பிரபஞ்ச ரகசியம் 40
அணுக்களின் உட்பகுதியில் இருந்து வெளிவர ஏற்பட்ட போராட்டத்தில் போட்டான்கள் பெரும்பாலான சக்தியை இழந்துவிடும், இதன் காரணமாக 80 விழுக்காடு சக்தியை இழந்து வெளியேறுகிறது, இந்த நிலையில் போட்டான் துகள் முழுமையாக விடுபட்டு எந்த ஒரு தடையுமில்லாத பாதையில் பயணிக்கிறது. இதன் காரணமாக போட்டான்களின் ஒளிவளையம் ஏற்படுகிறது, இந்தப் பகுதியை அறிவியலாளர்கள் சூரிய ஒளிவளையம் என்றே பெயர் வைத்துள்ளனர்.
இங்கு செறிவு குறைந்த போட்டான்கள் அதிவேகமாக சூரியனைவிட்டு வெளியேற வெளிப்புறம் நோக்கி பயணிக்கிறது. இதனால் அங்கு ஒளிச்சிதறல்கள் ஏற்படுகின்றன. சூரியனின் வெளிப்பகுதியில் ஏற்படும் சூரியப் பள்ளம், காந்தப்புயல் மற்றும் வெப்ப அலைகள் ஊடாக போட்டான்கள் சூரியனை விட்டு வெளியேறி விண்வெளியில் பயணிக்கின்றன.
மய்யத்தில் இருந்து சூரியனைவிட்டு வெளியே வர லட்சக்கணக்கான ஆண்டுகள் போராடிய போட்டான்கள், சூரியனின் வெளிப்புறத்தில் இருந்து பூமியை நோக்கி வர வெறும் 8 நிமிடங்கள் எடுத்துக் கொள்கின்றன. நீங்கள் காணும் சூரியன் 8 நிமிடஙளுக்கு முன்பு இருந்த சூரியன் ஆகும்.
நமது சூரியனில் இருந்து புறப்பட்ட போட்டான்கள் 20 நிமிடங்களுக்குள் நமது சூரிய குடும்பத்தை விட்டு வெளியேறி விடுகின்றன. இதே வினைதான் அனைத்து விண்மீன்களிலும் நிகழும் என்று சொல்வதற்கில்லை, காரணம் நமது சூரியன் சிவப்புக் குள்ளன் வகையைச் சேர்ந்த சிறிய விண்மீன் வகையைச் சேர்ந்ததாகும், சிவப்பு பூதம் எனப்படும் ரெட்ஜயண்ட் விண்மீன்கள் சூரியனைப் போன்று ஆயிரக்கணக்கான மடங்கு பெரியவையாக உள்ளன.
இங்கு நமது சூரியனில் உள்ள 9 அடுக்குகளை விட பல அடுக்குகள் உள்ளன. இந்த அடுக்குகளைக் கடந்து போட்டான்கள் வெளிவர கோடிக்கணக்கான ஆண்டுகள் ஆகிவிடுகின்றன. போட்டான் துகள்கள் ஒளியைக் நமக்குக் கொண்டுவருகின்றன. நாம் காணும் ஒளியும் ஒரு துகள் தான். இந்த போட்டான் துகள்களைக் கொண்டுதான் சூரிய ஒளிமின்சாரம் தயாரிக்கப்படுகிறது.
சூரிய ஒளிமின்சாரம் என்று தற்போது பலர் பேசுவதை நீங்கள் கேட்டிருப்பீர்கள். சுற்றுப்புறச்சூழலுக்கு தீங்கற்ற சூரியஒளி மின்சாரத்தை போட்டான்கள் தான் நமக்குத் தருகின்றன. சூரிய ஒளியில் உள்ள போட்டான்கள் சிலிகான் பூச்சு பூசப்பட்ட அலுமினியத் தகடுகள் மீது மோதுகின்றன. அப்போது போட்டான்கள் சிலிக்கான் பூச்சுகளால் விரைவாக உட்கவரப்படுகின்றன.
அவ்வாறு உட்செல்லும் போட்டான்கள் அணுக்களில் உள்ள எலக்ட்ரான்கள் மீது மோதுகின்றன. இவ்வாறு மோதும் எலக்ட்ரான்கள் ஒரே திசையில் நகரும் படி சூரிய மின்சாரம் தயாரிக்கும் கருவிகள் அமைக்கப்பட்டுள்ளன.
ஒரு பகுதியில் நேர் மின்னோட்டம் பெற்ற எலக்ட்ரான்களில் இருந்து மின்சாரம் பெறப்படுகிறது, இவ்வாறு எண்ணற்ற போட்டான்கள் தொடர்ந்து சூரிய தகடுகளின் மீது மோதுவதால் நமக்குத் தேவையான மின்சாரம் உற்படுத்தி செய்யப்படுகிறது, இவ்வாறு சூரிய ஒளித்தகடுகளை நமது வீட்டின் கூரைகளில் அமைத்து நாமும் மின்சாரம் தயாரிக்க முடியும், இதற்காக அரசுகள் நிதியுதவி செய்கின்றன.
பகலில் சூரிய ஒளி வீசும்போது தயாரிக்கப்படும் மின்சாரம் நமது வீட்டு மின்பொருளின் பயன்பாட்டிற்குப் போக மீதி மின்கலத்தில் (பேட்டரி) சேமிக்கப்படுகிறது, இவ்வாறு சேமிக்கப்படும் மின்சாரத்தை நாம் இரவில் பயன்படுத்துகிறோம். தற்போது எல்.இ.டி என்னும் சிறியவகை மின்குமிழ்கள்(விளக்குகள்) மிகவும் குறைந்த அளவு மின்சாரத்திலும் அதிக அளவு ஒளியைத் தருகின்றன.
ஆகவே அதிக மின்சாரம் தேவைப்படும் குண்டுபல்ப், டுயூப் லைட், மற்றும் புளுரண்ட் விளக்குகளுக்குப் பதிலாக எல்.இ.டி விளக்குகள் சூரிய ஒளி மூலம் அதிகம் பிரகாசமாக எரிந்து நமது வீட்டை பகல்போல ஒளிமயமாக்கிவிடும்.
வருங்காலத்தில் வீட்டின் மாடியில் போடப்படும் ஓடுகள் மற்றும் பதிக்கப்படும் டைல்ஸ்களில் போட்டான்களை கவர்ந்து அதை மின்சக்தியாக மாற்றும் ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. சகாரா பாலைவன (ஆப்பிரிக்கா) நாடுகளில் இவ்வகை ஓடுகள் மற்றும் தகடுகள் சோதனை முறையில் பரிசோதனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்தச் சோதனை வெற்றிபெறும் பட்சத்தில் 2020ஆம் ஆண்டிற்குள் வீடு கட்டும் போது சூரிய ஒளிபடும் அனைத்து வெளிப்புறப்பகுதிகளும் மின்சாரம் தயாரித்து நமக்கு தேவையான மின்சாரத்தை தந்துகொண்டு இருக்கும்.
சூரியக் கருவில் இருந்து புறப்பட்ட ஒரு போட்டான் லட்சக்கணக்கான ஆண்டுகள் பயணித்து பூமியில் உயிர்களை வாழவைத்துக் கொண்டிருக்கிறது, அதே போட்டான்களை மனிதன் தன் அறிவாற்றல் மூலம் மின்சாரம் தயாரிக்கவும் பயன்படுத்தத் துவங்கிவிட்டான்.