உலகம் சுற்றி-3
கற்பனை உலகம்!
உலகிலேயே மிகவும் விரைவாகச் செல்லக் கூடியது எது? சொல்லுங்கள் பார்க்கலாம். சூரிய ஒளி நம்மை வந்தடைய 8 மணித்துளிகள் ஆகின்றன. நாம் பார்க்கும் மிகவும் அருகிலே உள்ள விண்மீனின் ஒளி அங்கிருந்து எப்போது கிளம்பியது தெரியுமா? 4 ஆண்டுகளுக்கு முன்பு. மிகவும் விரைவில் 10000 மைல் தொலைவில் உள்ள அமெரிக்காவிலிருந்து உங்கள் புன்னகையைப் பார்க்க உடனே முடியும் என்றால், அதுதான் கற்பனை!
அந்தக் கற்பனைதான் வால்ட் டிஸ்னியின் மூலதனம். அதை வைத்துத்தான் குழந்தைகளை மகிழ்வித்தார். வயதானவர்களையும் குழந்தைகளாக்கினார்! அதன் வெளிப்பாடுதான் கற்பனை உலகம். எப்போதும் கூட்டம் நிரம்பி வழியும், ஆகவே எல்லாவற்றையும் பார்த்துவிட முடியாது. சிலவற்றைப் பார்ப்போம். கற்பனை உலகின் நுழைவாயிலில் உள்ளதுதான் அழகுமிக்க சின்டிரல்லா கோட்டை. 189 அடி உயரம். மில்லியன் இத்தாலி கண்ணாடிகள் 500 வண்ணங்களில் உள்ளிட்டவையும் பதிக்கப்பட்டுள்ளன.
வெள்ளி, தங்கம் அடங்கும். அதிலே ஓர் உணவுக் கூடம் உள்ளது. சிறப்பு விருந்தினர் தங்கும் அறைகளும் உள்ளன! அந்தக் கோட்டையின் முன்தான் ஆடல் பாடல்கள், நடனங்கள் எல்லாம் நடக்கும். இரவிலே வண்ணக் கலவைகளினால் ஆன ஒளி நாட்டியம், அந்தக் கோட்டையை பல வண்ணங்களில் மிக்க அழகுடன் காண்பிக்கும். பின்னர் மிகச் சிறப்பான வாண வேடிக்கையும் நடக்கும். அய்க்கிய நாட்டின் குழந்தைகள் விழாவிற்காக 1964லே அதனை உண்டாக்கினார். அது இன்றும் பெரிதாக இருக்கின்றது. வரிசையில் நின்று படகிலே 16 பேர் போல அமர வேண்டும். தண்ணீர் இருந்தாலும் படகு ஒரு தண்டவாளத்தின் மீதுதான் போகும், ஆனால் நமக்கு மிதப்பது போலத் தோன்றும்.
ஓர் அழகிய கட்டடம் சின்ன உலகமாக மாறிவிடும். கிளம்பிய உடனே மிகவும் இனிமையான _ அழகானப் பாடல் ஒன்று கேட்டுக் கொண்டேயிருக்கும். ‘இது ஒரு மிகச் சிறிய உலகந்தானே, இது ஒரு மிகச் சிறிய உலகந்தானே’ It is a small world after all என்ற பாடல். உலகெங்கும் பல நாட்டினர் ஆடும், பாடும் பொம்மைகளாக அந்தந்த நாட்டின் சிறப்பான உடைகளுடன், அந்தந்த இடங்களிலே ஆடிக் கொண்டும் பாடிக்கொண்டும் இருப்பார்கள். அவர்களின் உடை, நகை, குல்லாய், மூக்கு, கண், உதடு என்று எல்லாம் அப்படியே அந்தந்த நாட்டுடையதாக இருக்கும்.
இந்தியாவின் தாஜ்மகால் முன் அழகிய பெண்கள் அந்த நீர்த் தேக்கத்தின் இருபுறமும் அழகிய உடை, நகைகளுடன் ஆடுவார்கள். மெக்சிகோ, சீனா, இங்கிலாந்து, அராபிக், பிரான்சு, சப்பான், ஹவாயி போன்று அப்படியே அந்தந்த நாட்டு இசையுடன் அவர்கள் ஆடுவதும் பாடுவதும் நம்மைக் கவர்ந்து விடும்.
அய்ந்து மணித்துளிகளில் உலகைப் பார்த்துக் கீழே இறங்கும்போது அனைவரும் முணுமுணுப்பது ‘இது ஒரு மிகச் சிறிய உலகந்தானே’ என்ற பாடல் தான். இரண்டாவது முறையும் பலரும் சென்று பார்ப்பதுதான் வழக்கம். 50 ஆண்டுகள் கழித்தும் இன்னமும் அது சிறப்பாக ஓடிக்கொண்டுள்ளதை வியக்காமல் இருக்க முடியுமா?
டிஸ்னியின் பல சிறப்பான கதைகள் திரைப்-படங்களாகவும், புத்தகங்களாகவும் வலம் வந்துள்ளன. அதில் சிறப்பாக சின்டிரல்லா, வின்னி கரடி, கூஃபி, ஸ்னோ ஒயிட்டும் ஏழு குள்ளர்களும், டம்போ யானை இவையெல்லாம் வெவ்வேறு விதமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளன. டம்போ யானை பறக்கக் கூடியது. ஆகவே ஒரு பறக்கும் ஊஞ்சல் மாதிரி அதில் ஏறி சவாரி செய்வோம்.
பல தேனீர் கோப்பைகள் இருக்கும். அதன் உள்ளே அமர்ந்து கொள்ளலாம். அது வேகமாகச் சுழலும்! உள்ளே நாம் அங்குள்ள சக்கரத்தைச் சுற்றினால் இன்னும் வேகமாகக் கன்னாபின்னாவென்று சுழலும். மக்கள் போடும் கூச்சல் காதைப் பிளக்கும்!
ஸ்னோ ஒயிட்டும், ஏழு குள்ளர்களும் வேலை செய்யும் சுரங்கத்தைப் பார்க்க ஒரு ரயில் பயணம். அந்த ரயில் குலுங்கி குலுங்கிச் செல்லும். மலை மேலிருந்து விரைவாகக் கீழே விழும்!
நம்ம ஊர் குதிரை ராட்டினந்தான். ஆனால் 90 குதிரைகள் வெவ்வேறு முறையில் இருக்கும். இரண்டு குதிரைகள் ஒரே மாதிரி இருக்காது. அதில் கிழவர்கள் கூடப் பெருமையாகச் சவாரி செய்வார்கள்.
கடலுக்கடியில் செல்வது போல மீன் போன்ற கடற்கன்னி நம்மை அழைத்துக் கடல் உலகைக் காண்பிப்பார். வின்னி கரடி அங்கே பலவற்றைச் செய்து நம்மை மகிழ்விக்கும் காட்சி, பீட்டர் பேன் உலகம் என்று அனைத்துக் கற்பனைகளும் உயிர் பெற்று நம் முன்னே வந்து மகிழ்விப்பார்கள். ஆங்காங்கே சின்டிரெல்லா, வின்னி, டம்போ இவர்களுடன் நின்று படம் எடுத்துக் கொள்ளலாம்.
எல்லாமே மிகவும் தூய்மையாக இருக்கும்; முக்கியமாகக் கழிப்பறைகள் தூய்மையாக இருக்கும். ஒரு சிறு தூசி கூடப் பார்க்க முடியாது. உணவும் விதம் விதமாக இருக்கும். காசைக் கணக்குப் பார்க்காமல் உண்ண வைத்து விடுவார்கள். இங்கிருந்து போக வேண்டுமா? ஏன் என்று குழந்தைகள் கேட்பார்கள். பிரியாவிடை பெற்றுக் கிளம்ப வேண்டியதுதான். அடுத்த உலகம் பார்க்க வேண்டுமல்லவா?
*வாண வேடிக்கை என்பதே சரி. வான வேடிக்கை அல்ல. வாணம் என்பது இப்போது பயன்படும் ராக்கெட் பட்டாசு போன்றதாகும்.