவாக்கி அதை தாங்களே தயாரித்த உருளை முனையுள்ள ஒரு சிறிய எழுதுகோலில் ஊற்றி எழுதிப்பார்த்தார்கள்.
அது வெற்றிகரமாக முதல் பால்பாயிண்ட் பேனாவாக உருவானது, தாங்கள் கண்டுபிடித்த பால்பாயிண்ட் பேனாவை முதல் முறையாக பாரீசில் புதிய கண்டுபிடிப்பாளர்கள் காட்சியகத்தில் வைத்தனர். இந்த கண்டுபிடிப்பிற்கான காப்புரிமையையும் பெற்றனர். ஆனால் அய்ரோப்பாவில் உள்ள பெரும் பேனா நிறுவனங்கள் இவர்களின் கண்டுபிடிப்பு விற்பனைக்கு வந்தால் தங்கள் வணிகம் பாதிக்கும் என்று எண்ணி சகோதரர்களுக்கு வரும் அனைத்து பொருளாதார வாய்ப்புகளையும் தடைசெய்தன.
சில ஆண்டுகள் கடுமையான வறுமையில் வாடிய இரண்டு சகோதர்களும் தங்களது குடும்பத்துடன் தென் அமெரிக்க நாடான அர்ஜென்டினா சென்று அங்கே கூலித்தொழில் செய்ய ஆரம்பித்தனர். இருப்பினும் தங்களின் புதிய கண்டுபிடிப்பான பால்பாயிண்ட் பேனாவை மேலும் நவீனப்-படுத்துவதை விட்டு விடவில்லை.
1945-ஆம் ஆண்டு அர்ஜென்டினா அரசு இவர்களின் கண்டுபிடிப்பை ஊக்கப்படுத்தி 3500 மதிப்புள்ள அர்ஜென்டினா பிஸ்ஸோ (இந்திய ரூபாயில் ஒருலட்சத்து அய்ம்பதாயிரம்) வழங்கியது, இப்பணத்தைக் கொண்டு அவர்கள் சிறிய தொழிற்கூடம் ஒன்றை நிறுவி பால்பாயிண்ட் பேனாக்களை தயாரிக்கத் தொடங்கினர்.
இவர்களின் புதிய ரக பேனாவை பார்வையிட்ட இங்கிலாந்து விமான நிறுவனம் முதல்முதலாக தங்களுக்கு என்று இங்கிலாந்து விமான நிறுவன சின்னம் பொறித்த பேனாவைத் தயாரிக்கும் ஒப்பந்தம் செய்துகொண்டது, இதைத் தொடர்ந்து உலகின் பல நிறுவனங்கள் பால்பாயிண்ட் பேனாவை தயாரிக்கும் உரிமத்தை பீரோ சகோதரர்களிடமிருந்து பெற்றன, லாஸ்லோ பீரோவின் பிறந்த நாளை (செப்டம்பர் 29) அர்ஜெண்டினா நாடு புதிய கண்டுபிடிப்பாளர் நாளாக கொண்டாடி வருகிறது.