பேசாதன பேசினால் 2
கோடை விடுமுறையை மகிழ்ச்சியாகக் கழிக்க பரபரப்பான சென்னை நகரத்திலிருந்து பசுமையான கிராமத்துக்குப் போயிருந்தான் சிறுவன் மாணிக்கம். தாத்தா, பாட்டி, மாமா, அத்தை என எல்லோரும் மாணிக்கத்தை சிறப்பாக கவனித்துக் கொண்டார்கள்.
ஒவ்வொரு நாளும் மாணிக்கத்துக்கு விருந்துதான். நாள்தோறும் சின்ன டப்பாவில் வேகவேகமாக சமைத்த உணவை அடைத்து எடுத்துக் கொண்டு பள்ளிக்கு நேரமாகிவிட்டது என்று ஓடும் அவசரம் அங்கே இல்லை.
ஒவ்வொரு நாளும் பொறுமையாக உறவினர் அனைவரோடும் அமர்ந்து சாப்பிடும் வாய்ப்பு.
ஒரு நாள் மதியம் அத்தை உணவு பரிமாற, தாத்தா பாட்டிக்கு நடுவில் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தான் மாணிக்கம். முதல்முறை வாங்கிய சோற்றை சாப்பிட்டு முடித்துவிட்டு, இரண்டாவதாக கொஞ்சம் சோறு வாங்கிக் கொண்டான். அதற்கு ரசம் கேட்டான். அத்தையும் ஊற்றினார்கள். அப்படி ஊற்றிய ரசத்தில் கறிவேப்பிலையும் கலந்து மாணிக்கத்தின் தட்டில் விழுந்தது.
மாணிக்கத்துக்கு கறிவேப்பிலையைப் பார்த்தாலே பிடிக்காது. இலை தழையெல்லாம் எதற்காக இந்த ரசத்தில் போட்டிருக்கிறார்கள் என்று மனதில் நினைத்தபடி அதை எடுத்து வெளியில் போட்டான். அதைப் பார்த்துக் கொண்டிருந்த பாட்டி… “என்னப்பா மாணிக்கம் ஏன் உனக்கு கறிவேப்பிலை பிடிக்காதா?’’ என்று கேட்க… “அய்யய்யே… அதைப் பார்த்தாலே பிடிக்காது பாட்டி’’ என்றான் மாணிக்கம்.
“அது எவ்வளவு சத்தானது தெரியுமா? அதோட மகத்துவம் தெரியாம டக்குன்னு தூக்கிப் போட்டுட்டியே… மனிதர்கள்ல சில பேர் தன் தேவைக்காக சிலரை பயன்படுத்திக்கிட்டு கழட்டி விடுறமாதிரி… இந்த கருவேப்பிலையை தூக்கிப் போட்டுட்டியே… அது எவ்வளவு வருத்தப்படும்’’ என்றார் பக்கத்தில் இருந்த தாத்தா…
“புடிக்காத இந்த கறிவேப்பிலையை தின்னா நான்தான் வருத்தப்படணும். அது எதுக்கு வருத்தப்படப் போகுது தாத்தா’’ என்று பேசிக்கொண்டே சாப்பிட்டு முடித்துவிட்டான் மாணிக்கம்.
சற்று நேரத்தில் அத்தை பிள்ளைகள், பக்கத்து வீட்டில் உள்ள பிள்ளைகளோடு ஓடி ஒளிந்து கொள்ளும் விளையாட்டு விளையாடப் போனான். கொல்லைப்புறத்தில் இருந்த வாழை மரங்களின் பின்னால் ஒளிந்து கொண்டான்.
அந்த இடம் வீட்டில் பயன்படுத்தும் தண்ணீர், மரங்களுக்கெல்லாம் பாயட்டும் என சின்ன கால்வாய் வெட்டப்பட்டு அழுக்கு நீர் ஓடும் வழி.
தன்னை யாரும் கண்டுபிடிக்க முடியாதபடி பதுங்கி ஒளிந்திருந்த மாணிக்கத்தை “உஸ்… உஸ்…’’ என யாரோ அழைப்பது போல் குரல் கேட்டது. சுற்றுமுற்றும் பார்த்தான் மாணிக்கம்.
“தம்பி! இங்கே… கீழே கொஞ்சம் பாருங்க நான்தான் கறிவேப்பிலை பேசுறேன்!’’ என்று குரல் கேட்டது. மாணிக்கம் தான் ஒளிந்திருந்த இடத்தின் கீழே பார்த்தான்.
அழுக்கு நீர் போகும் அந்தக் கால்வாயில் தான் சாப்பிடும்போது தூக்கிப்போட்ட கறிவேப்பிலை, தட்டு கழுவிய தண்ணீரில் மிதந்து வந்து அங்கே இருப்பதைப் பார்த்தான்.
“தம்பி! தாத்தா, பாட்டி சொல்லியும் என்னை சாப்பிடாம தூக்கிப் போட்டுட்டிங்களே… நான் எவ்வளவு சிறப்பான மூலிகை தெரியுமா?’’
மாணிக்கம் கறிவேப்பிலை பேசுவதை ஆச்சரியத்துடன் கேட்டான். “தம்பி! அதிகமான மருத்துவ குணம் நிறைஞ்ச மூலிகை நான்தான். அதைப்பத்தி தெரிஞ்சுக்காம பலபேரு உணவிருல சேர்த்துக்கிட்டாலும் பரிமாறியதும் முதல் வேலையா என்னைத் தூக்கி எறிஞ்சுடுவாங்க.’’
“சும்மா… உன்னை வாசனைக்காகத்தான் சேத்துக்கிறாங்கன்னு நெனைச்சுதான், நான் உன்னைத் தூக்கிப் போட்டேன்’’ என்றான் மாணிக்கம்.
“நிறைய பேரு இப்படித்தான் தப்பா நினைக்கிறாங்க. உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தர்றதிலே எனக்கு இணையா யாருமே இல்லே. உடம்புக்கு பல வகையிலேயும் நன்மை செய்யிறேங்கிற உண்மை புரியாமத்தான் இப்படி தூக்கி எறிஞ்சுடுறாங்க. அதை நெனச்சாலே கண்ணீர் வருது.’’
“அப்படி என்ன நன்மை?’’ என மாணிக்கம் கேட்டான்.
“எங்கிட்ட உள்ள இரும்புச் சத்து உடம்பு சீக்கிரமா ஏத்துக்கிற தன்மை கொண்டது. இது ரத்தச் சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும்.
நான் இன்சுலின் செயல்பாட்டை தூண்டிவிட்டு ரத்தத்தில சர்க்கரையின் அளவை சீராக்குற வேலையை சுலபமா செய்வேன்.
ரத்தத்திலே உள்ள கெட்ட கொழுப்போட(LDL) அளவைக் கட்டுப்படுத்துறதோட நல்ல கொழுப்பின் (HDL) அளவையும் அதிகமாக்குவேன்’’ என்றது கறிவேப்பிலை.
“அடடே! அப்ப உன்னை சர்க்கரை நோயாளிங்க சாப்பிட்டா ரொம்ப நல்லதுன்னு சொல்லு’’ என்றான் மாணிக்கம்.
“நீ சொன்ன நீரிழிவு நோயாளிங்க மட்டுமில்லே. இதய நோயளிகளும் உணவிலே சேர்த்துக்கணும். என்னை சாப்பிட்டா… எங்கிட்ட உள்ள நார்ச்சத்து உணவை நல்லபடியா செரிக்கச் செய்யுது. தேவையற்றக் கொழுப்பை சேர விடாம செய்யுது. வயித்துப் போக்கு நேரத்திலே கறிவேப்பிலையான என்னை சாப்பிட்டா சீக்கிரமா குணமாயிடும்.’’
“ஆகா! இதெல்லாம் இதுவரையிலே தெரியலே. இப்ப… நீ விளக்கமா சொன்ன பிறகுதான் புரியுது.’’ என வியந்தபடி சொன்னான் மாணிக்கம்.
“இன்னும் இருக்கு… எங்கிட்ட இருக்கிற வைட்டமின் ‘ஏ’, ‘சி’-_யோட கூட்டுக் கலவையான கேம்ஃபெரால் என்கிற ஃப்ளேவனாய்டு உடம்புக்கு பலவிதமான நன்மையைத் தரும்.
அதாவது குறிப்பா பாக்டீரியா பூஞ்சைத் தொற்றுகளை எதிர்த்து செயல்படும். சளி இளக்கியாகவும் செயல்படும். இந்த தன்மை கறிவேப்பிலையான எங்கிட்ட அதிகமாக இருக்கு…
மதுப் பழக்கத்துக்கு ஆளானவங்களுக்கு முதல்ல பாதிக்கப்படுறது கல்லீரல்தான். அதைக்கூட இந்த கேம்ஃபெரால் பாதுகாக்குது. பலப்படுத்துது. இம்… இதெல்லாம் தெரிஞ்சுக்காம தூக்கி எறிஞ்சிடுறப்பதான் ரொம்ப வருத்தமா இருக்குது.’’
“தலையில இருக்கிற முடியெ அழகுபடுத்துற மனிதர்கள் அது கீழே விழுந்துட்டா… கேவலமா நினைக்கிற மாதிரி… உன்னை நான் தப்பா நினைச்சு தூக்கிப் போட்டுட்டேன். என்னை மன்னிச்சுடு’’ என்று பரிதாபமாகப் பேசினான் மாணிக்கம்.
“தலை முடின்னு நீ சொன்னதும்தான் எனக்கு ஞாபகத்துக்கு வந்துது. நான் தலைமுடி அடர்த்தியா வளரவும், நரை முடி வராமல் தடுக்கவும் செய்வேன். அதனால என்னை தினமும் சாப்பிடலாம்…’’ என்றது கறிவேப்பிலை. “எங்க அம்மா கூட உன்னை பொடி… துவையல்… குழம்புன்னு விதவிதமா செய்வாங்க… ஆனா நான்தான் உன் அருமை தெரியாம உன்னை ஒதுக்கி ஓரங்கட்டிட்டேன்.’’
“சமுதாய நலனுக்காக தன்னலம் பாராமல் உழைக்கிறவங்கள மதிக்காதது மாதிரிதான் இதுவும். இனிமேலாவது என்னை ஒதுக்காம சாப்பிடப் பழகு’’ என்றது கறிவேப்பிலை.
“கவலைப்படாதே! இனிமே உன்னை கட்டாயம் சாப்பிடுறேன். கட்டாயம் சாப்பிடுறேன்’’ என்றான் மாணிக்கம்.
“டேய்! மாணிக்கம் என்ன ஆச்சு? பகல்லே படுத்துத் தூங்கிட்டு உளர்றே’’ என்றபடி தாத்தா எழுப்பினார்.
மதிய உணவு முடித்த மாணிக்கம் சற்று கண் அயர்ந்து தூங்கியபோது கண்ட கனவில்தான் கறிவேப்பிலை இப்படி பேசியிருக்கிறது! பேசாத கறிவேப்பிலையின் குரல் நியாயமானதுதானே!